நிழல் to நிஜம்

மதத்தையும் ஆன்மீகத்தையும் கடந்த முருகரின் உயிர் ஆற்றல்”

இன்று நாம் பக்தி, மதம், சமயம் என்று எல்லை வகுக்கும் அத்தனை கருத்தியல் அமைப்புகளுக்கும் மூல ஊற்றாக இருந்தது, வெறுமனே சில சிலைகளும் சடங்குகளும் அல்ல. மாறாக, ஐயாயிரம் வருடங்களுக்கும் முந்தைய மலைவாழ் மக்களின் வாழ்வியலும், இயற்கையோடு ஒன்றிய அவர்களுடைய மகத்தான ஆன்மீகப் பேரறிவும், இயற்கையின் துடிப்பை வாசிக்கும் அறிவாளிகள்.

 மூலிகை மருத்துவம், வானிலை வாசிப்பு, புவிசார் சமநிலைப் பழக்கங்கள் போன்ற இயற்கை அறிவியல் திறன்கள், அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமல்ல — ஒரு தத்துவமுமே ஆகும். எந்தப் புற்றுநோய் மருந்தும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, அவர்கள் மூலிகையின் தன்மை, மரத்தின் நேர்த்தி, மழையின் நுண்ணிய மாற்றங்களை உணர்ந்து உயிர் காத்தவர்கள். மழை எப்போது வரும், காற்று எங்கு மாறும், எந்த மண்ணில் எது வளர்க்கலாம் — இவை அனைத்தும் அவர்களின் உடல் நினைவாகவே பதிந்திருந்தன. இந்த இயற்கை அறிவு, மனிதனின் வாழ்வியல் நெறியாக, உலகிற்கே ஒரு “வாழ்வியல் பாடம்” ஆகும்.

ஒரு காலத்தில் உலகிலும், குறிப்பாக தமிழ் நிலப்பரப்பிலும், இன்று இருப்பதைவிட பலமடங்கு அடர்ந்த மலைகளும், அபரிமிதமான காடுகளும் நிறைந்திருந்தன. இந்த மலைகளைச் சுற்றியே குறவர், வேடர், புளியர் போன்ற ஆதிப் பூர்வக்குடி சமூகங்கள் வாழ்ந்தன. சங்க இலக்கியம் பேசும் குறிஞ்சி நிலமே, மற்ற நிலங்களுக்குத் தாயகமாய் விளங்கியது. இந்தப் பூர்வகுடி மக்கள், மலையின் அமைதியில், காற்றின் வீச்சில், நிலத்தின் அதிர்வில், இயற்கையின் பிரம்மாண்டமான ஆற்றலைத் தியானமாகக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய வாழ்வு ஒரு எதார்த்தமான வாழ்வியல் விஞ்ஞானமாக இருந்தது. ‘தான் மட்டும் வாழ வேண்டும்’ என்ற சுயநலச் சிந்தனை அங்கே முளைத்திருக்கவில்லை. “சகல உயிர்களும் வாழ வேண்டும், புவி சமநிலையில் இயங்க வேண்டும்” என்ற உயிர்ப்பொதுமைக் கோட்பாடுகளே அவர்களின் தத்துவமாக, அரசியலாக இருந்தது. இந்தக் கூட்டு வாழ்வின் வளமையே அவர்களுக்கு அபரிமிதமான உடல், உள ஆற்றலாகவும், மாபெரும் சக்தியாகவும் விளங்கியது.

காலப்போக்கில், சமதள சமூகங்கள் மலையை நோக்கி நகரத் தொடங்கின. அங்கே இருந்த நிலங்களை அபகரித்தார்கள்; வளங்களைச் சுரண்டத் தொடங்கினார்கள். ஆனால், அதே சமயம், மலைவாழ் மக்கள் இயற்கையை வழிபடவில்லை – இயற்கையைப் போலவே வாழ்ந்த அந்த உயர்ந்த வாழ்வியலைக் கண்டு பிரமித்தனர். இயற்கை வளம் உச்சத்தில் இருக்கும் மலைகளே, பூமியின் அதிகபட்ச ஆற்றல் மையங்கள் (Energy Points). சமதளத்தில் இருந்து வந்தவர்கள், மலைவாழ் மக்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகள், பண்பாடு, கலாச்சாரம், வணங்கிய தெய்வங்கள் ஆகியவற்றைக் கண்டு அச்சம் அல்லது பிரமிப்புடன் உற்று நோக்கினார்கள்.

வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் சிலர் அழுத்தமாக முன்வைக்கும் ஓர் அடிப்படை உண்மை உண்டு: உலகில் தோன்றிய அத்தனை மத மையங்களும், சமயக் கோட்பாடுகளும், ஆரம்ப காலப் பக்தி மரபுகளும் மலைகளை மையமாகக் கொண்டே உருவாயின. இன்றும் இந்தியாவில் பெரும்பாலான தெய்வ வழிபாட்டுத் தலங்கள், மலைகளின் மீதோ அல்லது அதன் அடிவாரங்களிலோ அமைந்திருப்பதன் பின்னுள்ள மானுடவியல் ரகசியம் இதுதான்.

உதாரணமாக, ஆய்வாளர் சு.கி. ஜெயகரண் போன்றவர்கள் வலியுறுத்துவதுபோல், “பக்தி” (Bhakti) என்ற கருத்தியல் மற்றும் சடங்குமயமான வழிபாட்டு முறை, ஆதி மலைவாழ் குறவர்களின் வாழ்வியல் ஞானத்தில் இருந்தே சமதளச் சமூகத்தால் சுரண்டப்பட்டு, மறுவரையறை செய்யப்பட்டது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில்தான், தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய தெய்வமான முருகன், மலைவாழ் மக்களின் ‘வேட்டுவக் கடவுள்’ என்ற சித்தாந்தத்தில் இருந்தே எடுக்கப்பட்டு, பிற்காலத்தில் சமதளம் சார்ந்த மதச் சித்தாந்தத்துக்குள் வலிந்து திணிக்கப்பட்டான் என்ற வரலாற்று உண்மை வெளிப்படுகிறது.

முருக பக்தி என்பது இன்று ஒரு பரவலான உணர்வாகத் தெரியலாம். தீச்சட்டி, வேல் பூஜை, பால் குடம், அலங்கார யாத்திரை… இவை அனைத்தும் ‘அவனுக்கான’ பக்தியாக விற்கப்படுகின்றன. ஆனால் அந்த ‘அவன்’ யார் என்பதைப் பகுத்தறிவோடு நோக்கினால், அந்த பிம்பம் மாறிக்கொண்டே இருப்பதை நாம் காணலாம்:

மலைக்குள் பிறந்த சிந்தனை வீரன் (வேட்டுவக் கடவுள்) – ஆதி மூலரூபம்

சிவனின் மகனாக மாற்றப்பட்ட மதக் கட்டமைப்பு – பிற்காலப் பிணைப்பு

வட இந்திய போர்த் தெய்வமாக அலங்கரிக்கப்பட்ட அரசியல் பிம்பம் (ஸ்கந்தன்) – ஆரியமயமாக்கல்

சந்ததிக்காக பூஜிக்கப்படும் சாபநிவாரணத் தேவன் – மூடநம்பிக்கை வியாபாரம்

உண்மை முருகன் என்றால்,

தந்தை மலை, தாய் காற்று, சகோதரன் மரம், தோழன் பாம்பு, உறவினர் பறவைகள்… இவை அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கையோடு ஒன்றி வாழும் மலைவாழ் மக்களின் உள் பிம்பம். அவர்கள் அவரை வழிபடவில்லை – அவரைப் போல் வாழ்ந்தார்கள்.

இன்று, நாம் மலைக்குச் செல்கிறோம்: பால் குடம் ஊற்றுவோம், வீதி முழுவதும் முழக்கமிடுவோம். ஆனால், நாம் அங்கே வெட்டும் மரங்களைப் பற்றியோ, கொட்டும் குப்பைகளைப் பற்றியோ, அங்கே வாழும் மலைவாழ் மக்களின் குடிநீர்க் குரலைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. பின்னர் சொல்கிறோம் – இதுதான் முருக பக்தி!

உண்மையான பக்தி என்பது உள்வழி. வெண்ணெய் பூசி, தேங்காய் உடைத்து, கூட்டத்தைச் சேர்ப்பது அல்ல. மலைவாழ் முருகனைப் போல் இயற்கையைப் பாதுகாத்து, மனிதரை நேசி, புவியின் உயிர் அதிர்வை உணர்வதுதான் உண்மை பக்தி.

இன்று, நாம் சுவாசிக்கவும், நீர் பெறவும், மழை பெறவும் – மலைகளே முதன்மையான மூலக்கூறு. இந்த மலைகளைப் பாதுகாக்கும் மிக முக்கியப் பொறுப்பை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவருபவர்கள் மலைவாழ் மக்களே. சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், மழையின் மூலக் கூறுகளைத் தாங்கி, காலநிலையைச் சமநிலைப்படுத்தும் இந்த மலைகளைப் பாதுகாப்பதில், மலைவாழ் மக்களின் பாரம்பரிய அறிவும், இயற்கை வழிப்பட்ட வாழ்வுமே மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், சமதளத்தில் உள்ளவர்கள் தங்கள் பேராசைக்காக இவர்களின் வளங்களைச் சுரண்டி, இவர்களின் வாழ்வாதாரங்களைப் கேள்விக்குறியாக்கி, இவர்களுக்கு ஏற்படும் அநீதியான செயல்களை நிகழ்த்தி, இவர்களின் நில உரிமைகளை மறுத்து, இவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளனர். இந்த அநீதி, சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுப்பதோடு, உண்மையான ஆன்மீகத்தின் குரலை நெரிக்கிறது. மலைக்கு உரிமை கொடுங்கள், முருகன் வருவான்.

மலைவாழ் மக்களின் மீது நிகழும் இந்த அரசியல் சித்தாந்த அநீதி ஒரு போதும் நியாயமல்ல. மலைவாழ் மக்கள் தங்கள் விவசாய நிலங்களின் உரிமையைப் பெற வேண்டும், அவர்களின் உயிர்களும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். உண்மையான முருக பக்தி என்பது, மலைக்கோயிலுக்குச் சென்று வேல் குத்துவதில் அல்ல; மலையில் வாழும் இந்த மாமனிதர்களின் வாழ்வு மேம்படுவதில் தான் உள்ளது. இந்த மக்கள் வளமோடும், நலமோடும் இருந்தால்தான், அவர்கள் மலையைப் பாதுகாக்க முடியும். அவர்கள் மலையைப் பாதுகாத்தால் தான், மழை வரும், நீர் கிடைக்கும், சமதளத்தில் வாழும் நாம் அனைவரும் நன்மைத்தனத்தை அனுபவிக்க முடியும்.

அரசு மட்டுமின்றி, பக்திக் கோஷம் போடும் நாமும், இந்த மலைவாழ் மக்களுக்குப் போதிய வாழ்வியல் சூழலை, பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது நமது வெறும் சமூகக் கடமை மட்டுமல்ல, இயற்கையைப் போற்றும் உயர்ந்த ஆன்மீகப் பணி!

மலைவாழ் முருகனை வழிபட விரும்பினால், முதலில் அந்த மலைக்கே அதன் உரிமையைத் திருப்பி அளிப்போம். அப்போதுதான், ஆக்கிரமிக்கப்பட்ட பக்தியை உடைத்து, முருகன் – நம் உள்ளத்தில் ஒரு விழிப்புணர்வாக – நிச்சயமாக வருவான்!

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

நிழல் to நிஜம் நிஜங்கள்

சக்தியின் ஓட்டம்: உடலுறவின் உளவியல் மற்றும் ஆன்மீக பரிமாணம்

  • June 1, 2025
மனித இனத்தில் ஆற்றலின் உச்சத்தை அடையும் ஒரு செயல் உண்டு. அது – உடலுறவு. இதன் மூலம் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரின் பரிணாமவளத்தில் ஒரு பரபரப்பான ஆழம்
நிழல் to நிஜம்

மந்திர குறள் – மந்திரச் செயல்பாடு திருவள்ளுவரின்முதல் குறள்.

  • June 7, 2025
மந்திர குறள் – மந்திரச் செயல்பாடு திருவள்ளுவரின்முதல் குறள். உயிரின் உருவாக்க நெறியும்“அகர முதல எழுத்தெல்லாம்…” என்ற திருக்குறளை, ஒலி மற்றும் அதிர்வியல் அடிப்படையில்,மரபு தமிழ் தரிசன
Translate »