“நடிக்கிறவன் தலைவனா?நடக்கிறவன் தலைவனா?
இன்று தமிழகத்தில் “தலைவர்” என்ற பட்டம் பொறையோடிப் பரவி, பலரும் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். கலைஞர், நடிகர், பேச்சாளர்—இவர்கள் திறமை வாய்ந்தவர்களே, ஆனால் தலைவன் ஆவதற்கான தகுதி வேறுபட்டது. வெறும் வாக்குச் சாவடி வெற்றியே தலைமை அல்ல; மக்களின் வாழ்வில் நீடித்த மாற்றம் கொண்டு வருவதே உண்மையான தலைமை.
மக்கள் வலியை தன் வலியாக உணர்வதே முதல் அடையாளம். அடித்தட்டு மக்களின் கல்வி, வேலை, உணவு, குடிநீர் ஆகியவற்றை காக்கும் பொறுப்பு அவசியம். மக்கள் சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும், பயிரிடும் நிலமும் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதே உண்மையான தலைவரின் நோக்கம். தன்னை முன்னிறுத்தாமல், மக்களை முன்னிறுத்தும் மனப்பான்மை அவசியம். தன்னலமற்ற சேவையும், தனிப்பட்ட லாபங்களுக்கு இடம் கொடுக்காத நேர்மையும் தலைவனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணங்கள். மக்களிடையே மதம் சாதி இனம் என்ற மூளை சலவையில் சிக்கிக் கொள்ளாமல் மக்களை தன்னம்பிக்கையில் வளர்ப்பதும், அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர உதவுவதும் தலைமைப் பண்பின் முக்கியமான பகுதி.

மண்ணையும், வளங்களையும் பற்றி ஆழமான அறிவு ஒரு தலைவனுக்கு மிகவும் அவசியம். மண்ணின் வளம், நீர் ஆதாரங்கள், இயற்கைச் சூழல் மற்றும் விவசாயத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சாத்தியமில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவையும், அது மனித குலத்திற்கு எப்படிப் பயன்படும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாத்து, வரும் தலைமுறையினருக்கு வளமான ஒரு சூழலை விட்டுச் செல்வது தலைவனின் கடமை.
பொறுமை, கருணை, மற்றும் நேர்மை ஆகிய மூன்றும் தலைவனின் அடித்தளம். அடக்கமும், அன்பும், அர்ப்பணிப்பும் வழிகாட்டும் போது தான் தலைமை நிலைத்து நிற்கும். மக்களின் நம்பிக்கையை விதைத்து, அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுபவனே உண்மையான தலைவன். ஏனெனில், ஒரு தலைவனின் வெற்றி அவனது தனிப்பட்ட சாதனைகளில் இல்லை, மாறாக அவன் தலைமையின் கீழ் மக்கள் அடைந்த வளர்ச்சியில்தான் உள்ளது.





