புதிய அரசியல் பார்வை

விஜய்யின் வெற்றி: சமூக வலைத்தளங்களா, ஜோதிடமா, மக்கள் நம்பிக்கையா?

இன்று சமூக வலைத்தளங்களிலும் அரசியல் விவாதங்களிலும் அதிகமாகப் பேசப்படும் ஒரு கேள்வி — ஜோசப் விஜய் அவர்களின் எழுச்சி மற்றும் வெற்றி என்பது சமூக ஊடகங்களின் உருவாக்கமா, சினிமா புகழின் ஈர்ப்பா, ஜாதகத்தின் பலனா, அல்லது உண்மையான மக்களின் மனநிலையின் வெளிப்பாடா என்பதே. இந்தக் கேள்வியை வெறும் ரசிகர் மனப்பான்மையோ அல்லது அரசியல் ஆதரவோ என்ற குறுகிய பார்வையில் பார்க்க முடியாது. இது தமிழர் சமூக உளவியல், கலாச்சார அடையாளம், அரசியல் வெற்றிடங்கள், மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளோடு இணைந்த ஒரு ஆழமான சமூக நிகழ்வாகப் பார்க்கப்பட வேண்டும்.

தமிழர்களின் கலாச்சாரம் என்பது வெறும் மரபு வழிபாடுகளால் மட்டுமே அமைந்த ஒன்று அல்ல. அது கலை வழியாக வாழ்வை உணர்ந்து வந்த ஒரு இனத்தின் கலாச்சாரம். ஒரு குழந்தை பிறக்கும் போது தாலாட்டு, பூப்புனித நீராட்டு, முதல் திருமணம், இறப்பு வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் இசை, நாடகம், கலை, உணர்ச்சி ஆகியவற்றோடு இணைந்திருக்கிறது. கோயில் விழாக்களில், நாட்டுப்புறக் கலைகள், நாடகங்கள், இசை, பாடல்கள் — இவை அனைத்தும் தமிழரின் மன அமைப்பை உருவாக்கியுள்ளன. அதனால் தான் தமிழர் சமூகத்தில் “கலை” என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது வாழ்வியலின் ஒரு மொழி.

பல ஆய்வாளர்கள் தமிழர்களின் சமூக மனநிலையைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் ஒரு மிகுந்த உணர்ச்சி சார்ந்த இனமாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள். தங்களுடைய கலை, பாரம்பரியம், வீரக் கதைகள், சினிமா, இசை — இவை அனைத்துடனும் அவர்கள் ஆழமான எமோஷனல் இணைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதனால் தான் அவர்கள் தங்களுடைய தலைவரையும் பெரும்பாலும் கலை வழியாகவே தேட ஆரம்பித்தார்கள்.
இந்த இடத்தில்தான் ஜோசப் விஜய்யின் அரசியல் நகர்வை நோக்க வேண்டும். அவர் ஒரே நாளில் தோன்றிய அரசியல் முகம் அல்ல. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர் மன்ற அமைப்புகளைச் சமூக மற்றும் அரசியல் அடிப்படையிலான இயக்கமாக மாற்ற முயன்றவர். உள்ளாட்சித் தேர்தல்களில் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பெற்ற வெற்றிகள் அவருக்கு மக்கள் மனநிலையை கவனிப்பதற்கான ஒரு களப் புரிதலைத் தந்தன.

ஆனால், சமகாலத்தில் அவரது இந்த வருகையைச் சுற்றி உருவாக்கப்படும் சமூக ஊடகப் பரப்புரைகள் ஒரு தற்காலிக மாயையை ஏற்படுத்துகின்றன. இன்ஸ்டாகிராமில் கணக்குத் தொடங்கிய சில நிமிடங்களில் குவியும் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களும் (Followers), இணையத்தில் விழும் ‘லைக்ஸ்’களும் ஒரு பிரம்மாண்டமான அலையைக் காட்டுவது நிஜம்தான். எனினும், டிஜிட்டல் உலகம் என்பது பெரும்பாலும் ஒரு நிழல் உலகமே. இணையத்தில் வெளிப்படும் இந்தத் திரட்சி, களத்தில் இருக்கும் உண்மையான வாக்கு வங்கியாக மாறுமா என்ற சவால் எப்போதுமே உண்டு.

சமூக ஊடகங்கள் ஒரு செய்தியைக் கொண்டு சேர்க்கும் நவீனக் கருவியே தவிர, அதுவே ஒரு தலைவனின் மக்கள் செல்வாக்கை முழுமையாகத் தீர்மானித்துவிட முடியாது

உண்மையான மனவெழுச்சி என்பது இணையத்திற்கு வெளியே, இந்த மண்ணின் அடித்தட்டில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புகளில் ஒளிந்திருக்கிறது. சாதாரண தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், உடல் உழைப்பாளர்கள், பொருளாதார நெருக்கடியில் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைத்துத்தரப்பினரும் “யாராவது மாற்றம் கொண்டு வரமாட்டார்களா?”

என்ற ஏக்கத்தில் இருந்தார்கள். திரைப்படங்களில் அவர் வெளிப்படுத்திய கருத்துகளும், அநீதிக்கு எதிரான கதாபாத்திரங்களும் அவரை ஒரு “மாற்றம் தரக்கூடியவர்” என்ற நம்பிக்கையாக மக்கள் மத்தியில் விதைத்துள்ளன.

மக்கள் தங்களின் வலிகளை உணர்ந்து பேசும் ஒரு குரலைத்தான் தேடியிருக்கிறார்கள். அந்தத் தேடலின் வீரியமும், மக்களின் தேவைகளின் அழுத்தமும் தான் ஜோசப் விஜய் அவர்களின் இந்த அரசியல் பிரவேசத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு பெரும் எதிர்பார்ப்பாகவும் நம்பிக்கையாகவும் மாற்றியிருக்கிறது.

சமூக மாற்றத்திற்கான அவரது அழுத்தமான குரல், இந்தச் சமூகத்தை மாற்றும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்திருக்கிறது.
​அவரது இந்த அரசியல் கட்டமைப்பும், தேர்தல் வியூகங்களும் இந்த மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தான் மிக நுட்பமாக அமைந்திருந்தன.

இப்படிப்பட்ட எதார்த்தச் சூழலில் தான், சிலர் அவரது எழுச்சியை ஜாதகம், கிரக நிலை, ஜோதிடம் என்று ஒரு தற்காலிக மாயையாகக் கட்டமைக்க முயல்கிறார்கள்.

உலக வரலாற்றிலும் சரி, நம் நாட்டு வரலாற்றிலும் சரி, அதிகாரத்திற்கு வந்த மாபெரும் தலைவர்களான ஆபிரகாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில், மார்ட்டின் லூதர் கிங், ஏன் இந்திரா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்கள் யாரும் ஜாதகம், ஜோதிடம் என்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் வரவில்லை. அவர்களுடைய வெற்றி என்பது, உலகியல் ரீதியாக உருவான ஒரு மாற்றுச் சிந்தனையின் வெளிப்பாடு; மக்களிடம் ஏற்கனவே மாற்றத்திற்கான சிந்தனை இருந்தது, அந்தச் சிந்தனைக்கு அவர்கள் காட்டிய கூட்டு நம்பிக்கையின் வெளிப்பாடு தான் அந்த வெற்றி.

இந்த உலகியல் ரீதியான, மாற்றுச் சிந்தனையின் கோணத்தில் தான் நாம் ஜோசப் விஜய் அவர்களின் அரசியல் எழுச்சியையும், அதன்பின்னால் இருக்கும் மக்களின் நம்பிக்கையையும் பார்க்க வேண்டும். இந்த மக்களின் நம்பிக்கையே இந்த மாற்றம் ஒரு மாபெரும் விஸ்வரூப வெற்றியாக மாறி இருப்பதற்குக் காரணம். இதை ஒரு சரித்திர வெற்றிக்கான நிகழ்வாகவே இந்த வெற்றி அமைந்திருக்கிறது.

ஆனந்த் – இன் மீடியா

Wisdom News

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

புதிய அரசியல் பார்வை

*சாமானிய மக்களை ஏமாற்றும் அரசியல் சூழ்ச்சிகள்* 

  • April 25, 2026
 *அரசியல் நாகரிகம் என்பது மருந்துக்கும் இல்லாத ஒரு சூழலில்,* நடிகர் விஜய்யை “பாஜகவின் கைக்கூலி” என்று முத்திரை குத்துவது அப்பட்டமான அநீதி மற்றும் அரசியல் சூழ்ச்சி. விஜய்
புதிய அரசியல் பார்வை

புதிய மாற்றத்தையும் புதிய சமூகத்தையும் உருவாக்கும் தேர்தல்” 

  • April 25, 2026
நாம் பெரும்பாலும் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குப்பதிவு நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிக் கவலைப்படுகிறோம். அதன் பிறகு யார் ஆட்சி செய்கிறார்கள், என்னென்ன ஊழல்கள் நடக்கின்றன, லஞ்சம்,
Translate »