செய்தி: ஜெயச்சந்திரன், முதன்மை செய்தியாளர், விஸ்டம் நியூஸ்.
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புகளுள் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவேங்கைவாசல் ஸ்ரீ வியாக்கிரபுரீஸ்வரர் (வேங்கைநாதர்) திருக்கோயில், ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி பண்டைய தமிழர்களின் மிகச்சிறந்த பொறியியல் மற்றும் அறிவியல் திறனுக்குச் சான்றாக நிமிர்ந்து நிற்கிறது. பொதுவாகக் கோயில்களுக்குச் செல்லும் மக்கள் அவற்றை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமே காண்கிறார்கள்.
ஆனால், திருவேங்கைவாசல் கோயிலை அணுகும்போது, அங்கு உறைந்திருக்கும் வானியல், ஒளியியல், வடிவியல் மற்றும் ஒலியியல் நுட்பங்களை அறிவியல் கண்ணோட்டத்தோடு காண்பது புதிய வியப்பை அளிக்கும்.
இக்கோயிலின் தலையாய அதிசயம், ஆண்டின் 365 நாட்களும் காலை முதல் மாலை வரை சூரியனின் ஒளி கருவறையிலுள்ள சிவன் மீது இடைவிடாது விழுவதுதான். பூமி சூரியனைச் சுற்றும் பாதையின் சாய்வுத் தன்மையால் (உத்தராயணம், தட்சிணாயனம்) சூரியனின் கதிர்கள் விழும் கோணம் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்.
இதன் காரணமாகப் பெரும்பாலான கோயில்களில் ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே சூரிய ஒளி கருவறைக்குள் ஊடுருவும். ஆனால், திருவேங்கைவாசலில் சூரியனின் நேரடிக் கதிர்கள் கருவறைக்குள் பாய்வதில்லை. மாறாக, நந்தி மண்டபத்தில் விழும் ஒளிக்கதிர்கள், துல்லியமான கோணத்தில் எதிரொலித்து (Reflection) கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது விழுமாறு அமையப் பெற்றுள்ளது.

“படுகோணமும் எதிரொளிப்புக்கோணமும் சமம்” என்ற இயற்பியல் விதியை அன்றைய சிற்பிகள் எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டு நந்தி மண்டபத்தையும் கருவறையையும் அமைத்துள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மலைப்பு ஏற்படுகிறது.
இந்த அறிவியல் ஆச்சரியம் ஒளியியலோடு நின்றுவிடவில்லை; வடிவியல் மற்றும் கணித நுட்பத்திலும் தொடர்கிறது. தமிழ் மொழியில் ‘ஓம் சரவணபவ’ என்ற தொடரில் வரும் எட்டு எழுத்துக்களைக் குறிக்கும் வகையில், இங்குள்ள முருகப்பெருமானின் கருவறை எண்கோண (Octagon) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரீடத்திற்குப் பதிலாகக் குல்லா அணிந்த முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் இக்கருவறையின் கோணக் கணக்கீடுகள் வடிவியல் கட்டிடக்கலையின் உச்சமாகும்.
மேலும், ஒரே பெயரில் ‘பிரகதாம்பாள்’ என்றழைக்கப்படும் இரண்டு அம்பாள்கள் எழுந்தருளியிருப்பதும், அதில் ஒரு அம்பாள் சிலையைத் தட்டினால் இனிய இசை ஒலி எழுவதும் ஒலியியல் (Acoustics) நுட்பமாகும்.

உலோகம் நிறைந்த அடர்ந்த கருங்கற்களைப் பயன்படுத்தி, ஒத்ததிர்வுத் தத்துவத்தின் (Sympathetic Resonance) அடிப்படையில் அமைக்கப்பட்ட இச்சிலைகள், பண்டைய தமிழர்களின் பாறைத் தேர்வையும் சிற்பக் கலையையும் பறைசாற்றுகின்றன.
இதோடு, ஒரு பக்கம் ஆணுருவமும் மறுபக்கம் பெண் உருவமுமாக முயலகனைப் பிடித்த நிலையில் அருள்பாலிக்கும் அபூர்வ ‘அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி’ வடிவமும் இக்கோயிலின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
எனவே, திருவேங்கைவாசல் திருக்கோயில் என்பது வெறும் சடங்குகளுக்கான இடமன்று; அது நம் முன்னோர்களின் வானியல், இயற்பியல் மற்றும் சிற்பப் பொறியியல் நுட்பங்கள் அடங்கிய ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம்.
நாம் இத்தகைய திருத்தலங்களுக்குச் செல்லும்போது, அவற்றை மத நம்பிக்கைக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நம் முன்னோர்கள் செதுக்கி வைத்திருக்கும் அறிவியல் அற்புதங்களைப் போற்றும் விதமாகவும், அந்தப் பண்டையத் தொழில்நுட்பத்தைக் கண்டு வியக்கும் விதமாகவும் அணுகுவதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான பெருமையாகும்.
விஸ்டம் நியூஸ் செய்திக்காக. ஜெயச்சந்திரன்.



