அணுக்கனிம நச்சுத் திட்டம் தடுக்கப்படும்
கன்னியாகுமரி மாவட்டத்தை இன்னொரு பேரழிவுப் பகுதியாக மாற்றக்கூடியதாக அச்சம் எழுப்பியிருந்த ஐஆர்இஎல் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று தமிழக அரசின் மூன்று அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் அணுக்கனிமச் சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகள், மிடாலம், மேல்மிடாலம், கெலன் நகர், இனையம், புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்த்துறை உள்ளிட்ட பகுதிகளின் ஊர் நிர்வாகிகள், பங்குத் தந்தையர்கள் மற்றும் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர், 03.07.2025 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் அமைச்சர்களை சந்தித்து தங்களது கவலைகளையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
இந்தச் சந்திப்பில் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், இயற்கை பாதுகாப்பு மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு, மக்களின் கருத்துகளையும் அச்சங்களையும் பொறுமையாகக் கேட்டறிந்தனர். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், நிதித்துறை செயலாளர் எஸ்.ஜே. சிரு மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அணுக்கனிமச் சுரங்கத்தால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள், மக்களின் வாழ்வாதார இழப்புகள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. இதன் போது, “அழிக்க வரும் அணுக்கனிமச் சுரங்கம்” என்ற நூலும் அமைச்சர்களிடம் வழங்கப்பட்டது.
இறுதியாக பேசிய அமைச்சர் பிரபு, “மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படியே இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது. எக்காரணம் கொண்டும் ஐஆர்இஎல் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது” என்று உறுதியளித்ததாக அணுக்கனிமச் சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்வுகளை எதிர்கொண்ட மக்களுக்கு, இந்த முறை அரசுடன் நேரடியாக உரையாடி நம்பிக்கையூட்டும் உறுதிமொழியைப் பெற்றது புதிய அனுபவமாக அமைந்துள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள இந்த உறுதிமொழி நடைமுறையிலும் செயல்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
“சொன்னதைச் செய்வோம்” என்ற நம்பிக்கையுடன், இந்த உறுதியை வரவேற்கிறோம்.
— குறும்பனை பெர்லின்
அணுக்கனிமச் சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம்
செய்தி – ஜான் பி ராயன்





