நிஜங்கள்

“கொடூர மனங்களும் மரித்துப் போகும் தெய்வங்களும்…”

மனித இனம் முழுவதும் ஒரு குழந்தையின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் ஞானிகளும், அரிய பெருமக்களும், அனைத்து மதங்களும் நமக்குச் சொல்லும் ஆழமான சித்தாந்தம்.

ஏன் அந்தப் பிஞ்சு மனதைக் கொண்டாடுகிறார்கள்? ஒரு குழந்தையின் மனம் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ஓர் அழகு தெய்வம். தன்னைச் சுற்றி நடப்பவற்றை ஆச்சரியத்தோடும், மாசற்ற ஆர்வத்தோடும் பார்க்கும் அந்தச் சிறு உள்ளத்தில் வஞ்சகத்தின் சிறு கீறலோ, தவறான சிந்தனையோ துளிகூட இருக்காது.
​அதனால்தான் குழந்தைகளை ‘மாசில்லா தெய்வங்கள்’ என்று கொண்டாடுகிறோம்.

குழந்தை வேலனாகவும் குழந்தை இயேசுவாகவும், இறைவனையே பிள்ளை உருவில் கண்டு நாம் வழிபடுவதும் அந்த மாசற்ற தன்மையைப் பார்த்து வியந்துதான். “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், விண்ணரசு அவர்களுக்கு உரியது” என்று இயேசு கிறிஸ்து சொன்னதும், நமது கிராமங்களில் ஒரு முக்கிய முடிவெடுக்கவோ அல்லது சீட்டுக் குலுக்கிப் போடவோ கள்ளமில்லாச் சிறு குழந்தைகளை அழைப்பதும் இறை நம்பிக்கையில்தான்.
​ஆனால், எந்த வஞ்சகமும் அறியாத இந்த மாசற்ற தெய்வங்கள், இன்று நம் கண்முன்னேயே சமூகத்தில் சிலரால் கொடூரமாகச் சிதைக்கப்படும்போது மனித மனம் பதைபதைத்துத் துடிக்கிறது. எந்த அநீதியும் தீண்டாத அந்தத் தூய்மையான உடல்கள் வக்கிரங்களுக்கு இரையாகும் செய்தியைக் கேட்கும்போது, நாம் எத்தகைய இருண்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற பெருந்துயரம் நம்மைச் சூழ்கிறது. இது ஏதோ எங்கோ, யாருக்கோ நடக்கும் ஒரு குற்றமல்ல; இது இந்தச் சமூகம் தனக்குத் தானே இழைத்துக் கொள்ளும் ஈவிரக்கமற்ற அநீதி. இரக்கமற்ற இந்தக் கொடூரப் பார்வை மனிதனுக்குள் எப்படி வந்தது? மனித மாண்பும், அறமும் செத்துப்போய், இப்படி ஒரு கொடூரனாக மனிதனின் வக்கிர புத்தி எப்படி மாறியது?
​இதன் தொடக்கத்தை அறிய நாம் குடும்பம் என்னும் அமைப்பிற்குள் செல்ல வேண்டும். குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது. ஆனால், இன்று பல பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்வது இல்லை. ‘பெற்றோர்’ என்ற அதிகாரப் போர்வையில், தங்களுக்குப் பிடித்தமானதை மட்டுமே குழந்தைகளின் மீது திணிக்கிறார்கள்.

ஜான் பவுல்பி (John Bowlby) போன்ற உளவியல் அறிஞர்கள் தங்களின் ‘பற்றுதல் கோட்பாட்டில்’ (Attachment Theory) இதைத்தான் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் ஒரு பாதுகாப்பான, அன்பான குடும்பச் சூழல் (Secure Attachment) கிடைக்காதபோது, குழந்தைகளின் மனம் சிதைவடைகிறது. வீடுகளுக்குள் அரங்கேறும் வன்முறைகள், பெற்றோரின் புறக்கணிப்பு, கிடைக்காத அன்பு ஆகியவை அந்தச் சிறு நெஞ்சங்களில் வன்மமாகப் படிகிறது.

உளவியலாளர் ஆல்பர்ட் பண்டூரா (Albert Bandura) தனது ஆய்வுகளில் கூறுவது போல, சிறுவயதில் ஒரு குழந்தை எந்த வன்முறையைப் பார்க்கிறதோ, அல்லது எத்தகைய கையறு நிலையை அனுபவிக்கிறதோ, அதைத் தன் ஆழ்மனதில் புதைத்து வைக்கிறது. அந்த இருண்ட வக்கிரம், அவர்கள் பெரியவர்களாகும்போது, தங்களை எதிர்க்கத் திராணியற்றவர்களிடமும், அப்பாவிச் சிறு குழந்தைகளிடம் ஒரு மூர்க்கத்தனமான அதிகாரமாக வெளிப்படுகிறது.
​மேலும் இன்று கட்டுப்பாடின்றி பெருகிவிட்ட ஆபாச வலைதளங்கள். இவை வெறும் காணொளிகள் அல்ல; மனித மூளையைச் சிறுகச் சிறுகச் சிதைத்து, சக மனிதனின் வலியை உணரும் மாண்பைக் கொல்லும் டிஜிட்டல் நஞ்சு. மனித உறவுகளின் புனிதத்தைக் குலைத்து, முறையற்ற உறவுகளை நியாயப்படுத்தும் இந்தப் பதிவுகள் தனிமையில் இருப்பவர்களின் மனநிலையை முற்றிலுமாகப் பிறழச் செய்கின்றன.
​இது எப்படி நடக்கிறது என்பதைப் பிரபல மருத்துவ உளவியலாளர் டாக்டர். விக்டர் கிளைன் (Dr. Victor Cline) நெஞ்சைப் பிளக்கும் நான்கு நிலைகளாகப் (Four-Step Progression) பிரிக்கிறார்:
​அடிமையாதல் (Addiction): தனிமையைப் போக்கத் தொடங்கும் இந்தப் பழக்கம், அவர்களை அறியாமலேயே ஒரு மீள முடியாத அடிமைத்தனத்திற்குள் தள்ளுகிறது.


​மரத்துப்போதல் (Desensitization): தொடர்ந்து இந்த ஆபாசங்களைப் பார்ப்பதால், நிஜ வாழ்க்கையின் அன்போ, சாதாரண மனித உறவுகளோ அவர்களுக்கு எந்த உணர்வையும் தராமல் மனிதத்தன்மை மரத்துப்போகிறது.

உச்சத்தைத் தேடுதல் (Escalation): சாதாரண காட்சிகள் அவர்களுக்குப் போதை தருவதில்லை. இன்னும் கொடூரமான, மூர்க்கத்தனமான, இயற்கைக்கு முரணான வக்கிரங்களைத் தேடி அவர்களின் மனம் வெறிபிடித்து அலைகிறது.


​நிஜத்தில் செயல்படுத்துதல் (Acting Out): இதுதான் மிகக் கொடூரமான இறுதி நிலை. திரையில் பார்த்த அந்த வக்கிரங்களை நிஜத்தில் செய்துபார்க்கத் துடிக்கிறார்கள். அந்த மூர்க்கத்தனத்தை வயது வந்தவர்கள் எதிர்க்கக்கூடும் என்பதால், தங்களை எதிர்க்கத் திராணியற்ற, அப்பாவிச் சிறு குழந்தைகளைத் தங்களின் பரிசோதனைக் கூடமாக மாற்றுகிறார்கள்.

நரம்பியல் உளவியலாளர் நார்மன் டாய்ட்ஜ் (Norman Doidge) இதை இன்னும் ஆழமாக விளக்குகிறார். “தொடர்ச்சியான ஆபாசப் பயன்பாடு, மனித மூளையின் கட்டமைப்பையே (Brain Wiring) மாற்றி அமைத்துவிடுகிறது. இன்னொரு உயிரின் வலியைப் பார்த்துத் துடிக்கும் மனித நேயத்தை (Empathy) மூளையிலிருந்து அது முற்றிலுமாக அழித்துவிடுகிறது” என்கிறார் அவர். அதனால்தான், ஒரு பச்சிளங் குழந்தை வலியால் துடிக்கும்போதும், இந்தக் கொடூரர்களின் மனம் ஈவிரக்கமின்றிச் செயல்படுகிறது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பிரபல உளவியலாளர் பிலிப் ஜிம்பார்டோ (Philip Zimbardo), இந்த அதீத இணைய மற்றும் ஆபாசப் பயன்பாட்டால் இன்றைய தலைமுறை எப்படி நிஜ உலக உறவுகளிலிருந்து துண்டிக்கப்பட்டு, உணர்வற்ற சமூகமாக (Social Disconnection and Arousal Addiction) மாறி வருகிறது என்பதைத் தனது ஆய்வுகளில் எச்சரிக்கிறார்.

இதோடு போதைக் கலாச்சாரமும் கைகோர்க்கும்போது, அது ஒரு பேரழிவாக மாறுகிறது. போதை உள்ளே செல்லும்போது, மூளையில் உள்ள ‘சரி-தவறு’ என்பதைப் பிரித்தறியும் கட்டுப்பாடு உடைகிறது. தன் சூழலை மறந்து, தன்னை இழந்து நிற்கும் அந்தத் தருணத்தில், அவனுள் உறங்கிக் கிடந்த அந்த வக்கிர மிருகம் முழுமையாக விழித்துக்கொள்கிறது. இந்தப் போதைக் கலாச்சாரமும், வலைதள வக்கிரங்களும் முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் தார்மீகக் கட்டாயமாகும்.


​இந்தச் சீரழிவைத் தடுக்க, குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே ஊடகப் பொறுப்புணர்வை (Media Literacy) நாம் கற்றுக் கொடுத்தாக வேண்டும். எந்தப் பதிவைப் பார்க்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்ற பகுத்தறிவை, அவர்களின் கைகளில் அலைபேசியைக் கொடுக்கும்போதே சொல்லித்தர வேண்டும். மார்ஷல் மெக்லூஹான் (Marshall McLuhan) போன்ற உலகப் புகழ் பெற்ற ஊடக ஆய்வாளர்கள், “ஊடகமே ஒரு செய்தியாக மாறி மனதை ஆக்கிரமிக்கும்” என்று அன்றே எச்சரித்தார்கள். அந்த அபாயம் இன்று நடந்து கொண்டிருக்கிறது. எனவே, டிஜிட்டல் உலகில் எதை எப்படி அணுக வேண்டும் என்ற பொறுப்புணர்வைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சக தோழர்களும் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும்.


​இதையெல்லாம் விட முக்கியமானது, உறவுகளின் மாண்பைச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது. பாரம்பரியக் குடும்ப உறவு முறைகளையும், அதிலிருக்கும் புனிதத்தையும் தாய் தந்தையர் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு இந்த சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பது காலத்தின் கட்டாயம். பெண் இனத்தின் மாண்பையும், மதிப்பையும் போற்றும் விதமாக அநேக சமூகக் கதைகளும், கருத்துக்களையும் கலந்துரையாடல் மூலம் அவர்களுக்குப் புகட்ட வேண்டும்.
​இந்த மாபெரும் கடமையில், பள்ளிக்கூடங்களின் பங்கும் மறுக்க முடியாதது. கல்வி என்பது வெறும் மதிப்பெண் எடுப்பதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் மட்டுமான ஒரு எந்திரத்தனமான செயல்பாடு அல்ல. நன்றாகப் படிக்கவில்லை என்பதற்காக, மதிப்பெண் பெறாத குழந்தைகளைப் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ அல்லது கல்வி நிறுவனங்களோ மட்டப்படுத்தவோ, தரைக்குறைவாகப் பார்க்கவோ கூடாது. அப்படி கீழ்த்தரமான பார்வையில் அணுகாமல், அவர்களை உளவியல் ரீதியாகப் பார்த்து, அவர்கள் உன்னத மனிதர்களாக உருவெடுக்க வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் இந்தச் சமூகத்தின் பொறுப்பாளர்கள், நாளை இந்தச் சமூகத்தைக் காக்கக் கூடியவர்கள், கல்வித் துறையில் மட்டுமல்லாமல் வேறு பல துறைகளிலும் சாதிக்க வல்லவர்கள் என்ற உயர்ந்த பார்வையில் அவர்களை அணுக வேண்டும்.

இதற்கான முழுப் பொறுப்பையும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும், அரசும் ஏற்றுக்கொண்டு, இதை வெறும் பேச்சோடு நிறுத்தாமல் ஒரு செயல்முறை வடிவமாக உருவாக்க வேண்டும்.
​மாணவர்களுக்கு அறநெறிச் சிந்தனையையும், மாசற்ற ஒரு சமூகக் கல்வியையும் போதிக்க வேண்டும். சமூக ஒழுக்க நெறியைப் பாடத்திட்டத்தில் கொண்டு வருவதோடு நின்றுவிடாமல், மனித நேயத்தை ஊக்குவிக்கும் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் சக மனிதர்களோடு அவர்கள் உரையாடுவதை வழமையாக்க வேண்டும். ஒரு அறநெறி சார்ந்த சமூகம் மட்டுமே நம்மை இருளிலிருந்து மீட்டு வெளிச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
இந்தச் சமூகத்தைக் குணப்படுத்த வேண்டிய உளவியலாளர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது. ஏதோ சில புத்தகங்களைப் படித்துவிட்டு, சமூகத்திலிருந்து விலகி நின்று புரியாத வார்த்தைகளைக் கக்குவது இங்கு எந்த மாற்றத்தையும் விதைக்காது. அவர்கள் தங்களின் இறுகிய உலகை விட்டு வெளியே வர வேண்டும். மக்களின் வலியை உணர்ந்து, அனுபவ ரீதியாகப் புரிந்துகொண்டு, மிக எளிய, உணர்வுபூர்வமான மொழியில் அவர்கள் மக்களுடன் உரையாட வேண்டும். அப்போதுதான் தடுமாறும் மனங்களைச் சரியான பாதைக்கு அவர்கள் திருப்ப முடியும்.


​உறவுகள் சிதைந்து, தெய்வங்கள் சிறுமைப்படுத்தப்படும் இந்தக் கொடூரம் ஏதோ யாருக்கோ, எங்கோ நடக்கும் பிரச்சனையல்ல. இது நம் கண்முன் எரியும் சமூகப் பிரச்சனை. இதை வேடிக்கை பார்ப்பது நாமே நமக்கான குழியைத் தோண்டிக்கொள்வதற்குச் சமம். அரசு, கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் உளவியலாளர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள் என நாம் அனைவரும் இந்தப் பெருவலியை உணர்ந்து, ஒரு சமூகக் குரலாக ஒன்றிணைய வேண்டும்.

ஆனந்த் – இந்த மீடியா

Wisdom news www.wisdomnews.in

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

நிழல் to நிஜம் நிஜங்கள்

சக்தியின் ஓட்டம்: உடலுறவின் உளவியல் மற்றும் ஆன்மீக பரிமாணம்

  • June 1, 2025
மனித இனத்தில் ஆற்றலின் உச்சத்தை அடையும் ஒரு செயல் உண்டு. அது – உடலுறவு. இதன் மூலம் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரின் பரிணாமவளத்தில் ஒரு பரபரப்பான ஆழம்
நிஜங்கள்

நம்ம நாய்க்கும் கொரோனா வருமா?– உண்மையா இது

  • June 2, 2025
அவர் வீட்டு நாய்க்கு கொரோனா வந்திருக்கிறதாம்!” என்ற வதந்தி ஒரு பகுதியில் பரவியது. அதைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் தலையாட்டினார்கள். ஆனால் சிலர் பயத்துடன் தங்கள்
Translate »