John P Rayan, Social Activist I Wisdom News
ஆண்-பெண் சமத்துவமே இப்போதுதான் ஒரு படிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஆணா பெண்ணா என்று இந்தச் சமூகம் வரையறுக்கத் தவறிய திருநர் சமூகத்தின் வாழ்வு காலம் காலமாக மௌனப் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்தச் சமூகத்தின் கண்களுக்குத் தெரியாதவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக, அவலக் குரல்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்த விபத்து அல்ல; ஒட்டுமொத்த ஆணாதிக்க, பெண்ணாதிக்கச் சமூகம் சேர்ந்து ஒரு மனித குலத்தின் மீது நடத்திய நீண்ட கால மௌன ஒடுக்குமுறையாகும்.ஒருவர் ஆணிலிருந்து பெண்ணாகவோ அல்லது தங்களது உண்மையான பாலின அடையாளத்திற்கோ மாறுவது எளிதானதல்ல. அதற்குப் பின்னால் ஆழமான உயிரியல் காரணங்களும், உளவியல் ரீதியான உள் உணர்வுகளும் உள்ளன. ஹார்மோன் மாற்றங்களும், உடலியல் இயற்கையும் ஒருவரைத் தன் சுய அடையாளத்தை நோக்கி நகர்த்துகின்றன. ஆனால், இந்த மாற்றத்தை ஈன்றெடுத்த குடும்பமும் கூடப்பிறந்த உறவுகளும் ஏற்றுக்கொள்வதில்லை. "ஏதோ ஒரு அருவருக்கத்தக்க செயலைச் செய்துவிட்டார்கள்" என்ற பிற்போக்குச் சிந்தனையோடு தன் சொந்தக் குழந்தைகளையே சமூகம் அந்நியப்படுத்துகிறது.
குடும்பத்தினரின் இந்தத் திணிப்பும் புரிதலின்மையும் அவர்களை வீட்டை விட்டுத் துரத்தி, நிர்கதியாய் வாழும் நிலைக்குத் தள்ளுகின்றன. இந்தச் சூழல்தான் அவர்களைக் கையேந்தும் நிலைக்கும், பிழைப்புக்காகத் திக்கற்றோடும் அவலத்திற்கும் ஆளாக்கியுள்ளது.
இளமைக் காலங்களில் இந்தச் சமூகம் தனக்கு இழைத்த அநீதிகளால் திருநர்களின் மனதில் கோபமும் வன்மமும் உருவாவது இயல்பே. ஆனால், வயது ஏறிக் காலம் கடந்து முதிர்ச்சியை எட்டும்போது, அந்தக் கோபமெல்லாம் மறைந்து ஆழ்ந்த துயரமாக மாறிவிடுகிறது. முதுமையில் அரவணைப்பாரற்று, தனிமைப்பட்டு, அவர்களின் வாழ்க்கையின் சுமை தாங்க முடியாததாகி விடுகிறது. இந்த அவல நிலையை மாற்றப் பொதுச் சமூகம் உடனடியாகச் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பெண் முன்னேற்றம் பேசுவது போல, திருநர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அரசுப் பணிகளிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் முறையான இட ஒதுக்கீடும் முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். பிச்சை எடுக்கும் சூழலில் இருந்து அவர்களை முழுமையாக விடுவித்து, உரிய பொருளாதார அந்தஸ்தை வழங்க வேண்டும். திருநர்களை ஏதோ ஒரு குற்றப் பின்னணி கொண்டவர்களாகவோ, சாபக்கேடான இனமாகவோ பார்ப்பதை விட்டுவிட்டு, சக மனிதர்களாக மதிக்கும் சமத்துவப் பார்வையை இந்தச் சமூகம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.தற்காலத்தில் அரசாங்கங்களும் சில முன்னெடுப்புகளைச் செய்யத் தொடங்கியிருந்தாலும், அது முழுமையான தீர்வாக மாறுவதற்குச் சட்டரீதியான வலுவான பாதுகாப்புத் தேவையாகிறது. அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களில் உள்ள குழப்பங்கள் களையப்பட வேண்டும். ஏற்கனவே பாலினத்தை மாற்றிவிட்டுச் சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெற்றவர்களை மீண்டும் புதிய மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தித் துன்புறுத்தக் கூடாது. திருநர்களுக்கான நலவாரியத் திட்டங்கள் முழுமையாகச் சென்று சேர்வதை உறுதி செய்வதோடு, அரசு மருத்துவமனைகளில் பாலின உறுதிப்படுத்தும் சிகிச்சைகள் எந்தத் தடையுமின்றி இலவசமாகத் தொடர வேண்டும். இதற்காக மருத்துவப் பணியாளர்களுக்கு முறையான விழிப்புணர்வும் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.பேருந்துகளிலும் பொது இடங்களிலும் ஆண், பெண் வரிசைகளைப் போல மூன்றாம் பாலினத்தவருக்கான பிரத்யேக வரிசைகளும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருநர்களுக்கான முறையான கழிப்பறை வசதிகளும் உருவாக்கப்பட வேண்டும்.கடந்த காலங்களில் இந்தச் சமூகம் திருநர்களுக்கு இழைத்த அநீதிகளும், கொடுத்த காயங்களும் ஓரிரு நாட்களில் மறைந்துவிடக்கூடியவை அல்ல; அவர்களின் மனதில் அவை என்றென்றும் மாறாத வடுகளாகவே இருக்கும். அந்த ஆழமான காயங்களை நாம் செய்யும் நன்மைகளையும், செலுத்தும் அன்பையும், வழங்கும் சமத்துவத்தையும் கொண்டுதான் ஆற்ற முடியும். இதை ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் கடமையாகவோ அல்லது அரசின் விவகாரமாகவோ மட்டும் சுருக்கிவிட முடியாது. இது இந்த ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மாபெரும் கடமையாகும். திருநர்களுக்குரிய சமூக மரியாதையையும், பொருளாதார மேம்பாட்டையும், முழுமையான மாண்பையும் இந்தச் சமூகம் திரும்ப வழங்கும்போதுதான், அவர்களும் இந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களின் வலிமையான பங்களிப்பை வழங்க முடியும். எதிர்காலச் சந்ததியினர் ஆரோக்கியமான, சமத்துவமான சூழலில் வாழ இந்த மாற்றத்தை இப்போதே விதைப்பது காலத்தின் கட்டாயமாகும்.John P Rayan, Social Activist, Wisdom News
புதிய அரசியல் பார்வை
3 நிமிட வாசிப்பு
மௌனப் படுகுழியும் மாறாத காயங்களும்: திருநர் வாழ்வு.
At a time when gender equality is finally making some progress, the lives of transgender people—who fall outside the binary definitions of 'man' or 'woman' imposed by this society—have long been consigned to a silent abyss.
முழுப் படம்
புதுப்பிக்கப்பட்டது
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.
விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.



