A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

நிஜங்கள் 3 நிமிட வாசிப்பு

கொண்டாட்டமா? அழிவின் தொடக்கமா? – மனித இனத்திற்கு ஓர் எச்சரிக்கை!

Is our moment of celebration worth another living being's suffering? Let us celebrate responsibly, protect nature and remember that this planet is not ours alone. Celebrate happiness, not destruction. Respect every life!

Anand
கொண்டாட்டமா? அழிவின் தொடக்கமா? – மனித இனத்திற்கும் சக உயிரினங்களுக்கும் ஓர் எச்சரிக்கை முழுப் படம்
Anand I Wisdom Newsகொண்டாட்டங்கள் வெறும் சத்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் முடிந்துவிடாமல், இந்தச் சூழலுக்கும் சக உயிரினங்களுக்கும் மாண்பைப் போற்றுவதாக இருக்கின்றனவா என்பது இங்கு ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த மண் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இந்தப் பால்வெளியில் சகல உயிரினங்களோடும் இணைந்து வாழ்வதற்காகப் படைக்கப்பட்ட பொதுவான பூமி இது. ஆனால், மனிதனின் இந்த வெறித்தனமான வெடி வெடிக்கும் கலாச்சாரம் இயற்கையின் சமநிலையை முற்றிலுமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறது.
மனிதர்களுக்கான அனுமதிக்கப்பட்ட பொது ஒலி அளவு பகலில் 55 டெசிபல், இரவில் 45 டெசிபல் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், நாம் வெடிக்கும் பட்டாசுகளின் ஒலி அளவு 125 முதல் 145 டெசிபல் வரை செல்வதால், வயது முதிர்ந்தவர்களும், இதய நோயாளிகளும், பச்சிளம் குழந்தைகளும் கடும் நடுக்கத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.
குறிப்பாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள ஆய்வின்படி, பட்டாசுப் புகையில் உள்ள நுண்துகள்கள் (PM 2.5) மற்றும் பேரியம், ஈயம் போன்ற கன உலோகங்களை கர்ப்பிணிப் பெண்கள் சுவாசிக்கும்போது, அவை இரத்தத்தில் கலந்து நஞ்சுக்கொடி (Placenta) வழியாகக் கருவில் இருக்கும் குழந்தையைச் சென்றடைகின்றன. இதனால் பிறக்கப்போகும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பியல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதோடு, பிறந்த பிறகு அக்குழந்தைக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயமும் பல மடங்கு அதிகரிக்கிறது.
இங்கிலாந்தின் ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழக விலங்கியல் ஆய்வாளர் டாக்டர் கிளாடியா வாஷர் (Dr. Claudia Wascher) மேற்கொண்ட ஆய்வில், வெடி வெடிக்கும் சத்தத்தினால் பறவைகளின் இதயத் துடிப்பு வழக்கத்தைவிட 96 சதவீதம் வரை அதிகரிப்பதும், அவற்றின் காதுகளில் உள்ள 'பாராடிம்பானிக்' உறுப்பு வழியாக அதிர்வுகள் மூளை நரம்புகளைத் தாக்கி, தாங்க முடியாத வலியையும் கடும் பீதியையும் ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவன ஆய்வாளர் ஆண்ட்ரியா கோல்ஸ்விக் (Andrea Kölzsch) தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், வெடிச்சத்தத்தால் மிரண்டுபோன பறவைகள் இரவு நேரத்தில் 500 மீட்டர் உயரத்திற்கும், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கும் திசைதெரியாமல் பறந்து சென்று, கட்டடங்கள் மற்றும் மின்கம்பிகளில் மோதி உயிரிழப்பதோடு, கூடுகளைவிட்டு தாய்ப் பறவைகள் சிதறி ஓடுவதால் அப்பகுதியில் இனப்பெருக்கமே நின்றுவிடுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், வனவிலங்கு ஆய்வாளர் டாக்டர் எமிலி லூயிஸ் (Dr. Emily Lewis) மற்றும் சூழலியல் ஆய்வாளர் ஹான்ஸ்ஜோர்க் குன்ஸ் (Hansjoerg Kunc) ஆகியோரின் ஆய்வுகளின்படி, அதீத ஒலி மாசால் விலங்குகள் மற்றும் பறவைகளின் இறப்பு விகிதம் 138 சதவீதம் வரை அதிகரிப்பதோடு, தீவிர மன அதிர்ச்சியால் விலங்குகளுக்குக் 'கேப்சர் மயோபதி' (Capture Myopathy) எனப்படும் தசைச் சிதைவு மற்றும் உள்ளுறுப்புச் செயலிழப்பு ஏற்பட்டு, மாரடைப்பால் துடிதுடித்து இறக்கின்றன.
பீதியடைந்த பறவைகள், வௌவால்கள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் நகரங்களை விட்டு வெளியேறுவதால் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு, பயிர்களை அழிக்கும் பூச்சிகளின் பெருக்கம் அதிகரித்து, ஒட்டுமொத்த பூமியின் உணவுச் சங்கிலியே உடைந்துபோகும் அபாயம் ஏற்படுகிறது.
தீபாவளி முடிந்த சில மணி நேரங்களில் மாநகராட்சிகளில் பல நூறு மெட்ரிக் டன் அபாயகரமான ரசாயனக் குப்பைகளும் காகிதக் கழிவுகளுமே பூமியின் மீது பரிசாக மிஞ்சுகின்றன.

அதுமட்டுமின்றி, வானில் வெடித்துச் சிதறும் பட்டாசுகளின் நச்சுத் துகள்களும், 'பெர்குளோரேட்' (Perchlorate), பேரியம், கந்தகம் போன்ற அபாயகரமான வேதிப்பொருட்களின் சாம்பல்களும் காற்றில் பறந்து வந்து திறந்தவெளி நீர்நிலைகளில் மட்டுமல்லாமல், குடியிருப்பு வீடுகளின் மேல்மாடியில் உள்ள குடிநீர்த் தொட்டிகளிலும் (Overhead water tanks) நேரடியாகக் கலக்கின்றன.

இந்த நச்சுக் கலந்த நீரை மனிதர்கள் குடிப்பதாலும், அன்றாடப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதாலும் தைராய்டு பாதிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, சுவாசக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சந்தையில் போலிப் பட்டாசுகளும், தடைசெய்யப்பட்ட பேரியம் கலந்த வெடிகளும் புழங்குவதைத் தடுக்க QR குறியீடுகளும் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவை முழுமையான பலனைத் தரவில்லை.

இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும், மனிதனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும், குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஏன் இந்தச் சூழல் விரோதமான பிற்போக்குத்தனமான நடைமுறைகள் இன்னும் தொடர்கின்றன?
நீண்ட காலத் தடைக்குப் பிறகு, இந்த ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குறைந்த புகையையும் 30 சதவீதம் மாசைக் குறைக்கக்கூடிய தன்மையையும் கொண்ட புதிய தலைமுறை 'பசுமைச் சரவெடிகளை' உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பயன்பாட்டின் அளவு அதிகரித்ததால் கடந்த ஆண்டைக் காட்டிலும் தமிழகத்தில் காற்று மாசு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
உற்பத்தி செய்யும் தொழிலாளர்களையும் தொழிற்சாலைகளையும் காரணம் காட்டி, இந்தப் பூமியின் உயிர்ச்சூழலையும் சக உயிரினங்களையும் கொல்வதோடு, நாம் குடிக்கும் நீரையும் நஞ்சாக்குவதை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் பார்த்துக்கொண்டிருப்பது? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா?
வெடியில்லாத ஓர் ஆரோக்கியமான நாடாக இந்தியா உருவெடுக்க அரசுகள் தீவிரமாக முன்வர வேண்டும். சிவகாசி பட்டாசுத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்குச் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத நிரந்தர மாற்றுத் தொழிலையும், மாற்று வாழ்வாதாரத்தையும் உருவாக்க அரசு இன்றே, இந்த நொடிப்பொழுதே தீவிரமாக ஆய்வு செய்து ஆலோசிக்க வேண்டும்.
இந்தப் பூமி சமநிலையில் இருந்தால் மட்டுமே அனைத்து உயிரினங்களும் மனித இனமும் ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற உயரிய புரிதல் தனிமனிதனுக்கும் அரசுக்கும் ஏற்படும்போதுதான், இந்தப் பூமியில் அனைத்து உயிரினங்களும் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கான உண்மையான வழி பிறக்கும்.
Anand I Wisdom News

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
புதிய அரசியல் பார்வை

*Dorathy திரைப்படம்: திருச்சி சிவா அவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது!"*

மறுக்கப்பட்ட சமத்துவம், மறுக்கப்பட்ட எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்த திருநங்கைகளின் வாழ்க்கை ஒரு சிறிய ப…

2 நிமிட வாசிப்பு