ஜனநாயகம் காக்கப்படுமா?
ஆட்சியாளர்களின் மௌனமும் பெற்றோர்களின் ஆதங்கமும்.
Wisdom News I Anand
மக்களின் உணர்வுகளும், அமைதியான போராட்ட உரிமைகளும் மதிக்கப்படுவதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.
ஆனால், இன்று நீட் தேர்வு தொடர்பான தொடர் சர்ச்சைகளும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளும் மாணவர்களையும் பெற்றோர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.
நீட் தேர்வு பல மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளதுடன், இன்னும் பலரைத் தொடர் அச்சத்திலும் தள்ளியுள்ளது. காலம் காலமாக நீடிக்கும் இந்தத் தேர்வின் குளறுபடிகளை மத்திய அரசால் சரி செய்ய முடியாமல் தத்தளிக்கும் சூழலில்தான் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற மாணவர்களின் இந்த கோரிக்கை ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டிய அவசியமாகும்.
ஆனால், இந்தப் போராட்டங்களைச் சந்திக்கும் விதம் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், சட்டம்-ஒழுங்கைப் பேணும் மாநில அரசும், காவல்துறையும் அமைதியான முறையில் போராடும் மாணவர்களின் குரலை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நல்ல கல்வி கற்று, இந்த நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக, பொறுப்புணர்வுடன் வளர வேண்டும் என்ற கனவோடுதான் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். தன் கண் எதிரே மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை எந்தப் பெற்றோரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
“நாம் நம் குழந்தைகள் அடிவாங்குவதற்காகவா இவர்களுக்கு ஓட்டு போட்டோம்?” என்ற ஆதங்கமும் வேதனையும் இன்று சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் வெகுவாகப் பரவத் தொடங்கியுள்ளது.
கருத்து வேறுபாடுகளை உரையாடலால் தீர்ப்பதை விட்டுவிட்டு, மாணவர்களின் மனித மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. நீட் விவகாரத்தில் மத்திய அரசு உரிய தீர்வுகாண வேண்டும்; அதேவேளையில், அமைதியான முறையில் போராடும் மாணவர்களின் ஜனநாயக உரிமையையும் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.
மக்களின் இந்த ஒட்டுமொத்தக் குரலையும் கோபத்தையும் தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தன் கவனத்தில் கொண்டு, மாணவர்களின் மாண்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Wisdom News




