புதிய மாற்றத்தையும் புதிய சமூகத்தையும் உருவாக்கும் தேர்தல்”
நாம் பெரும்பாலும் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குப்பதிவு நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிக் கவலைப்படுகிறோம்.
அதன் பிறகு யார் ஆட்சி செய்கிறார்கள், என்னென்ன ஊழல்கள் நடக்கின்றன, லஞ்சம், கையூட்டு, பாலியல் வன்முறை, போதைப்பொருள் வியாபாரம் போன்றவை எவ்வாறு சமூகத்தை சீரழிக்கின்றன என்பதைக் கவனிக்காமல் வாழ்ந்து வருகிறோம்.
இந்த அலட்சியம் தான் ஒரு நாட்டை மெதுவாக வீழ்ச்சியடையச் செய்கிறது.
மதுவால் குடும்பங்கள் சிதறிக் கொண்டிருக்கின்றன; மனைவிகள் துன்பத்தில் வாழ்கின்றனர்; குழந்தைகள் கண்ணீரில் வளர்கின்றனர். விலைவாசி உயர்வு, வரிச் சுமைகள் ஆகியவை சாதாரண மக்களின் வாழ்வையே நசுக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் “நமக்கு என்ன, நம் வேலை பார்த்துக்கொள்வோம்” என்ற மனநிலையிலேயே இதை கடந்து செல்கிறோம்.
அரசியல் பற்றிய தெளிவான புரிதல் இல்லாததால், மேடைகளில் பேசுபவர்களின் வார்த்தைகளை சிந்திக்காமல் நம்பி விடுகிறோம்.
பலர் பணம், பதவி, ஆதாயம் என்பதற்காக பேசுகின்றனர்; உண்மையை மறைக்கின்றனர்.
இப்படிப்பட்ட பொறுப்பற்ற குரல்களை நாம் நம்பிக் கொண்டே சென்றால், நம்முடைய சமூகத்திற்கே நாம் தீங்கு விளைவிக்கிறோம்.
இந்த நிலையை மாற்ற வேண்டிய நேரம் இது.
இந்தத் தேர்தலாவது ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், மாற்றத்தை நோக்கி நாம் அணுக வேண்டும். இந்த சமூகம், இந்த நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
ஆனால் வாக்களித்த பிறகே நம் பொறுப்பு முடிவடைவதில்லை; அது அங்கிருந்தே தொடங்குகிறது. தேர்தல் முடிந்தவுடன் நமக்கான அரசியல் சூழலை தொடர்ந்து பேச வேண்டும். ஆட்சிக்கு வந்தவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா, மக்களின் நலனுக்காக செயல்படுகிறார்களா என்பதை கேள்வி கேட்க வேண்டும்.
சுய சிந்தனையுடன் அரசியலை அணுகும் மக்கள் மட்டுமே நல்ல தலைவர்களை உருவாக்க முடியும்.
அதனால், இந்தத் தேர்தலை மாற்றத்தின் தொடக்கமாக மாற்றுவோம். சிந்தித்து வாக்களிப்போம். அதன் பிறகு தொடர்ந்து கேள்வி கேட்போம், விமர்சிப்போம், கண்காணிப்போம். அப்போதுதான் நமக்கான உரிமை, நமக்கான நீதி, நமக்கான வளர்ச்சி கிடைக்கும்.
ஒரு புதிய சமூகமும், உண்மையான மாற்றமும் நம்மால் உருவாகட்டும்.
**ஆனந்த்
– Wisdom News





