புதிய அரசியல் பார்வை

“மே 13: டிஜிட்டல் ஜனநாயகப் புரட்சி — தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயம்”

2026 தமிழக அரசியல் வரலாற்றில் மே 13 நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வு, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாத ஒன்று. இது தமிழக அரசியலில் தலைமுறை மாற்றம், அரசியல் மொழி மாற்றம், மக்கள் மனநிலை மாற்றம் மற்றும் அதிகார மாற்றம் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்திய முக்கியமான அரசியல் தருணமாக மாறியுள்ளது. குறிப்பாக திரு. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்று சட்டப்பேரவையில் தனது ஆட்சியின் அரசியல் அடித்தளத்தை நேரடியாக பதிவு செய்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் TVK 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லிம் லீக் கட்சி, அதிமுகவில் சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை கடந்தது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தது அரசியல் ரீதியாக மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. யார் ஆதரித்தார்கள், யார் எதிர்த்தார்கள், யார் நடுநிலையாக இருந்தார்கள் என்பது மக்களுக்கு வெளிப்படையாக தெரிந்தது. இது மக்கள் நேரடியாக அதிகார அரசியலை பார்த்த டிஜிட்டல் ஜனநாயகப் புரட்சியாக பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களின் முதல் சட்டப்பேரவை உரை அதிக கவனத்தை ஈர்த்தது. அரசியல் அனுபவத்தில் இன்னும் வளர்ந்து வரும் நிலையில் இருந்தாலும், அவர் தனது உரையில் வலுவான எதிர்க்கட்சித் தலைவரின் குரலை வெளிப்படுத்தினார். கடந்த ஆட்சியில் கொரோனா கால சவால்கள், மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பட்டியலிட்ட அவர், தற்போதைய அரசும் மக்கள் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் அதே நேரத்தில் அவர் கூறிய சில அரசியல் விமர்சனங்கள் முதிர்ச்சி பெற்ற அரசியல் மொழியாக தெரியவில்லை என்பதே பலரின் பார்வையாக உள்ளது. குறிப்பாக “மக்கள் பெரும்பான்மை TVK-ஐ ஆதரிக்கவில்லை” என்ற கருத்து அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வரலாற்றில் புதிய கட்சி ஒன்று தனது முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 34.93% வாக்கு விகிதத்தையும் 108 தொகுதி வெற்றியையும் பெறுவது சாதாரண விஷயம் அல்ல. சுமார் 1,72,26,209 வாக்குகளை பெற்றிருப்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய மக்கள் மனநிலை மாற்றத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக 70 ஆண்டுகளாக நிலைத்திருந்த திராவிட அரசியல் கட்டமைப்பில் புதிய சக்தி ஒன்று அதிகார மையத்தில் அமர்ந்துள்ளது என்பது வரலாற்று உண்மை.

த.வெ.க வெற்றியை “இன்ஸ்டாகிராம் அரசியல்” அல்லது “சமூக வலைத்தள விளம்பர வெற்றி” என்று உதயநிதி விமர்சித்தார். ஆனால் தமிழகத்தில் ஊடக அரசியலை மிகவும் திட்டமிட்டு பயன்படுத்திய அரசியல் அமைப்புகளில் திமுக முன்னணியில் இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள், யூடியூப் தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அரசியல் வெற்றிக்கான முக்கிய ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதுபோல இன்று சமூக வலைத்தளங்கள் அரசியலின் புதிய மேடையாக மாறியுள்ளது. அதை அனைத்து கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன. ஆகவே அதை மட்டும் குறைத்து பேசுவது முழுமையான அரசியல் விமர்சனமாக இருக்க முடியாது.

இதற்கு மாறாக முதல்வர் ஜோசப் விஜய் மிகவும் அமைதியான மற்றும் பக்குவமான அரசியல் மொழியை பயன்படுத்தினார்.
“நாங்கள் சிறுபான்மை அரசாக வந்திருந்தாலும் மக்களுக்கு நன்றி கடன் செலுத்தும் ஆட்சியாக இருப்போம்” என்ற அவரது அணுகுமுறை சட்டப்பேரவையில் கவனத்தை பெற்றது. எதிர்க்கட்சிக்கு நேரடி அரசியல் மோதல் மொழியில் பதிலளிக்காமல், செயலால் நிரூபிப்போம் என்ற நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டது அவரது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது.

அதே நேரத்தில், அரசின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் மக்கள் எதிர்பார்ப்புகளையும் முதல்வர் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்பதையும் அவரது பேச்சு வெளிப்படுத்தியது.

அரசு நிர்வாக இயந்திரங்கள் முழுமையாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த மாற்றங்களை மக்கள் பெரும் எதிர்பார்ப்போடும் வரவேற்போடும் கவனித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த கால அரசுகள் முழுமையாக தீர்வு காண தவறிய நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடு பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் தற்போதைய அரசு உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளில் அரசியல் அணுகுமுறையை மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், நீரியல் நிபுணர்கள், விவசாய ஆய்வாளர்கள் மற்றும் நிர்வாக ஆலோசகர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் இணைத்து செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டால், அது மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உதவும்.

காவிரி நீரை தனியார் குடிநீர் நிறுவனங்கள் அதிகமாக பயன்படுத்துவது, ஆறுகள் மற்றும் ஏரிகளில் கழிவுகள் கலப்பது போன்ற பிரச்சினைகளில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகம் முதல் பல அரசு துறைகள் வரை பொதுமக்கள் சிரமமின்றி சேவைகளை பெறும் சூழல் உருவாக வேண்டும்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளில் நேரடி கண்காணிப்பு இருந்தால் மட்டுமே மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை உணர முடியும்.

தமிழகத்திற்கு ஒரு நேர்மையான நல்லாட்சியை முதல்வர் விஜய் வழங்குவார் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாமும் அதை எதிர்பார்க்கிறோம்.

WISDOM NEWS

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

புதிய அரசியல் பார்வை

*சாமானிய மக்களை ஏமாற்றும் அரசியல் சூழ்ச்சிகள்* 

  • April 25, 2026
 *அரசியல் நாகரிகம் என்பது மருந்துக்கும் இல்லாத ஒரு சூழலில்,* நடிகர் விஜய்யை “பாஜகவின் கைக்கூலி” என்று முத்திரை குத்துவது அப்பட்டமான அநீதி மற்றும் அரசியல் சூழ்ச்சி. விஜய்
புதிய அரசியல் பார்வை

புதிய மாற்றத்தையும் புதிய சமூகத்தையும் உருவாக்கும் தேர்தல்” 

  • April 25, 2026
நாம் பெரும்பாலும் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குப்பதிவு நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிக் கவலைப்படுகிறோம். அதன் பிறகு யார் ஆட்சி செய்கிறார்கள், என்னென்ன ஊழல்கள் நடக்கின்றன, லஞ்சம்,
Translate »