இளைஞர்கள் தவறுகிறார்களா? – கரூர் சம்பவம் எழுப்பும் கேள்விகள்”
கரூர் துயர சம்பவம் : அரசியல் பொறுப்பும் எழும் கேள்விகளும்
கரூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நிகழ்வு, நடிகர் விஜய்யின் அரசியல் புரிதல் குறைபாட்டை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
ரசிகர்களிடம் அன்போடும் ஒழுங்கோடும் அணுகியிருக்க வேண்டிய நிலையில், அதனை செய்யத் தவறியது ஒரு பெரிய பிழை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தச் சம்பவத்தையடுத்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் எனப் பல தரப்பினரும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். பெரும்பாலானோர் விஜய்யையும், அவரது ரசிகர்களையும் கடுமையாகவே விமர்சிக்கின்றனர்.
விமர்சனங்கள் அவசியமானவையே. ஆனால், அதைத் தாண்டி இன்றைய இளைஞர்கள் ஒழுக்கமற்றவர்கள், தவறானவர்கள் எனப் பொதுவாக குறைசொல்வது புதிய கேள்விகளை எழுப்புகிறது.
இன்று அரசியலுக்குள் வரும் இளைஞர்களை குறித்து பல சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஆனால், அவர்களுக்குள் தோன்றும் புரிதல் குறைபாடுகளை சரிசெய்யும் முயற்சி யார் செய்கிறார்கள்?
இன்றைய இளைஞர்கள் பெருமளவில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுக்க அரசு, கல்வி நிறுவனங்கள், சமூக ஊடகங்கள்—இவை அனைத்துக்கும் என்ன பொறுப்பு உள்ளது? இந்தக் கேள்வியை சுட்டிக்காட்டி, அதனை கடுமையாக விமர்சித்தவர்கள் எத்தனை பேர்?
கடந்த மாதம் திருச்சி மார்சிங் பேட்டை பகுதிகளில், போதைப் பழக்கத்தால் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். பல இளைஞர்களும் போதைப் பழக்கத்தால் உயிரிழந்து கொண்டிருப்பது தொடர்கதையாக மாறியுள்ளது. அதேபோல்,
நீர்நிலைகள் மாசுபட்டு உயிரினங்கள் அழிந்து, மனிதர்கள் நோயால் வாடுவதற்கும் அரசியல் அக்கறை இல்லை. ஆனால், கரூர் நிகழ்வில் மட்டும் அரசியல் குரல்கள் ஏன் அதிகமாகின்றன என்பது கேள்வியாகிறது.
விஜய் கட்சித் தொண்டர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்ற விமர்சனங்களை ஏற்கலாம். ஆனால் ஆளும், எதிர்க்கட்சிகளின் தொண்டர்களே முன்மாதிரியா?
சட்டமன்றத்திலேயே அடிதடியில் ஈடுபடுகிறவர்கள், மகளிர் குறித்து இழிவான வார்த்தைகள் பேசுகிறவர்கள், சாதிய வன்மம் காட்டுகிறவர்கள்—இவர்கள் இளைஞர்களுக்கு எப்படி ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும்?

1980களிலிருந்து இன்று வரை, ரவுடிகளின் ஆதரவின்றி இயங்கிய கட்சி எது? அதுவே அரசியலின் தரம் என்றால், இன்று இளைஞர்களை மட்டும் குறை கூறுவது நீதியா?
திருமாவளவன், விஜய் ஆர்.எஸ்.எஸ். ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். ஆனால், தனது கட்சிக்காரர்கள் சென்னை கமிஷனர் வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டபோது அந்த ஒழுக்கம் எங்கே போனது?

அதேபோல், இன்று தங்களை பகுத்தறிவாளர்கள் எனக் காட்டிக் கொள்பவர்களும், அரசியல் விமர்சகர்களும், நடுநிலையான பார்வை வழங்க முடியவில்லை என்பதே குற்றச்சாட்டு.
யாரையும் எப்படியும் பேசிவிடலாம் என்ற மனநிலையில், சுயலாபத்திற்காகவே அவர்கள் செயல்படுகிறார்கள். மக்களுக்குப் போதுமான அரசியல் புரிதலை யாரும் வழங்குவதில்லை.
இன்றைய இளைஞர்கள் திறமைசாலிகளும் அறிவாளிகளும். ஆனால், அவர்களுக்குச் சரியான அரசியல் புரிதலை அளிக்கக் கல்வி முறைத் தானே தவறுகிறது.
மதங்கள், வெறுப்பின் அடிப்படையில் அரசியல் சிந்தனையை உருவாக்குகின்றன.
எனவே, கல்வியில் அரசியல் புரிதலும் சமூக நலனும், ஒழுக்க நெறியும் புகுத்தப்பட வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வை உருவாக்கித் தர வேண்டும்.
இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலை சமூகம் வழங்கினால், அவர்கள் நாளைய சிந்தனையாளர்களாக மட்டுமல்ல, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோராகவும் மாறுவார்கள்.





