செய்திகள்

உலக யோகா தினம்: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விழாக் கொண்டாடல்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், 2015 முதல் ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு 11வது யோகா தினமாகும். “ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்” (Yoga for One Earth, One Health) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் யோகா தின விழா நடைபெற்றது.

மாகே மைதானத்தில் நடைபெற்ற இவ்விழா, முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ் தலைமையில் நடைபெற்றது. இணைமுதல்வர் முனைவர் குமார், தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் டேவிட் ராஜா, உடற்கல்வி பேராசிரியர் ரமேஷ், மற்றும் ஆயுஷ் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஹெலன் கிறிஸ்டில்டா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

முதல்வர் தனது உரையில், யோகாவை மாதம் ஒருமுறை இரண்டாவது சனிக்கிழமையன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். “அலைபேசியை விலக்கி மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வது உடல் மற்றும் மன நலனுக்கு வழிவகுக்கும்” என அவர் தெரிவித்தார்.

இணைமுதல்வர் கூறுகையில், “உடல்நலத்தைப் பாதுகாக்க உணவுக்கும், யோகா போன்ற பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றார்.

மருத்துவர் ஹெலன் கிறிஸ்டில்டா, சுறுசுறுப்பாக இயங்கும் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, நம் உடலின் முக்கிய உறுப்புகள் — நுரையீரலும் இதயமும் — இயல்பாக இயங்கிட, யோகா மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது என கூறினார். தொடர்ந்து அவர் யோகாசனங்கள் பயிற்சியை நடத்தினார்.

தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், உடற்கல்வித்துறை, மற்றும் கிரிக்கெட் கிளப் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டு பயனடைந்தனர். விழா முனைவர் டே. வில்சன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »