உயிர் சூழல் காக்க பசுமை புரட்சி பயணம்
திருச்சி மறைமாவட்ட துறவியர் பேரவை முன்னெடுத்த இயற்கையை பாதுகாக்கும் மற்றும் மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “பசுமைப் பயணம்” மற்றும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிறப்பாக தொடங்கி நடத்தப்பட்டது.
முன்னதாக துறவியர் பேரவை (TNCRI) மற்றும் AICUF குழுவினர் மேற்கொண்ட பசுமைப் பயணம் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, 20ஆம் தேதி சென்னையில் நிறைவு பெற உள்ளது. (11.11.2025) அந்த பயணக் குழுவினர் நாகமங்கலம் இறையிறக்க ஆண்டவர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள், முன்பாக திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அம்சம் அருங்கொடை இல்லம் மற்றும் கல்வி நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வீதி நாடகத்தை நிகழ்த்தினர். அதன் பின்னர் அவர்கள் சைக்கிள் பேரணியாக நாகமங்கலத்திற்குச் சென்று விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் இணைந்தனர்.

அவர்களுக்கு பாரம்பரிய பறை இசையின் மூலம் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மறைமாவட்ட ஆயர் ச. ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமை தாங்கி ஆசியுரையாற்றினார். அவர் தனது உரையில், “படைப்பதை பாதுகாப்பதே நம் நோக்கம்” என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்வி சேஷத்திரி மையும் தீபிசானு, IAS, திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) கலந்து கொண்டு, “நாம் ஒவ்வொருவரும் மரங்களையும் இயற்கையையும் மனிதர்களைப் போல் பாவித்து பேணி பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
சிறப்பு பேச்சாளராக திருமதி மா. தமிழரசி, ஓய்வுபெற்ற ஆசிரியை, லால்குடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், இயற்கையும் மரங்களும் மனிதர்களின் வாழ்வியலோடு இணைந்தவை என வலியுறுத்தினார். மரங்களின் மூலம் நமக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்ட வாழ்விற்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன. இயற்கையும் மரங்களும் இல்லையேல் மனிதர்கள், உயிரினங்கள் யாருமே இருக்க முடியாது; எனவே அவற்றை நாம் பேணி பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சைக்கிள் பேரணியாக வந்த இளைஞர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வீதி நாடகத்தை சிறப்பாக நடத்திக் காட்டினர். டான் போஸ்கோ மீடியா (Don Bosco Media) மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகத்தை சிறப்பாக நிகழ்த்தினர்.

புனித அன்னாள் சபை மாணவ, மாணவியர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக கலைநடனத்தை நிகழ்த்தினர். சேலேசியன் அருட்சகோதரிகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களை பாடினர். புனித சிலுவை அருட்சகோதரிகள் இயற்கையை போற்றும் இறைவணக்கப் பாடல்களை வழிநடத்தினர்.

அருட்தந்தை சார்லஸ் SDB அனைவரையும் வரவேற்றார்; அருட்சகோதரி பிரின்சிலின் SCG அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை அருட்தந்தை ஜான் கென்னடி, அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் SDB, அருட்தந்தை சார்லஸ் (தலைவர், CRI), அருட்தந்தை T. சகாயராஜ் SJ – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை இயக்குநர், Bro. ஜான் பால், Sr. டெய்ஸி MSSM, Fr. அருள் ஆண்டனி SDB, Bro. பிரிட்டோ CG, அருட்தந்தை Barnabas, Sr. டெய்ஸி, அருட்சகோதரி நம்பிக்கை மேரி, சகோதரி லில்லி, துறவர பேரவையின் பொறுப்பாளர்கள் மற்றும் பங்கின் அருட் தந்தை அந் தோனிசாமி சிறப்பாக நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.

சுற்றுச்சூழல் செயல்பாட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கில், St. ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை இயக்குநர் அருட்தந்தை செப்பேடு, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் உள்ள ஆறு ஊராட்சி மன்றங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் 200 மரக்கன்றுகள் என மொத்தம் 1200 கன்றுகளை வழங்கி, மக்களோடு இணைந்து கல்லூரி மாணவர்கள் நட்டு வளர்ப்போம் என உறுதி அளித்தார்.

நாகமங்கலத்தின் அருகிலுள்ள சூரக்குடி பட்டி கிராமத்தில், குறுங்காடு உருவாக்கும் நோக்கில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கிராம மக்களும் பள்ளி மாணவ, மாணவியர்களும் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
இவ்விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை செப்பர்டு விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு. லெனின் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
இச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி — சைக்கிள் பேரணி, வீதி நாடகம், பாரம்பரிய பறை இசை, விழிப்புணர்வு பாடல்கள், மரம் நடுதல், சிறப்புரை ஆகியவற்றுடன் சிறப்பாக நிறைவு பெற்றது.






