பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு 60 தேர்ச்சி மதிப்பெண் மற்றும் பணி அனுபவ வெயிட்டேஜ் வழங்க வேண்டும்:
The passing score in the Teacher Eligibility Test (TET) should be fixed at 60 for all the working teachers without following the reservation system and a weightage of 1 mark should be given for every two years, taking into account their work experience.
பணியில் இருக்கும் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாமல், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி மதிப்பெண்ணை 60 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அவர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு 1 மதிப்பெண் வீதம் வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் ஒரு நாட்டின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் என்றும், அவர்களின் கற்பித்தல் அனுபவமே எதிர்காலச் சமுதாயத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்க மிகவும் அவசியம் என்றும் கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் கணக்கில் கொள்ளாமல் நினைவாற்றலை மட்டுமே சோதிக்கும் தேர்வாக அமைந்துள்ளது. வகுப்பறையில் ஒரு பிரச்சனையை எதிர்கொள்வது, பின் தங்கிய மாணவர்களை முன்னேற்றுவது மற்றும் வெற்றிகரமான மாணவரை உருவாக்குவதே ஆசிரியரின் உண்மையான தகுதியாகும்.
எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-இல் தேர்ச்சி பெறாத, ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு 1 மதிப்பெண் வீதம் வெயிட்டேஜ் வழங்கி அவர்களைத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.
புதிய பணி நியமனம் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதே சமூக நீதியாகும்.
ஆனால், ஏற்கனவே பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு வகுப்பு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிப்பதும், பதவி உயர்வுக்குக் கல்வித்துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாத நிலையில் தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மட்டும் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதும் சமூக நீதியாகாது. பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் தேர்ச்சி மதிப்பெண்ணாக இருப்பது போல, பணியில் இருக்கும் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணை 60 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு கட்டாயமில்லை என தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்களை மன உளைச்சலில் வைத்திருக்காமல், ஒன்றிய அரசின் முடிவுக்குக் காத்திருக்காமல் மாநில அரசே உரிய நன்மைகளைச் செய்ய வேண்டும். எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு, பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு உரிய நீதியை வழங்கி அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.