புதிய அரசியல் பார்வை

காவேரி அரசியல் நாடகமும் வறட்சியாகும் தமிழகமும்…

Wisdom News – Anand

தேர்தல் நெருங்கும் போதெல்லாம், அல்லது அல்லது வறட்சி காலம் வரும் போதும் மட்டுமே வழக்கம்போல ஒரு பழைய அரசியல் நாடகம் அரங்கேறுகிறது: காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கிறது கர்நாடக அரசு; விவசாயம் அதளபாதாளத்திற்குச் செல்கிறது” என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மக்கள் இந்த அரசியலையே பார்த்துச் சலித்துவிட்டனர். ஆனால், இனியும் இந்த ஏமாற்று வித்தைகளுக்கு தமிழக மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. கர்நாடகத்தில் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருப்பது ஏன்? நம் சொந்த மாநிலத்தின் நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறியதன் விளைவுதான் இந்த அடிமைத்தனம்!

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் மாநில நீர்வளத்துறையின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் (சராசரியை விட 70% வரை அதிகரித்து) அதீத கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டமான திருநெல்வேலியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு துளி நீரின்றி வறண்டு கிடந்த பல கிராமத்துக் கண்மாய்களும், ஏரிகளும் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் முழுமையாக நிரம்பி வழிகின்றன. வறண்ட நிலங்கள் நீர்ப்பரப்பாக மாறிய இந்த அற்புதக் காட்சியை முன்னணி நாளிதழ்களான ‘தி இந்து’ (The Hindu) மற்றும் ‘தினமணி’ போன்ற ஊடகங்கள் விரிவாகப் பதிவு செய்தன.

பல தலைமுறைகளாகக் காணாத நீரைக் கண்டு கிராம மக்கள் மலர்களைத் தூவி வரவேற்றனர். ஆனால், இவ்வளவு பெரிய இயற்கை வளம் கொட்டிக்கிடந்து, வெறும் ஆறு மாத காலமே கடந்த நிலையில், அந்த நீர் இன்று எங்கே சென்றது? வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருக்கட்டும்; நம்மிடம் நீரைச் சேமிப்பதற்கான முறையான திட்டமிடலோ அல்லது செயலாக்கமோ இல்லவே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. கடந்த அரசாகட்டும், தற்போதைய அரசாகட்டும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட, பழைய அரசைக் குறை கூறுவதிலேயே காலத்தைக் கடத்துகின்றன.

நம் மாநிலத்தில் பெய்யும் மழையளவையும், இயற்கையாக நமக்குக் கிடைக்கும் நீர்வளத்தையும் சரியாகச் சேமித்து வைத்தாலே, நாம் கர்நாடக அரசை எதிர்பார்த்து கையேந்த வேண்டிய அவசியமே இல்லை. விவசாயத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் அடிப்படையான நீரைச் சேமிக்காமல், வெளி மாநிலத்தை நம்பி இருப்பதும், தேர்தலுக்காக இதைப் பயன்படுத்துவதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். மக்களைக் காப்பதும், மாநிலத்தின் வளங்களைப் பெருக்குவதும் அரசின் முதன்மைக் கடமையாகும். குறிப்பாக, பின்வரும் கட்டமைப்பு மாற்றங்களை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்:

கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஏரிப்புறப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிப்பது, லஞ்சம் பெற்றுக்கொண்டு நீர்நிலைகளை அழிப்பது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரங்களை வளர்த்து, நிலத்தடி நீரைத் தக்கவைப்பதற்கான உயிர்ச்சூழலை (Ecosystem) உருவாக்க வேண்டும். இயற்கையின் நீராத ஆதாரங்களாக விளங்கும் மலைகளை உடைப்பதையும், மணலைக் கொள்ளையடிப்பதையும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும். இயற்கையை அழிக்கும் திட்டங்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரக்கூடாது.

இன்று நீர்நிலைகள் வெறும் வறட்சியால் மட்டும் பாதிக்கப்படவில்லை; மாறாக, மனிதர்களின் பொறுப்பற்ற செயலால் விஷமாகி வருகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் சாக்கடை நீரை நீர்நிலைகளில் கொட்டுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். நீரை மாசுபடுத்துபவர்கள் மீதும், அதை அனுமதிக்கும் நிறுவனங்கள் மீதும் சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், நீதிமன்றங்களின் வாயிலாக இதற்கான கடுமையான சட்டத் திட்டங்களைச் செயல்படுத்தி, தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

நீர் இருந்தால் மட்டுமே உயிர்ச்சூழல் உருவாகும். ஏரிகளிலும் குளங்களிலும் நீர் நிரம்பும்போது, பல்வேறு பறவையினங்கள் தேடிவரும். அந்தப் பறவையினங்களின் வரத்தும், சுற்றியுள்ள தாவரங்களும் சேர்ந்துதான் நீரைத் தக்கவைக்கும் இயற்கையான வளத்தை உருவாக்குகின்றன. இந்த இயற்கைச் சுழற்சியைப் பாதுகாக்கும் சட்டங்களை அரசு உடனடியாகக் கொண்டு வந்து தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகள் வரவேண்டும், தொழில் முதலீடுகள் தமிழகத்திற்குச் செய்யப்பட வேண்டும் என்று அரசுகள் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றன. ஆனால், இங்குள்ள இயற்கை வளங்களை எப்படிப் பாதுகாப்பது, அதற்குரிய உற்பத்தியை எப்படிக் பெருக்குவது என்ற தொலைநோக்குப் பார்வை இல்லாததே இன்றைய பெருங்குறைபாடாகும்.

உண்மையான தொலைநோக்குப் பார்வை சாத்தியமாக வேண்டுமெனில், நீர் ஆதாரத்தைப் பெருக்கினால் மட்டுமே, இங்குள்ள உள்ளூர் வளங்களைக் கொண்டு உற்பத்திப் பொருட்களை உருவாக்கி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்; இதன் மூலமாக மட்டுமே உண்மையான வருவாயைப் பெருக்க முடியுமே தவிர, அயல்நாடுகளில் இருந்து வரும் தொழிற்சாலைகளை மட்டும் நம்பியிருப்பதால் நாட்டின் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகாது.

தொழிற் வளர்ச்சி என்ற பெயரில் வெளியேறும் தொழிற்சாலைக் கழிவுகள் இந்த பூமிக்கும் மண்ணுக்கும் எத்தகைய கேட்டை விளைவிக்கின்றன என்பதை அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும்; இயற்கையையும் நீர்வளத்தையும் அழிக்கும் எந்தவொரு தொழில் வளர்ச்சியும் ஒருபோதும் நாட்டை உயர்த்தாது!

அதிகாரிகளுக்கும் சரி, அரசுகளுக்கும் சரி, வெறும் காகிதத் திட்டங்கள் போதாது; களத்தில் இறங்கிச் செயலாற்றும் சமூகச் சிந்தனை வேண்டும். மக்களும் விழித்தெழுந்து அரசை நீர்நிலைகளைப் பாதுகாக்கக் கோரி கேள்வி கேட்க வேண்டும். மக்களை வேறு திசைகளில் மடைமாற்றுவதை விட்டுவிட்டு, மாநிலத்தின் உயிர்நாடியான நீர்வளத்தைப் பாதுகாப்பது மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாயத்தின் எழுச்சிக்கும், மக்களின் எதிர்காலத்திற்கும் அடிப்படையாகும்.

“நீரின்றி அமையாது உலகு” என்பதை உணர்ந்து, தமிழக முதலமைச்சர் உடனடியாக நீர்வளப் பாதுகாப்பிற்கான அதிரடிச் சட்டங்களையும், புதிய செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒற்றைக் குரலும் எதிர்பார்ப்பும் ஆகும்!

Anand – Wisdom News

#SaveWaterSaveTamilNadu

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

புதிய அரசியல் பார்வை

*சாமானிய மக்களை ஏமாற்றும் அரசியல் சூழ்ச்சிகள்* 

  • April 25, 2026
 *அரசியல் நாகரிகம் என்பது மருந்துக்கும் இல்லாத ஒரு சூழலில்,* நடிகர் விஜய்யை “பாஜகவின் கைக்கூலி” என்று முத்திரை குத்துவது அப்பட்டமான அநீதி மற்றும் அரசியல் சூழ்ச்சி. விஜய்
புதிய அரசியல் பார்வை

புதிய மாற்றத்தையும் புதிய சமூகத்தையும் உருவாக்கும் தேர்தல்” 

  • April 25, 2026
நாம் பெரும்பாலும் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குப்பதிவு நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிக் கவலைப்படுகிறோம். அதன் பிறகு யார் ஆட்சி செய்கிறார்கள், என்னென்ன ஊழல்கள் நடக்கின்றன, லஞ்சம்,
Translate »