மாணவ, இளையோர், குடும்பங்கள் என தமிழகம் முழுவதும் போதைப் பழக்கமோடு போராடும் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சமீபத்திய ஆய்வின் படி, தமிழகத்தில் 15 வயதுக்கு குறைந்த இளம் மாணவர்கள் 7.4% அளவில் நிகோட்டின் மற்றும் சாராயம் போன்ற போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு கவலையளிக்கும் நிலையாகும். இந்த சூழலில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விழிப்படையச் செய்யும் முயற்சியாக இன்று (ஜூன் 26, 2025) அகில உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி ஒரு முக்கிய நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது.
விழிப்புணர்வை தூண்டும் நிகழ்வு

சாக்சீடு தொண்டு நிறுவனம் மற்றும் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் சமூக பணித்துறை இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு, திருச்சி மாநகரில் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மார்ட்டின் மூத்த வழக்கறிஞர், திருச்சி மாநகர காவல் இணை ஆணையர் திரு. சிபின், மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் டாக்டர் பிரபு, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று விழிப்புணர்வு உரைகளை ஆற்றினர்.
மாற்றத்தைப் பதிவு செய்தவர்கள் கெளரவிக்கப்பட்டனர்

போதை எதிர்ப்பு தின உறுதி மொழி நிகழ்வின் ஒரு முக்கிய அம்சமாக அமைந்தது. போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு கடந்த 20 ஆண்டுகளாக ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொண்டு வரும் நபர்கள் மேடையில் கெளரவிக்கப்பட்டனர். அவர்களது வெற்றி, மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக அமைந்தது.
மாணவர்கள் விழிப்புணர்வை மேம்படுத்தினர்
புனித சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகம், மற்றும் பள்ளி மாணவியர் வழங்கிய போதை எதிர்ப்பு கலைநிகழ்ச்சிகள், நிகழ்ச்சிக்கு உயிர் ஊட்டின. நிகழ்வை Sr. ஜெயசீலிப்ரியா மற்றும் Mrs. ஆர்த்தி தொகுத்து வழங்கினர்.
மாலை 4 மணியளவில், சத்திரம் பேருந்து நிலையத்தில் வெளிச்சம் கலைக்குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. இது பொதுமக்களுக்கு நேரடியாக விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த நிகழ்வாக அமைந்தது.
சாக்சீடு – மீட்பின் தீபம்
இந்நிகழ்வை வழிநடத்திய சாக்சீடு தொண்டு நிறுவனம், திருச்சி பகுதியில் பல ஆண்டுகளாக போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான சிகிச்சை, ஆலோசனை, மற்றும் மறுசேர்க்கை பணிகளில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், குடும்பத்தினருடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி, அவர்களை மீட்டெடுக்கும் பணியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தியுள்ளது