திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மருங்காபுரிக்கு அருகிலுள்ள முடுக்குப்பட்டியில் இயற்கை எழில் சூழ்ந்த மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது குறளாலயம். அங்கு சென்றபோது அதன் கட்டிட அமைப்பைவிட, அதன் பின்னணியில் உள்ள சிந்தனையின் ஆழமும் திட்டமிடலின் நுணுக்கமும் தமிழின் மீதான பற்றும் என்னை வியப்பில் ஆழ்த்தின. தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, அறம், பண்பாடு, ஆன்மிகம், கல்வி, மனிதநேயம் ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைக்கும் பண்பாட்டு முயற்சி இது.
1928ஆம் ஆண்டு மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மணி எழுதிய திருக்குறள் தீபாலங்காரம் என்ற நூல் இம்முயற்சிக்கான வரலாற்று உந்துதலாக அமைந்துள்ளது. அந்தப் பெண் ஆளுமையின் தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த மண்ணில் குறளாலயம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் போற்றத்தக்கது. இதற்காக 2019 ஜனவரி 24ஆம் நாள் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு, நிலம் வாங்கப்பட்டு, ஏறத்தாழ மூன்று ஏக்கர் பரப்பில் இவ்வளாகம் உருவாகி வருகிறது.
திருவள்ளுவரை மையமாகக் கொண்டு தொல்காப்பியர், ஔவையார், கம்பர், இளங்கோவடிகள், கண்ணகி, வள்ளலார், பாரதி, பாரதிதாசன், மறைமலை அடிகள், வீரமாமுனிவர், உ.வே.சா., பாவாணர், வ.உ.சி., பெரியார், அண்ணா, கலைஞர், கண்ணதாசன், மணவை முஸ்தபா உள்ளிட்ட 28 தமிழ் ஆளுமைகளுக்குச் சிலைகள் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில், ஏனைய சிலைகளுக்கான பணிகளும் படிப்படியாக முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு சிலையும் ஒரு வரலாற்றையும் சிந்தனையையும் இளைய தலைமுறைக்குக் கற்பிக்கும் திறந்தவெளிப் பாடமாக அமையும்.
இந்தக் குறளாலயம் தமிழ்த்திருப்பணிக் குழுவின் மதிப்பியல் தலைவர் வேளாக்குறிச்சி குருமகா சந்நிதானம், திருப்பணிக் குழுவின் தலைவர் தமிழ்த்திருப்பணி வள்ளல் டாக்டர் பெ.கலையரசன், குறளாலயம் திருப்பணிக் குழுவின் உயர்நிலை வழிகாட்டுதல் குழுவின் நெறியாளர் சிரவை ஆதீனம் குருமகா சந்நிதானம், மற்றும் உயர்நிலை வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் மருங்காபுரி ஜமீன்தார் தமிழ்த்திரு. சிவசண்முக பூச்சய நாயக்கர், அறப்பணிச் செம்மல் மணவைத் தமிழ்மன்றத் தலைவர் புரவலர் சௌமா.இராசரத்தினம், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழ்வளர் மைய இயக்குநர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், மணப்பாறை திருக்குறள் பயிற்றகத்தின் நிறுவனர் திருக்குறள் புலவர் நாவை.சிவம், திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் தமிழ்த்திரு. உதயகுமார் பெரியசாமி உள்ளிட்ட திருப்பணிக் குழுவினர், அறங்காவலர்கள் வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி, பாவலர் ந.பாலசுப்பிரமணியன், டாக்டர் அ.பிரேம்குமார், ஆ.துரைராஜ், எம்.கே.முத்துப்பாண்டி, இரா.கார்த்திகேயன், சி.இராஜகோபால், இரா.கலைக்கோவன், பெ.வீராசாமி மற்றும் புரவலர் பெருமக்கள் உதவியுடன் குறளாலயம் 2028 ஆம் ஆண்டில் திறப்பு விழா காண ஆயத்தமாகி வருகின்றது.

இயற்கையின் மடியில் தமிழைக் கொண்டாடும் இவ்விடம், தமிழின் திணை மரபையும் நினைவூட்டுகிறது. அம்மையாரின் பெயரில் அமைந்துள்ள திருப்புகழ் இல்லம் நேர் எண்ண அலைகளை நமக்குள் விதைத்த வண்ணமே இருக்கிறது. அந்த இல்லத்தில் அமர்ந்து இன்னும் ஓரிரு ஆண்டுகளிலே இந்த குறளாலயம் எத்தகைய பரிணாம வளர்ச்சியடைந்து, எத்தகைய பரிமாணத்தல் உயர்ந்து நிற்கும் என்கிற எண்ண அலைகள் எங்களுக்குள் வந்துபோயின.
திருப்புகழ் இல்ல்த்தின் திண்ணையில் அமர்ந்து குறளாலய வளாகத்தைப் ஒருமுறை பார்த்துவிட்டு கண்மூடிப் பார்க்கிறேன். வள்ளலார் சிலை, கண்ணகி சிலை, மரங்கள், பூக்கள், பறவைகள் என ஒரு வனம் வந்துபோயின. பொழுதுபோக்கு, கேளிக்கை, தியானம் என்றாகிவிடாமல் அங்கு வரப்போகும் ஒவ்வொரு சிலையும் ஒரு விழுமியத்தை சத்த்மாகக் கூறுவதாக எனக்குத் தோன்றியது. இங்கு வள்ளலாரின் சிலை இடம்பெறுவது பசியால் வாடும் உயிர்களிடம் கருணை காட்டிய வள்ளலாரின் வழியில், இங்கு வருவோர் அறிவால் மட்டுமல்ல, அன்பாலும் நிறைவடையும் வகையில் பசியற்ற சூழல் உருவாக வேண்டும் என்பதற்காகத்தானே. கற்சிலையாய் நிற்கப்போகும் ஆளுமைகள் இப்படி விழுமியங்களைப் போதிக்கும் ஆசான்களாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படப் போகின்றனர் என்பதை உணர்ந்து கொண்டேன்.திருக்குறள் தொடர்பான நூல்கள், உரைகள், ஆய்வுகள் இடம்பெறும் நூலகம், குறள் பயிற்சி, பேச்சு மற்றும் எழுத்துத் திறன் வளர்க்கும் கல்வித் திட்டங்கள் என அறிவை விரிவுபடுத்தும் முயற்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ்ப் புலத் தலைவர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் நூலகத்திற்கு திருக்குறள் நூல்களை வழங்க முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதரின் தோளில் இருக்கும் பொறுப்பைச் சமூகம் பகிர்ந்துகொள்ளும்போதுதான் பெரிய கனவுகள் நனவாகின்றன. எனவே குறளாலயம் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களின் தனிப்பட்ட கனவாக மட்டும் தேங்கிவிடக் கூடாது; ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் பொதுச் சொத்தாக வளர வேண்டும். தமிழாசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்; கல்லூரிகள் கல்விச் சுற்றுலாவாகத் திட்டமிட வேண்டும்; தமிழ்ச் சங்கங்கள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். சிலைகளுக்குப் புரவலராகவும், நூலகத்திற்கு நூல்கள் வழங்கியும், கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி செய்தும் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யலாம்.
குறளாலயம் ஒரு கட்டுமானப் பணி மட்டுமல்ல; ஒரு தலைமுறைக்கான சிந்தனைக் கட்டுமானம். இயற்கையின் மடியில் தமிழ் வளரவும், திருவள்ளுவரின் அறமும் வள்ளலாரின் கருணையும் புதிய தலைமுறையின் வாழ்வில் மலரவும் இம்முயற்சி துணைபுரிய வேண்டும். அந்த உழைப்புக்குத் தோள் கொடுப்பது ஒருவருக்குச் செய்யும் உதவி மட்டுமல்ல; தமிழுக்குச் செய்யும் தொண்டு. குறளாலயத்திற்குச் செல்வோம்! தமிழைக் கொண்டாடுவோம்! அதன் வளர்ச்சியில் நம்மையும் இணைத்துக்கொள்வோம்!



