தளபதி விஜய் போர்க்களம்: இது வெறும் தேர்தல் அல்ல ஒரு தலைமுறையின் மாற்றத்தின் எழுச்சி
இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல; இது மாற்றத்தை நிர்ணயிக்கும் நேரடி யுத்தம்.
இந்தத் தேர்தல் என்பது வெறும் வாக்குப் பதிவு அல்ல; இது ஒரு வரலாற்று யுத்தம். பல தசாப்தங்களாகத் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் நீதிக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களின் கடைசி நம்பிக்கை தளபதி விஜய். மக்களிடம் ஒரு பெரும் எழுச்சி இருக்கிறது, ஆனால் அந்த எழுச்சியை வெற்றியாக மாற்ற வேண்டிய பொறுப்பு களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மட்டுமே உண்டு. காலம் மிகக் குறைவு, ஆனால் இலக்கு மிகப் பெரியது. இந்தச் சூழலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு போர் வீரனைப் போலச் செயல்பட வேண்டும்.
இன்று இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் — மாற்றத்தை நம்பி தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற திரண்டு நிற்கிறார்கள்.
அந்த நம்பிக்கை வெறும் உணர்ச்சி அல்ல; அது ஒரு பொறுப்பு. அந்த பொறுப்பை வெற்றியாக மாற்றுவது தலைமை மட்டுமல்ல, களத்தில் இருக்கும் உறுப்பினர் கள் செயல்பாடே தீர்மானிக்கும்.
ஒரு வேட்பாளர் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது — அவரோடு களத்தில் நிற்கும் ஒவ்வொரு உறுப்பினரும் சாதாரண ஆதரவாளர்கள் அல்ல; அவர்கள் இந்த இயக்கத்தின் உயிர். அவர்களுடன் பாரபட்சமும் இன்றி பழக வேண்டும். அவர்களின் பெயர், தொழில், பணி — இதை அறிந்து கொண்டு நேரடியாக உரையாட வேண்டும். காலையும் மாலையும் குழுவாக சந்தித்து பேச வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்டு மதிப்பளிக்க வேண்டும். இதுவே உண்மையான தலைமைத் திறன்.
உற்சாகம் என்பது கூட்டங்களில் மட்டும் உருவாகாது; அது உறவுகளில் உருவாகும். களப்பணியில் இருக்கும் உறுப்பினர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவது, அவர்களுக்கு உணவு வழங்குவது, அவர்களோடு உட்கார்ந்து சாப்பிடுவது — இது ஒரு மனிதநேய செயல் மட்டுமல்ல; இது ஒரு வலுவான அரசியல் வியூகம். ஒவ்வொரு நாள் பணி முடிந்ததும் “நன்றி” சொல்லி கைகுலுக்க வேண்டும். “நன்றாக செய்கிறீர்கள்” என்ற ஒரு வார்த்தை — இன்னும் பலரை களத்தில் கொண்டு வரும் சக்தி உடையது.
களப்பணி ஆதாரத்துடன், தாக்கத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளை வீடியோ, புகைப்படம் மூலம் பதிவு செய்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நீர்நிலைகள் அழிவு, சுகாதாரமின்மை, நிறைவேறாத திட்டங்கள், எதிர்க்கட்சியின் செயலிழப்பு — இவை அனைத்தையும் தெளிவாக வெளிக்கொணர வேண்டும். சமூக ஊடகங்கள், தெரு பிரச்சாரம், நேரடி சந்திப்பு — எல்லா தளங்களிலும் ஒரே செய்தி ஒலிக்க வேண்டும். அதே நேரத்தில் வேட்பாளரின் பெயரும் சின்னமும் மக்களின் மனதில் பதியும் அளவுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டும்.
இந்த தேர்தலில் மிக முக்கியமான சக்தி பெண்கள். பெண்கள் உற்சாகமாக களத்தில் இறங்கினால் தான் ஒரு இயக்கம் உயிரோடு இருக்கும். பெண்கள் வீடு வீடாக சென்று மக்களோடு உரையாட வேண்டும். பெண்கள் பெண்களோடு பேசும் போது நம்பிக்கை வேகமாக உருவாகும். அதனால் பெண்களை மையப்படுத்தி செயல் திட்டங்கள் அமைக்க வேண்டும்; அவர்களுக்கு தனி குழுக்கள் அமைத்து பொறுப்புகளை வழங்க வேண்டும்.
வெற்றி என்பது திட்டமிடப்பட்ட செயல்பாட்டின் பலன். உறுப்பினர்களை சிறு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் தனி பொறுப்புகளை வழங்க வேண்டும். எந்த பகுதியை யார் கவனிக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தினசரி “களப்பணி அறிக்கை” தயாரித்து, யார் என்ன செய்தார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். செயல்படுபவர்களை பாராட்ட வேண்டும்; அது மற்றவர்களுக்கு ஊக்கமாகும். பெண்கள் குழு, இளைஞர்கள் குழு, சமூக ஊடக குழு — இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடு இருந்தால் தான் குறுகிய காலத்தில் பெரிய தாக்கம் உருவாகும்.
பிரச்சாரம் உயிரோடு இருக்க வேண்டும். ஒலிபெருக்கி ஒரு சாதனம் அல்ல; அது மக்களோடு பேசும் குரல். பெண்கள், இளைஞர்கள் நேரடியாக குரல் கொடுக்க வேண்டும். கிரியேட்டிவ் அணுகுமுறை இருந்தால் மக்கள் கவனம் ஈர்க்கப்படும்.
ஒரே ஹேஷ்டேக், ஒரே செய்தி, ஒரே திசை — சமூக ஊடகங்களில் ஒருங்கிணைந்த தாக்கத்தை உருவாக்கும்.
தோற்றால் ஒரு தலைமுறையின் மாற்றம் தள்ளிப் போகும். ஒவ்வொரு நொடியும் வெற்றியை மட்டுமே சுவாசியுங்கள். வேட்பாளர்கள் தங்கள் தொண்டர்களுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கினால், இந்தச் சிறு கால இடைவெளியிலும் ஒரு மாபெரும் வெற்றி உறுதி. இது கடமை மட்டுமல்ல, வரலாற்றில் பதிய வேண்டிய தடம்.
இந்த நேரத்தில் மிகப்பெரிய அபாயம் ஈகோ. “நான் பெரியவன், நீ பெரியவன்” என்ற சிந்தனை இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தும். பதவி முக்கியம் அல்ல; பணி தான் முக்கியம்.
இந்தத் தேர்தல் களம் ஒரு சாதாரண அரசியல் மாற்றம் அல்ல; இது ஒரு தலைவனின் தியாகத்திற்கும், அவரோடு பயணிக்கும் தொண்டர்களின் உண்மைத் தன்மைக்கும் நடக்கும் சோதனை. “என்னை நம்பி வந்த மக்களுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயார்” என்று மேடைதோறும் முழங்கும் தளபதி விஜய், அதை வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை. தன் உச்சகட்ட புகழையும், திரையுலகப் பயணத்தையும் தூக்கி எறிந்துவிட்டு களத்திற்கு வந்திருக்கிறார் என்றால், அது அவர் மக்கள் மீது வைத்துள்ள நன்றிக் கடனே அன்றி வேறல்ல.
ஆரம்ப காலத்தில் இருந்த இருந்து அவருக்கு பலர் துரோகம் செய்தபோதிலும், அவரை ஒடுக்க நினைத்த அரசியல் சூழ்ச்சியையும் பொருட்படுத்தாமல், அதை ஒரு பெரிய விஷயமாகப் பார்க்காமல், ஒரு சிறந்த படைத் தளபதியைப்போல ஒவ்வொரு நாளும் புதிய வீரியத்துடன் அவர் முன்னோக்கி நகர்கிறார்.
தன் தற்போதைய கட்சி உறுப்பினர்களை மட்டுமே நம்பி அவர் களம் இறங்கியிருக்கிறார். ஆனால், தலைவன் காட்டும் அந்த முழு ஈடுபாடும், உண்மையும் இன்று அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களிடம் இருக்க வேண்டும் என்பதே தலைவனின் எதிர்பார்ப்பு.
இது ஒரு வாய்ப்பு அல்ல; இது ஒரு பொறுப்பு.
அந்த பொறுப்பை உணர்ந்து, ஒற்றுமையுடன், ஒழுங்குடன், உற்சாகத்துடன் செயல்பட்டால் — வெற்றி உறுதி.
ஆனந்த்
IN MEDIA





