திருச்சி புனித வளனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கமம் 2026
திருச்சி புனித வளனார் தன்னாட்சி கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சங்கமம் மற்றும் பொதுக்குழு கூட்டம் “தூலூசு அரினா” அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் மாணவர் மன்றத் தலைவர் திரு. பண்ணை கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கிளை நிர்வாகிகள் காணொளி வாயிலாக இணைந்து, கடந்த ஆண்டில் மாணவர் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் அருள் தந்தை S. மரியதாஸ் சே.ச. வரவேற்புரை ஆற்ற, அதிபர் அருள் தந்தை பவுல் ராஜ் சே.ச. தலைமையுரை வழங்கினார். கல்லூரியின் செயலர் அருள் தந்தை சேவியர் ஆரோக்கியசாமி சே.ச. வாழ்த்துரை வழங்கினார். தலைமை விருந்தினராக ITC நிறுவன துணை செயல் அதிகாரி திரு. D. அசோக் மற்றும் சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில கூடுதல் டி.ஜி.பி திரு. P. ஹரிசேகரன் IPS ஆகியோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
இந்த விழாவின் முக்கிய அங்கமாக, பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த முன்னாள் மாணவர்களுக்கு ‘டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 2026’ விருதுகள் வழங்கப்பட்டன. முன்னாள் துணை வேந்தர் முனைவர் P. ராமசாமி, கல்வி ஆராய்ச்சி அதிகாரி திரு. கே. சிவகுமார், ஆசிரியர் திரு. தேவ அன்பு, அமெரிக்காவைச் சேர்ந்த திரு. ஜான் பிரிட்டோ பீட்டர், திரு. ஜோசப் லிட்வின் பிரான்சிஸ், அயர்லாந்தின் திரு. ஜான் ஆரோக்கிய ரிச்சர்ட், ஐக்கிய அரபு அமீரகத்தின் திரு. ரெக்ஸ் பிரகாஷ் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த திரு. விக்னேஷ்வரன் ஆகியோர் இவ்விருதுகளைப் பெற்றனர்.
சமூக சேவையைப் பாராட்டி, ‘புனித அன்னை தெரசா விருதுகள்’ அருள் சகோதரி லில்லி அல்போன்சா மற்றும் Dr. சாஷ்தா சிவகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கல்லூரியின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக, குறிப்பாக 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வணிகவியல் துறை கட்டிடத்திற்காக முன்னாள் மாணவர்கள் தாராளமாக நிதி வழங்கினர். கல்லூரியின் நுண்கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் மெருகூட்டின. முன்னாள் மாணவர் சங்க துணைச் செயலாளர் பேராசிரியர் விமல் ஜெரால்ட் நன்றியுரை கூற விழா நிறைவுற்றது.





