அதிகார போதையும், பேரழிவின் தொடக்கமும்!
The intoxication of power and the beginning of disaster!
நெரிசல் மிகுந்த அந்தப் பேருந்து நிலையம். காதைப்பிளக்கும் சத்தத்திற்கு நடுவே, அழுக்குத் துணியால் டீ டம்ளர்களைக் கழுவிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அவனது கைகளிலிருந்துதான் இந்த வாழ்க்கை தொடங்குகிறது. சில காலத்திற்குப் பின், ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கீ-செயின்களையும், மலிவான பொம்மைகளையும் கைகளில் ஏந்தி, கூவிக்கூவி விற்ற எளிய மனிதனாக மாறினான் அவன். பசி அவனுக்கு அன்றாடப் பாடம். ஆனால், அவன் வெறும் பொருட்களை மட்டும் விற்கவில்லை; மனிதர்களைப் படித்தான். அவனிடம் பொருள் வாங்குபவர்கள், வாங்காமல் கடந்து போபவர்கள் என அத்தனை பேரிடமும் அவன் உரையாடினான். பெரிய மனிதர்களின் பகட்டான பேச்சையும் கவனித்தான்; விளிம்பு நிலை மனிதர்களின் அடிவயிற்றுப் புலம்பலையும் கேட்டான். இந்தத் தொடர் உரையாடல்கள் அவனுக்குப் புத்தகங்கள் தராத ஆகச்சிறந்த வாழ்வியல் அனுபவத்தைத் தந்தன. உயர்வானவர்களின் பழக்கங்களையும், தாழ்வானவர்களின் வாழ்வியல் சூழலையும் அவனால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
அடுத்த கட்டமாக, அவன் வீதி வீதியாகச் சென்று நேரடியாக மக்களிடம் பொருட்களை விற்கும் ‘டோர் கேன்வாஸிங்’ முறைக்கு மாறினான். பின்பு, பெரிய நிறுவனங்களிடமிருந்து நேரடியாகப் பொருட்களைப் பெற்று விற்கும் அளவுக்கு உயர்ந்தான். இந்த நகர்வு அவனுக்கு மக்களின் பொருளாதாரச் சூழ்நிலையையும், அவர்களின் அன்றாடத் தேவைகளையும், அவர்களின் மனநிலையையும் மிக நெருக்கமாகக் கற்றுக்கொடுத்தது. மனிதர்களை எப்படித் தன்வசப்படுத்துவது என்ற கலை அவனுக்குக் கைவந்தது. அவனுடைய பேச்சில் ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் கட்டிப்போடும் ஒரு அசாத்திய ஈர்ப்பு இருந்தது. இந்தத் தனித்துவமான பேச்சுத் திறமையைக் கண்ட சில அரசியல் பிரமுகர்கள் வியந்தார்கள். அவனிடமிருந்த அந்த அசாத்திய ஆற்றலைப் புரிந்து கொண்டு, அவனை அரசியல் பக்கம் ஈர்த்தார்கள். அவனும் லாபம் தரும் தன் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, முழுமையாக அரசியல் பக்கம் தன் பாதையைத் திருப்பினான்.
அப்படி அரசியலுக்குச் சென்ற அவன், மேடைகளில் மக்களுக்கான வாழ்வியலின் சூழலையும், அவர்களின் அன்றாடப் போராட்டங்களையும், பொருளாதாரச் சூழ்நிலையையும் பேசினான். அது மக்களின் மனங்களை ஆழமாகத் தொட்டது. அவனது குரல், அடித்தட்டு மக்களின் அடிமனத்துக் குரலாக எதிரொலித்தது. கிராமங்களில் தொடங்கி நகரங்கள் வரை அவனது அரசியல் நகர்வு அதிவேகமாகப் பரவியது. மக்கள் “இவன்தான் நம் தலைவன்!” என்று அவனைக் கொண்டாடினார்கள்; தலைமேல் தூக்கி வைத்துக் கூத்தாடினார்கள். இதன் தொடர்ச்சியாக, அவன் அரசியலில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி, மாபெரும் அதிகாரத்தை அடைந்தான். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, நாட்டின் மிக உயர்ந்த அதிகாரப் பதவியைத் தன் வசமாக்கினான்.
ஆனால், அதிகாரம் என்ற அரியணை ஏறியவுடன் அந்தக் கதை தலைகீழாக மாறியது. எத்தனையோ காலம் மக்களின் வலிகளைப் பேசிய அந்த மனிதனின் தலைக்குள், அதிகாரம் தந்த போதையில் பேராணவம் குடியேறியது. மக்கள் அவனைப் போற்றிய போற்றுதல், அவனை ஒரு மாய உலகிற்குள் தள்ளியது. இப்போது அவன் மேடைகளில் மக்களின் பொருளாதாரத்தைப் பேசுவதை நிறுத்திக் கொண்டான். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, தன்னைப்பற்றியும், தன் சொந்தச் சித்தாந்தங்களைப் பற்றியும், தன் பெருமைகளைப் பற்றியும் மட்டுமே பேசத் தொடங்கினான். “தான் நினைத்தால் எதையும் பணத்தாலும் அதிகாரத்தாலும் சாதித்துவிடலாம் என்ற கர்வத்தில் அவன் கண்மூடித்தனமாக வாழ்ந்தான்.”
மக்களோ, விளிம்பு நிலையிலிருந்து இன்னும் மேலே வராமல் அதே வறுமையிலும் வாழ்வாதாரப் போராட்டத்திலும்தான் உழன்று கொண்டிருந்தார்கள். அவன் அதிகாரத்திற்கு வந்த பின்பு அவனுடைய செயல்பாடுகள் மக்களுக்கானதாக இல்லை. ஒருகட்டத்தில், அவன் இன்னும் தன் பெருமையையே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த மக்கள் சலித்துப் போனார்கள். “இத்தனை காலம் நீ பேசிப்பேசி எதையும் செய்யவில்லை, இப்போதும் புளித்த மாவையேதான் அரைக்கிறாய்” என்பதை மக்கள் உணர்ந்த நொடியில், அவனை அந்த நகரில் இருந்தும் அரியணையில் இருந்தும் தூக்கி எறிந்தார்கள். அந்த வீழ்ச்சி மிகக் கொடூரமானது. தன் வசமிருந்த ஒட்டுமொத்த மனிதர்களையும் இழந்து, தன் கர்வத்தால் அனைத்தையும் தொலைத்து, மீண்டும் ஒரு சாதாரண மனிதனாக, யாரும் மதிக்காத ஒரு நிழலாக அவன் मடிந்து போனான்.
இந்தக் கதை ஒரு தனிநபர் வீழ்ச்சி சார்ந்தது மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும், நாடுகளுக்கும், வரலாற்றிற்கும் இயற்கை தந்து கொண்டிருக்கும் மாறாத பாடம். ஒரு குடும்பத்தின் தலைவன் இதேபோன்று ஆணவத்தோடு செயல்பட்டால் என்ன ஆகும்? அந்த ஒட்டுமொத்த குடும்பமும் சிதைந்து போகும்; அவனும் சிதைந்து போவான் என்பதற்கு இந்த வாழ்க்கையே சாட்சி. ஆணவம் என்பது ஒரு மனிதனைச் சுற்றியுள்ள உலகத்தை மூடிவிடுகிறது. அவனை ஒரு சிறிய இருட்டு வட்டத்திற்குள் கைதியாக்கி விடுகிறது. தன் கர்வத்தில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க மறுக்கும் எவனுக்கும் வீழ்ச்சி என்பது நிச்சயம். மற்றவர்களின் வலியையோ உணர்வுகளையோ புரிந்து கொள்ளாத எவனுக்கும் இயற்கை இரங்குவதில்லை. அது அவனது அழிவு மட்டும் அல்ல; அவனது வாழ்வாதாரம், சூழல், பொருளாதாரம் என அனைத்தையும் அவனுக்கு ஏதுவானதாக இல்லாமல் மாற்றி அழித்துவிடும்.
வரலாறு முழுக்க ஆணவத்திற்குப் பேரழிவுகள் சாட்சியாய் நிற்கின்றன. மாபெரும் புரட்சியாளராகவும் மேதையாகவும் போற்றப்பட்ட நெப்போலியன் போன்றவர்கள் கூட இந்த ஆணவத்தின் உச்சத்தில்தான் தங்களின் பேரரசை இழந்து வீழ்ந்தார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும் பொருந்தும். இன்று உலக அரங்கில் அணு ஆயுத பலமும், பண பலமும், தொழில்நுட்ப அறிவும் தன்னிடம் மட்டுமே இருப்பதாக மார்தட்டிக் கொண்டு, தானே பெரிய நாடு என்ற கர்வத்தில் செயல்படுகிறது இஸ்ரேல். அதிகாரத்தில் இருப்பவர்களின் இந்த அகந்தை, சாதாரண மக்களின் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தன்னை மாபெரும் சக்தியாகக் கருதும் இந்த ஆணவப் போக்கிற்குப் பின்னால் ஒரு பெரும் வீழ்ச்சி காத்திருக்கிறது. “இன்னும் 20 ஆண்டுகாலம் கழித்து அதனுடைய ஒட்டுமொத்த வீழ்ச்சியை அடுத்த தலைமுறை பார்க்கப் போகிறது” என்பதைச் சர்வதேச வரலாற்று ஆய்வாளர்கள் இன்று ஆழமாக ஆய்ந்து அறிந்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய இராணுவ பலம் இருந்தாலும், மனிதநேயமற்ற உலகளாவிய தனிமைப்படுத்தலும், உள்நாட்டு சமூகச் சிதைவும் எந்தவொரு பேரரசையும் வீழ்த்தும் என்ற வரலாற்று விதி இதற்குண்டு.
இதே ஆணவத்தில்தான் அன்று பழங்கால எகிப்தியர்களும் வாழ்ந்தார்கள். மனித ஆற்றலையும், பிரபஞ்ச ஆற்றலையும் தாங்கள் முழுமையாக அறிந்து கொண்டுவிட்டதாக நம்பினார்கள். அனைத்தையும் தங்கள் வசப்படுத்திவிடலாம் என்று பேராணவம் கொண்டார்கள். ஆனால், இயற்கை அவர்களுக்குப் புகட்டிய பாடம் மிகக் கடுமையானது. அவர்களின் வாழ்வாதாரமாக இருந்த நைல் நதி அசுத்தமாகிப் போனதும், அவர்களின் நாகரிகம் வீழ்ந்ததும் அந்த ஆழ்ந்த ஆணவத்தின் விளைவுதான். அது இயற்கை மனிதனுக்குத் தந்த பாடம்.
நம் தமிழ் இனத்தின் இன்றைய நிலையும் இதிலிருந்து வேறுபட்டதல்ல. உலகிலேயே மிகச்சிறந்த பண்பாடும், தொன்மையான நாகரிகமும், ஒப்பற்ற மொழியும் கொண்டவர்கள் தமிழர்கள் என்று மேடைகளில் பெருமை பேசிக் கொள்கிறோம். ஆனால், மனித மாண்பை நிலைநிறுத்த இன்று நாம் தவறிவிட்டோம். தொழில்நுட்ப ரீதியாக நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும், சிந்தனை ரீதியாக இன்னும் சாதி-மத இருட்டிலேயேதான் சுழன்று கொண்டிருக்கிறோம். இங்கு மொழியைக் காக்கத் துடிப்பவர்கள், சக மனிதனின் மாண்பைக் காக்கத் தவறிவிடுகிறார்கள். ஒரு தெருவில் இருப்பவன், அடுத்த தெருவில் இருக்கும் தன் சொந்த இனத்து மனிதனை ஏளனமாகப் பார்க்கிறான். தமிழ் இனம் என்று பெருமை பேசும் அதே நாவுகள்தான் சாதியின் பெயரால் மனிதர்களைத் தள்ளி வைக்கின்றன. சாதி வெறியால் இன்றும் நடக்கும் ஆணவப் படுகொலைகள் இந்த சமூகத்தின் ஆகப்பெரும் வீழ்ச்சிக்கான சான்றுகள், அழிவின் உச்சம். மொழியையும் கலாச்சாரத்தையும் மேன்மைப்படுத்தும் நாம், மனித நேயத்தை மதிக்க மறுக்கிறோம். அதனால்தான், இன்று தமிழ் சமூகமும் தன் பொருளாதாரத்தையும் இயற்கை வளங்களையும் தொலைத்துவிட்டு, இன்னும் மதத்தின் பேராலும் மூடநம்பிக்கைகளின் பேராலும், சாதிப் பெருமைகளாலும் ஒருவித போதையான நம்பிக்கையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த மூடத்தனமும் சாதிய ஆணவமும் வளர்ச்சியை நோக்கிய பாதை அல்ல, அழிவிற்கான பாதை என்பதை இந்த இனம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
வரலாற்றில் மதங்களின் வீழ்ச்சியும் இப்படித்தான் நிகழ்ந்தது. ஐரோப்பாவில் இன்று அநேக கிறிஸ்தவ ஆலயங்கள் மக்கள் வரத்து இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒருகாலத்தில் மதக் கோட்பாடுகளை வைத்துக் கொண்டு, ஆட்சியாளர்களோடு கைகோர்த்துக்கொண்டு, அதிகார போதையில் மக்களை ஒடுக்க நினைத்தார்கள். அதன் விளைவை இன்று அந்த மதக் கட்டமைப்புகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் அந்த மதத்தை முற்றிலும் விலக்கி வைத்துவிட்டார்கள். எந்தவொரு மதமும், இனமும் தங்களை உயர்ந்தவர்களாக நினைத்து மனிதர்களை அடிமையாக்கத் துடித்தால், இயற்கை வளங்களைத் தனக்கே சொந்தமாக்க நாசவேலையில் ஈடுபட்டால், அங்கு அழிவு நிச்சயம் தொடங்குகிறது. அந்த அழிவு என்பது நேரடியான அழிவு மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் பொருளாதாரச் சீரழிவாக, இயற்கை வளங்களின் அழிவாக, மனித நேயமற்ற சூழலாக மெல்ல மெல்ல உருவெடுக்கும். இயற்கை தன் வசக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் அந்த வீழ்ச்சியை நிகழ்த்தும்.
இந்த அவல நிலை முற்றிலும் மாற வேண்டும். மனித இனம் இந்த ஆணவப் போக்கிலிருந்தும், அதிகார வெறியிலிருந்தும் தங்களை மாற்றிக்கொண்டு, தங்களைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும். மனிதர்களை மையப்படுத்தி, சக மனிதனை மதிக்கும் மனிதநேயமிக்க வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். இயற்கை தந்த வளங்களை எல்லாரும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். “நாமும் அனுபவித்து மற்றவரும் அனுபவிக்க வேண்டும்” என்ற சிந்தனையை உட்படுத்தினால் மட்டுமே இங்கு மனித மாண்பு போற்றப்படும். அந்த மாண்பை நாம் போற்றத் தொடங்கும்போதுதான் ஒரு நாடும், சமூகமும், தனிமனிதனும் உண்மையான, மாபெரும் வளர்ச்சியை நோக்கி நகர முடியும். அதுவே ஆணவத்திலிருந்து மட்டுமல்ல… பேரழிவிலிருந்து நமக்குக் கிடைக்கும் உண்மையான விடுதலை!
ஆனந்த் – விஸ்டம் நியூஸ்




