“உயிர்சூழல் புரட்சி – தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை & Aicuf ன் பசுமைப் பயணம்
தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை (CRI Tamil Nadu)
மற்றும் Aicuf, பசுமை இயக்கங்கள்
முன்னெடுத்து வரும் “பசுமைப் பயணம் 2025” நவம்பர் 5 முதல் 20 வரை நடைபெற உள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை 720 கிலோமீட்டர் தூரம் கடந்து செல்லும் இந்த மாபெரும் சைக்கிள் பயணம், மனிதன் – இயற்கை உறவின் அடித்தளத்தை நினைவூட்டும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முயற்சியாகும்.
உயிர்சூழலின் அடிப்படை நரம்பாக விளங்குவது மரம். மனிதன் மூச்சு விடும் காற்று முதல் மழை, நிலம், விலங்குகள், பறவைகள் வரை அனைத்திற்கும் மரம் தான் தாய். மரம் இல்லாத நிலம், உயிரற்ற உடலைப் போன்றது. ஒரு மரம் வளர்வதற்காக நூறு கைகளின் உழைப்பு, சிந்தனை, பொறுப்பு தேவைப்படுகிறது. இதன் ஆழம் புரிந்தால்தான் உயிரின் அர்த்தத்தை நாம் உணர முடியும். இந்தப் புரிதலுடன் உயிர்சூழலை மீட்டெடுக்க ஒரு வரலாற்று முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர் தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை (CRI Tamil Nadu & Aicuf ). முன்னெடுத்துள்ள இந்த “மரம் நடுதல் இயக்கம்” ஒரு சாதாரண சுற்றுச்சூழல் நிகழ்ச்சி அல்ல — இது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய மாபெரும் உயிரியல் புரட்சி.
இன்று உலகம் எதிர்கொள்ளும் உச்சமான சவால் — நீர் தட்டுப்பாடு, வெப்பமயமாதல், உயிரின அழிவு — இவற்றின் மையக் காரணம் மரங்களின் குறைபாடே. இதனை உணர்ந்த தமிழ்நாடு சிஆர்ஐ & Aicuf “மாற்றத்தை நோக்கும் மதிவெண்டி விழிப்புணர்வுப் பயணம்” எனும் பெயரில் பசுமைப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பயணம் கன்னியாகுமரி, நாகர்கோவில், துத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாகச் சென்று சென்னையில் நிறைவு பெறும். ஒவ்வொரு நகரத்திலும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், மக்கள் இயக்கங்கள் இணைந்து பங்கேற்று, மரம் நடுதல், உயிர்சூழல் மீட்டெடுப்பு, நீர் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
மரம் நட்டல் என்பது ஒரு சுற்றுச்சூழல் செயல் மட்டுமல்ல — அது நம் இருப்பைத் தாங்கும் கடமை. மரம் உயிரின் மொழி; அதை புரிந்துகொள்ளும் ஒவ்வொருவரும் உயிரை நேசிக்கத் தொடங்குவார்கள். சிஆர்ஐ தமிழ்நாடு எடுத்திருக்கும் இந்த உயிர்சூழல் விழிப்பு இயக்கம் ஒரு புதிய பரிணாமத்தின் தொடக்கம். இது மதமோ, அரசியலோ அல்ல — இது மனிதனின் விழிப்புணர்வு
அனைத்து கல்வி நிறுவனங்களும், இளைஞர் இயக்கங்களும், சமூக அமைப்புகளும் இம்முயற்சியில் பங்கெடுத்து, “பசுமைப் பயணம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.
தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை & Aicuf இணைந்து நடத்தும் இந்த மாபெரும் முயற்சி பாராட்டுக்குரியது; இது மனித குலத்தின் எதிர்காலத்துக்கான உயிர்ப்புணர்வின் புதிய தொடக்கம்.
பசுமைப் பயணம் – இயற்கையை காப்போம், வாழ்வை மீட்டெடுப்போம்!




