A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

எல் நினோ பருவநிலை மாற்றமும் நமது முன்னெடுப்பும்: திருச்சி புனித ஜோசப் கல்லூரி

திருச்சிராப்பள்ளி: உலக ஓசோன் தினம் மற்றும் பூஜ்ஜிய உமிழ்வு தினத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத் துறை – செப்பர்டு மற்றும் மத்திய அரசின் உன்னத் பாரத் இயக்கம் சார்பில் “எல் நினோ பருவநிலை மாற்றமும் நமது முன்னெடுப்பும…

எல் நினோ பருவநிலை மாற்றமும் நமது முன்னெடுப்பும்: திருச்சி புனித ஜோசப் கல்லூரிView full image

திருச்சிராப்பள்ளி: உலக ஓசோன் தினம் மற்றும் பூஜ்ஜிய உமிழ்வு தினத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத் துறை – செப்பர்டு மற்றும் மத்திய அரசின் உன்னத் பாரத் இயக்கம் சார்பில் “எல் நினோ பருவநிலை மாற்றமும் நமது முன்னெடுப்பும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் கல்லூரியின் கே.பி. ஜோசப் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் சே.ச. தலைமை வகித்தார். தனது தலைமையுரையில் எல் நினோ மற்றும் இயற்கையான காலநிலை நிகழ்வுகள் குறித்தும், தற்போது ஏற்பட்டு வரும் இயற்கை மாற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

கல்லூரியின் செயலர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் சே.ச. மற்றும் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் ஆகியோர் உரையாற்றும்போது, காடுகள் மற்றும் இயற்கை வளங்களை அழிப்பதைத் தடுப்பதும், போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதும், நாம் பயன்படுத்தும் சில சாதனங்கள் மூலம் ஏற்படும் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அவசியம் என வலியுறுத்தினர். இதன் மூலம் இயற்கை தன்னைத்தானே மீட்டெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

விரிவாக்கத் துறை இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே.ச. தனது தொடக்கவுரையில் பசுமையான சூழலை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக புவியியல் துறை, புவி அறிவியல் பள்ளித் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெகன்குமார் சிறப்புரையாற்றினார். ஓசோன் தினத்தின் மையக்கருத்தான “குளிர்ந்த பூமிக்கான உலகளாவிய நடவடிக்கை” குறித்தும், எல் நினோ உருவாகும் விதம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். பசிபிக் கடல் வெப்பமடைவதால் மழைப்பொழிவு, வெப்பநிலை, வானிலை மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றின் தாக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி தாவரவியல் துறை அருகிலுள்ள திறந்தவெளியில் மரக்கன்றுகள் நடுதல், கையெழுத்து இயக்கம், வாகனமில்லா நாள், எல் நினோ விழிப்புணர்வு சுவரொட்டி தயாரிப்பு போட்டி மற்றும் அய்கஃப் மாணவர்களின் விழிப்புணர்வு வீதிநாடகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வின் மூலம் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் அவசியம், பசுமையான சூழலை உருவாக்குதல், கார்பன் உமிழ்வைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் மற்றும் ஒவ்வொருவரின் பொறுப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்களுக்கான பணிமுறை இரண்டின் துணை முதல்வர் ஆண்டோனி திவாகர் சந்திரன் தலைமையில் “காலநிலை நெருக்கடியை அறிவோம்; செயல்படுவோம்” என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஒருங்கிணைப்பாளர் யசோதை வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ரட்சனா நன்றி கூறினார். முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளிலும், கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“இன்றே சுற்றுச்சூழலைக் காப்போம்; பசுமையான நாளைய தலைமுறையை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சியை விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன், சுதாகர், அலுவலக இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன், அய்கஃப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் யோகராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

Updated

Explore these topics
Thanks for reading.

There’s always another perspective to discover.