‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (Cockroach Janata Party) என்றால் என்ன? அதன் போக்கும் நோக்கும்!* – *தஞ்சை டோமி*
‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்பது இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத அல்லது தேர்தல் அரசியலில் ஈடுபடும் அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியாக உருவாகாத ஓர் இயக்கம். இது வேலையில்லா திண்டாட்டம், முறைகேடான தேர்வுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற இளைஞர்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி சமூக வலைதளங்களில் எழுந்துள்ள ஒரு எதிர்ப்பியக்கம் (Gen-Z protest movement) ஆகும்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ( CJP) ‘ கரப்பான் பூச்சி மக்கள் கட்சி ‘என்பது ஆம் ஆத்மி கட்சியில் முன்பு பணியாற்றிய அரசியல் தொடர்பு உத்தியாளரான அபிஜீத் திப்கே என்பவரால் 16 மே 2026 அன்று நிறுவப்பட்ட ஒரு இயக்கம். இந்திய தலைமை நீதிபதி சூரிய காந்த் மே 15, 2026 அன்று சில ஆர்வலர்களையும் வேலையில்லாத இளைஞர்களையும் “கரப்பான் பூக்கள்” மற்றும் “சமூகத்தின் ஒட்டுண்ணிகள்” என்று அழைத்த கருத்து இது உடனடி தேசிய சீற்றத்தைத் தூண்டியது, இக்கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இவ்வியக்கம் உருவாக்கப்பட்டது. 30 வயதான பாஸ்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியான அபிஜீத் திப்கே யால் உருவாக்கப்பட்ட இந்த ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’, வேலைவாய்ப்பின்மையால் விரக்தியடைந்த இளைஞர்களின் ஆதரவைப் பெறுகிறது.

திப்கே அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். தலைமை நீதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் ஒரு கேலி இணையதளத்தை உருவாக்கினார். அதை இந்தியாவின் “சோம்பேறிகள், வேலையில்லாதவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களுக்கான” ஓர் இல்லமாகவும், “பாரம்பரிய அரசியலால் புறக்கணிக்கப்பட்டதாக உணரும் லட்சக்கணக்கான இளம் இந்தியர்களின்” குரலாகவும் சித்தரித்தார். இவ்வியக்கம் நிறுவப்பட்ட சில நாட்களுக்குள், இந்த இயக்கம் 350,000 க்கும் மேற்பட்ட பதிவுகளையும் இன்ஸ்டாகிராமில் 22 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும் பெற்றது.
உலகின் மிக இளமையான மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அபிஜீத் திப்கே தன் கட்சியின் இணையதளப் பிரபலத்தை களத்தில் அரசியல் ஆதரவாக மாற்ற முடியுமா என்பதற்கான ஒரு ஆரம்பகட்ட சோதனையாக அவரது இந்திய வருகையும் ஜுன் 6 ஆம் தேதி போராட்டமும் அமைந்தது.
CJP யின் இணையதளம் விரைவாகப் பரவியதால், திப்கே இளைஞர்களின் கோபத்தை செயல்பாடாக மாற்ற முயன்று வருகிறார். இந்தியாவின் கல்வி அமைப்பில் நிலவும் ஆழமான நெருக்கடி எனத் தாம் கருதுவதை முன்னிலைப்படுத்தவும், தற்போதைய ஒன்றிய அரசின் அரசியல் நிலைக்குச் சவால் விடவும், தொடர்ச்சியான தேர்வு ஊழல்களை மையப்படுத்தி போரட்டங்களை ஆளும் பாசக அரசுக்கு எதிராக தொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவின் முக்கியப் பள்ளித் தேர்வு வாரியங்களில் ஒன்றான, அரசு நடத்தும் சிபிஎஸ்இ (CBSE) அறிமுகப்படுத்திய “புதிய திரையில் மதிப்பிடும்” (OSM) முறையைச் சுற்றியே இந்த சர்ச்சை மையமாக உள்ளது. இந்த அமைப்பின் கீழ், அச்சிடப்பட்ட விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. அங்கு, மதிப்பீட்டாளர்கள் அவற்றை கையால் மதிப்பிடுவதற்குப் பதிலாக மின்னணு முறையில் மதிப்பீடு செய்கின்றனர்.
மே 28 அன்று, இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்றதோடு, அதற்கான தீர்வுகள் காணப்படும் என மாணவர்களுக்கு உறுதியளித்தார். மேலும் அவர், மதிப்பீட்டுச் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புடைமையையும் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு “முற்போக்கான கருவி” என்று சிபிஎஸ்இ-யின் டிஜிட்டல் மதிப்பிடும் தளத்தை ஆதரித்துப் பேசினார்.
இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை எழுதினர். மதிப்பீட்டுச் செயல்முறையில் செயல்திறனையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதற்காக OSM முறையை அறிமுகப்படுத்துவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாரியம் தெரிவித்திருந்தது.
இருப்பினும், மே 13 அன்று தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து, மாணவர்களும் பெற்றோர்களும் பலதரப்பட்ட பிரச்சினைகளைத் தெரிவித்துள்ளனர்.
தேர்வுத் தாள்களை மறுபரிசீலனை செய்யக் கோரியவர்கள் எழுப்பிய புகார்களில், மங்கலான ஸ்கேன்கள், விடுபட்ட பக்கங்கள், சரிபார்க்கப்படாத விடைகள் மற்றும் மதிப்பீட்டுடன் பொருந்தாத மதிப்பெண்கள் ஆகியவை அடங்கும்.
மாணவர்கள் மறுமதிப்பீட்டுக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தாலும், தெரிவிக்கப்பட்ட முரண்பாடுகளை மறுஆய்வு செய்யும்போது, அரசுத்தரப்பு கூறியதுபோல, நியாயம், வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை உறுதி செய்வதில் உறுதியாக இருந்திருந்தால், மாணவர்களின் விடைத்தாள்களின் நகல்களைப் பெற முடியவில்லை என்று மாணவர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடிகள்) உட்பட, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தாமதங்கள் கவலையளிக்கின்றன. தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாணவர்கள் பொதுவாகப் பொதுத் தேர்வுகளில் குறைந்தபட்சம் 75 சதவீத மொத்த மதிப்பெண்களைப் பெற வேண்டும். “ஐஐடி தேர்வுகளில் மிக நல்ல சதவிகித மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், இந்த சிபிஎஸ்இ தேர்வில் 75 சதவிகிதத்திற்கும் குறைவாகப் பெற்றுள்ளனர் என்ற புகார்கள் கவலை அளிக்கிறது. எனெனில், அது அவர்களின் எதிர்காலத்தை நேரடியாகப் பாதிக்கும்.
புதிய தொழில்நுட்பத்தை முழுமையாகச் சோதிக்கும் முன்பே, அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளில் பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. மறுமதிப்பீட்டுக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரை, சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்துப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்களின் கால அட்டவணைகளை மாற்றியமைக்குமா என்பது வெளிச்சத்துக்கு வராத உண்மை ஆகும்.
**இந்தியாவின் ஜென்-இசட் ‘கரப்பான் பூச்சி’ இயக்கம் **
இந்த CJP இளைஞர்களின் குரல் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் கல்வி முறையிலுள்ள குளறுபடிகள் குறித்து இளைஞர்களின் ஆற்றலை ஒன்று திரட்டி ஒன்றிய அரசை நோக்கி கேள்வி கேட்க அழைக்கிறது. இவ்வியக்கம் மக்களாட்சியில் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாகவும், ஆளுங்கட்சியின் கொள்கைகள் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கும் தளமாகவும் செயல்படுகிறது.
இது இணையத்தில் (Social media) வைரலாகும் ஒரு தற்காலிக போக்கு மட்டுமே என்றும், அதிகாரப்பூர்வமற்ற போராட்டங்களால் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை கொண்டுவர முடியாது என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுவது தவறு.
அதேவேளையில், நாட்டில் எந்தவொரு பெரிய அரசியல் மாற்றத்திற்கும் வலுவான அடித்தளம் (Ground mobilization) தேவைப்படும். வெறும் இணையப் போராட்டங்கள் அல்லது ஆதரவு மட்டும் போதுமானதாக இருக்காது என்பதும் மறக்கமுடியாத உண்மையே.
மொத்தத்தில், இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதிலும், அரசை விழிப்புணர்வுடன் செயல்பட வைப்பதிலும் இதுபோன்ற இயக்கங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனினும், ஒரு முழுமையான அரசியல் மாற்றத்தை உருவாக்க, இவ்வியக்கம் எந்தளவுக்கு நிலைத்து நின்று செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் முழுமையான உண்மைத்தன்மை வெளிப்படும்.
தமிழகத்தில் பாசக காலூன்ற அவர்கள் மேற்கொள்ளாத திகிடுதத்த வேலைகளே இல்லை எனலாம். திரு. அன்னாமலை பாசக உறுப்பினர், மோடியின் அனுதாபி, தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி வளர்ச்சி, தமிழக நலன் என் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி, மோடி’ஜியின் அனுதாபியும், தன்னை வளர்த்துக்கொள்ள வழிதேடுகிறவருமாக இருந்து வருபவர். அப்படிப்பட்டவர் பாசக லிருந்து விலகி, மாதச்சார்பற்ற இயக்கத்தை உருவாக்கி, தமிழக மீட்பராக தமிழகத்தைக் காப்பாற்றுவார் என மக்களை நம்பவைத்து, தனிக்கடசி தொடங்கி செயல்படப் போகிறார் என்று கோடி மீடியாக்கள் வழியாக பரப்பி, தமிழகத்தில் பாசக கட்சி ஆட்சிக் கட்டிலேற அனைத்து சித்து வேலைகளும் திட்டமிட்டு அரங்கேறுகின்றன. இதுபோல ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ யும் பாசக’வின் சித்து வேலைகளில் ஒன்றோ!!! என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்களிடம் இல்லாமல் இல்லை.
*தஞ்சை டோமி*




