முக்கிய செய்திகள்

பலிபீடத்தின் புனிதம்: ஆன்மீகப் பணியா? அரசியல் ஆதாயமா?

ஆடு எங்கே இருக்கிறதோ, அங்கே மேய்ப்பனின் வாசனை இருக்க வேண்டும்” என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்க குருவானவர்கள் வெறும் வழிபாட்டுச் சடங்குகளை நடத்துபவர்கள் மட்டுமல்ல; அவர்கள் சமூகத்தின் மனசாட்சியாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, அன்பின் உயிர்ப்பாக நிற்க வேண்டியவர்கள். குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் பொறுப்பில் இருக்கும் குருக்கள், வருங்காலத் தூண்களான இளைஞர்களுக்கு திசைகாட்டும் ஒளியாக இருக்க வேண்டியவர்கள். பலிபீடம் அதிகாரத்தை மகிழ்விக்க உருவான மேடையல்ல; அது அதிகாரத்தை நேருக்கு நேர் கேள்வி கேட்கும் இடம். ஆனால் இன்று, அந்தப் பலிபீடங்கள் அரசியல் மேடைகளாக மாறுவதையும், குருக்களின் உரைகள் அன்பை அல்ல, வன்மத்தை விதைப்பதையும் பார்க்கும்போது, அது வேதனையல்ல – அதிர்ச்சி.

பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் தந்தை ரூபஸ் போன்றவர்களின் அணுகுமுறை, இறைமக்களுக்கு அரசியல் தெளிவை அளிப்பதற்குப் பதிலாக, ஒருதலைப்பட்சமான கருத்துகளைத் திணிக்கும் செயலாகவே தெரிகிறது.

கரூர் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கை, நேரில் பார்த்தது போலவும், ஒரு கட்சியின் தலைவரை (விஜய்) நேரடியாகக் குற்றம் சாட்டிப் பேசுவதும் ஒரு குருவானவரின் அற செயலா? அரசியலா? விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கை வைத்துக்கொண்டு, ஒரு தனிமனிதரை ‘கொலையாளி’ என்று முத்திரை குத்த உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இது ஆன்மீகப் பணியல்ல, இது அப்பட்டமான அதிகார அரசியலின் கைக்கூலித் தனம்.

​அரசுக்கு ஆதரவாகப் பேசுவதன் மூலம் நீங்கள் பெறப்போகும் சலுகைகள் தற்காலிகமானவை. ஆனால், உங்கள் பேச்சால் சிதறிப்போகும் இறைமக்களின் நம்பிக்கையும், இளைஞர்களின் வெறுப்பும் நிரந்தரமானவை.

. நீதிமன்றம் தீர்ப்பளிக்காத நிலையில், பலிபீடத்திலிருந்து தீர்ப்புகளைப் பறைசாற்றுவது இறைப்பணி அல்ல; அது ஆபத்தான அரசியல் பரப்புரை. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் இறைவார்த்தையாக மாறும் போது, அந்தப் பலிபீடத்தின் புனிதமே காயப்படுத்தப்படுகிறது.

திருச்சபையில் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த இறைமக்கள் உள்ளனர் – திமுக, அதிமுக, தவெக, பாஜக என. ஒரு குருவானவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்பை எடுத்துக் கொண்டு பேசும்போது, மாற்றுச் சிந்தனை கொண்ட இறைமக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், அவமதிக்கப்படுகிறார்கள்.

இயேசுவின் போதனை ஒருபோதும் “யாருக்கு எதிராக?” என்பதிலிருந்து பிறக்கவில்லை; அது எப்போதும் “யாருக்காக?” என்பதிலிருந்தே பிறந்தது. அந்த அடிப்படையிலேயே இந்தப் பாகுபாடு சமூக ஒருங்கிணைப்பைச் சிதைக்கிறது.

தந்தை ஸ்டேன் சாமி – பழங்குடி மக்களின் உரிமைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மகான். அவரை ‘மாவோயிஸ்ட்’ என்று முத்திரை குத்தி மத்திய அரசு சிறையில் வாட்டியபோது, ஒட்டுமொத்த கத்தோலிக்க உலகமும் கதறியது.

ஆனால், அதே ஸ்டேன் சாமிக்குச் சேலத்தில் சிலை வைக்க சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் முயன்றபோது, அதைத் தடுத்த தமிழக அரசின் (திமுக) செயலை இந்த குருவானவர்கள் ஏன் கண்டிக்கவில்லை? ஒரு சமூக ஆர்வலரின் சொந்த இடத்தில் சிலை வைப்பதற்கே அரசு தடையாக இருந்து, நீதிமன்றம் தலையிட்டு “சொந்த விருப்ப இடத்தில் சிலை வைக்க தடை விதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தபோது கூட, அரசை நோக்கி ஒரு கேள்வி எழவில்லை. அந்த மௌனம் ஏன்? ஒரு இடத்தில் உரக்கப் பேசும் குரல், மற்றொரு இடத்தில் மௌனமாக மாறும்போது, அந்த மௌனமும் ஒரு அரசியல் நிலைப்பாடாகவே புரியப்படுகிறது. தங்களுக்கு ஏற்ற ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு, மறுபுறம் நடக்கும் அநீதிகளைப் பார்க்க மறுப்பது ‘சிறுபான்மை சலுகைகளுக்காகவா?’ அல்லது ‘பணப்பலன்களுக்காகவா?’ என்ற கேள்வியை சாதாரணக் கத்தோலிக்கர்களின் மனதில் விதைக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சில நேரங்களில் கிறிஸ்தவ நம்பிக்கைகளை விமர்சித்தபோது, இதே குருவானவர்கள் மௌனம் காத்தது ஏன்? சிலர் அவருக்கு ஆதரவாகக் கூடப் பேசுகிறார்கள். கொள்கையின் அடிப்படையில் அல்ல, சந்தர்ப்பத்தின் அடிப்படையில் அரசியலை அணுகுவது, திருச்சபையை ஒரு கருவியாக மாற்றுகிறது; அது குருத்துவத்தின் மாண்பை மெதுவாக சிதைக்கும் செயல்.

கிறிஸ்தவ இளைஞர்கள் இன்று அரசியல் விழிப்புணர்வைத் தேடுகிறார்கள். அவர்களுக்குத் தேவை அரசியல் தெளிவு; அரசியல் சார்பு அல்ல. பலிபீடத்திலிருந்து வரும் பாகுபாடான மொழி, அவர்களின் அரசியல் பார்வையை மட்டுமல்ல, திருச்சபை மீது வைத்த நம்பிக்கையையும் உடைக்கிறது.

திருச்சபைக்குள் இன்றும் தலைவிரித்தாடும் சாதிய பாகுபாடுகளைக் களைய எந்த குருவானவர் வீதிக்கு வந்து நின்று போராடுகிறார்?

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அவர்கள் தினமும் அனுபவிக்கும் அநீதிகளுக்காகவும் பலிபீடத்திலிருந்து குரல் எழ வேண்டும். அந்தக் குரல் ஒருவரை அல்லது ஒரு கட்சியை குறிவைக்கும் வன்மமாக இருக்கக் கூடாது; அது மனித மரியாதையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

வரலாறு எச்சரிக்கிறது: எந்த நாடுகளில் திருச்சபை ஆளும் வர்க்கத்துடன் கைகோர்த்து மக்களை அடிமைப்படுத்தியதோ, அங்கெல்லாம் அது தன் செல்வாக்கை இழந்தது. தமிழக கத்தோலிக்கத் திருச்சபை அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது.

ஆயர் பேரவை (TNBC) உடனடியாகத் தலையிட்டு, பலிபீடத்தின் புனிதத்தைக் காக்க வேண்டும். குருக்கள் அரசியல் மேடைப் பேச்சாளர்களாக மாறுவதைத் தடுக்க வேண்டும். சாதி, கட்சி கடந்த ஒரு ஆன்மீகச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய காலத்தின் கட்டாயம். உண்மையான சமூக நீதி என்பது அதிகாரத்திற்கு ஜால்ரா போடுவதல்ல;

​”இறுதியாக நாம் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான்: குருத்துவத்தின் மாண்பு என்பது ஆளும் வர்க்கத்தின் காலடியில் கிடப்பதல்ல, மாறாக ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதில் இருக்கிறது. தந்தை ரூபஸ் போன்றவர்களின் தன்னிச்சையான, வன்மம் நிறைந்த பேச்சுகள் கத்தோலிக்கத் திருச்சபையின் பல நூற்றாண்டுக் கால நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கின்றன.

​ஒரு குருவானவர் பலிபீடத்தில் ஏறும் போது, அவர் சுமந்து செல்வது விவிலியத்தின் போதனைகளைத்தானே தவிர, ஒரு அரசியல் கட்சியின் கொள்கை அறிக்கையை அல்ல.

​ஆயர் பேரவையே… இன்னும் எத்தனை காலத்திற்கு இத்தகைய அநீதியான பேச்சுகளைக் கண்டும் காணாமல் இருக்கப் போகிறீர்கள்? மந்தையைப் பாதுகாக்க வேண்டிய மேய்ப்பர்களே ஓநாய்களாக மாறி அரசியல் வேட்டையாடுவதை அனுமதிக்காதீர்கள். திருச்சபை என்பது அரசுகளுக்குச் சேவை செய்யும் நிறுவனம் அல்ல; அது இறைவனுக்குச் சேவை செய்யும் புனித தலம். இந்தத் தலம் அரசியல் சாயத்திலிருந்து விடுபட வேண்டும். இல்லையென்றால், வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது.

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

முக்கிய செய்திகள்

பாரபட்சமில்லா பக்தி திருச்சி ஐயப்பன் கோவில் மக்கள் முன்மாதிரி

திருச்சி ஐயப்பன் திருக்கோவில் துவங்கிய காலம் முதல் இன்றுவரை ஏழை பணக்காரன் உயர்பதவி வகிப்பவர் என சிறப்பு வழி படி தரிசனம் போன்ற பாரபட்சம் இல்லாமல் பல்லாயிரம்
செய்திகள் முக்கிய செய்திகள்

“ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு தடுமாறும் நிலை – அரசு இடையிலான நிதி மோதல் காரணம்”

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான மாணவர் சேர்க்கை
Translate »