தமிழக காங்கிரஸ்: மக்கள் அரசியலா அல்லது பிம்ப அரசியலா?
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஆழமான வேர்களைக் கொண்ட காங்கிரஸ் பேரியக்கம், இன்று தமிழக மக்களின் உண்மையான தேவைகளையும், அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் பேசத் தவறிவிட்டதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 15 ஆண்டு காலச் செயல்பாடுகளை உற்றுநோக்கினால், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவோ, சமூக நீதிக்காகவோ அல்லது மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கோ அக்கட்சி ஆக்கபூர்வமான எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய நிதர்சனம்.
மக்களின் வாழ்வியல் தரம் உயர்வதற்கான திட்டங்களையோ, இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் கல்வி சார்ந்த சிந்தனைகளையோ முன்வைப்பதை விடுத்து, கட்சித் தலைமையை மையப்படுத்திய போராட்டங்களை மட்டுமே தனது பிரதான அடையாளமாக அக்கட்சி மாற்றிக்கொண்டுள்ளது. ஒரு அரசியல் கட்சி என்பது மக்களின் அன்றாடத் துயரங்களில் பங்கெடுத்து, அவர்களின் குரலாகப் பொதுவெளியில் எதிரொலிக்க வேண்டும். ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியினரோ, தேசியக் கட்சி என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற ஒருவித கற்பனை மனோபாவத்திலேயே செயல்படுகின்றனர்.
களத்தில் வலுவான தொண்டர் படை இல்லாத சூழலில், வெறும் ஒருசில தலைவர்களை மட்டுமே முன்னிறுத்தி ஒரு மாயை வலையத்தை உருவாக்கி மக்களை நம்ப வைக்க முயல்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த இவர்களது பங்களிப்பு என்பது “முட்டை ஜீரோ” என்று சொல்லும் அளவிற்கே தேக்கமடைந்துள்ளது. இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்பச் சிந்திக்கக்கூடிய இளைஞர்களுக்கும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்கும் இடம் தராத வரை, தமிழகத்தில் இக்கட்சியின் உயிர்ப்பு என்பது கேள்விக்குறியே.
தங்கள் சிந்தனைப் போக்கையும், தலைமைத்துவப் பண்புகளையும் மாற்றிக்கொண்டு மக்கள் நலன் சார்ந்த நிஜ அரசியலுக்குத் திரும்பவில்லை எனில், வரும் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி. பிம்ப அரசியலை விட மக்கள் வாழ்வாதார அரசியலே ஒரு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதை காங்கிரஸ் உணர வேண்டிய தருணம் இது.



