செய்தி : ஜான் P. ராயன் (சமூக ஆர்வலர்) முதன்மை செய்தியாளர் WISDOM NEWS.
தமிழகம் ஒரு ஆரோக்கியமான, சீரான வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டிய அவசியமான சூழலில் இன்று நின்று கொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தான், புதிய சட்டசபை உருவெடுக்க வேண்டும் அல்லது இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கேள்வி வரும்போது, 30முதல் 35 வருடங்களுக்கு முன்பாக நம்மிடையே நிலவிய ஒரு கருத்து மீண்டும் நம்மைப் புரட்டிப் பார்க்க வைக்கிறது. அதாவது, அன்றைய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில், “தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி தலைநகரமாக உருவெடுக்க வேண்டும்” என்ற சிந்தனை விதைக்கப்பட்டது. இன்று சென்னை சந்தித்து வரும் கடுமையான நெரிசல்களுக்கும் கட்டமைப்புச் சுமைகளுக்கும் மத்தியில், அந்தச் சிந்தனை மீண்டும் மக்கள் மனதில் ஆழமாக எழ ஆரம்பித்துவிட்டது. இச்சூழலில், பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டசபை அமைப்பதில் எழும் சிக்கல்களையும், திருச்சியை மையமாகக் கொண்ட புதிய தொலைநோக்குப் பார்வையையும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டசபையை அமைப்பது தொடர்பாகப் பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புகளும் கவலைகளும் வெளிப்பட்டு வருகின்றன. முதன்மையாக, அப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக, காலம் காலமாக வாழ்ந்து வரும் மீனவச் சமுதாய மக்களும் குடியிருப்பு வாசிகளும் தங்கள் வாழ்வுரிமை, நில உரிமை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகத் தீவிரமாகப் போராடி வருகிறார்கள். அத்துடன், பட்டினப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாந்தோம் பகுதி ஏற்கனவே மிகவும் நெருக்கடியான பாதையைக் கொண்ட பகுதியாகும். உலகப் புகழ்பெற்ற சாந்தோம் பேராலயம், ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இப்பகுதி, நாள்தோறும் அனைத்து அரசு ஊழியர்களும், பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பயணிக்கும் முதன்மைச் சாலையான மெரினா பீச் ரோடு வழித்தடமாக விளங்குவதால் எப்போதும் மக்கள் ஒருமிக்கக் கூடும் இடமாக உள்ளது. இத்தகைய நெருக்கடிமிக்க பகுதியில் சட்டசபை போன்ற பிரம்மாண்டமான நிர்வாக மையத்தைக் கொண்டு வருவது அன்றாடப் போக்குவரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் முற்றிலும் முடக்கிவிடும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, பட்டினப்பாக்கம் போன்ற கடலோரப் பகுதியில் பிரம்மாண்ட கட்டுமானங்களை மேற்கொள்வதற்குச் சட்டரீதியான பெரிய தடைகளும் உள்ளன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளின்படி கடலோர உணர்திறன் பகுதிகளைப் பாதுகாப்பது கட்டாயமாகும். மேலும், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் விதிகளை மீறிய கட்டுமானங்களையோ அல்லது ஆக்கிரமிப்புகளையோ மேற்கொள்ளக் கூடாது என்றும், மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களைப் பாதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இப்படித் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களின் கடும் எதிர்ப்பு, சாந்தோம் பகுதியின் கடுமையான போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் சட்டரீதியான கட்டுப்பாடுகள் என இத்தனை இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும், பட்டினப்பாக்கத்திலேயே சட்டசபையை நிறுவ விடாப்பிடியாக முயற்சிப்பதற்குப் பின்னால் என்ன காரணம் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் விஜய்யை மையப்படுத்தி மக்கள் விவாதிக்கும் போது, சோதிடத்தின் மீது உள்ள அதிக நம்பிக்கையின் காரணமாகவே இந்த இடம் தேர்வு செய்யப்படுகிறதோ என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது. “அந்த இடத்தில் சட்டசபையை நிறுவினால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் நிகழாது” என்று சோதிடர்கள் கூறியதாக வெளிவரும் தகவல்களும், இத்தனை மக்கள் எதிர்ப்பையும் மீறி அங்கு அமைக்கும் முயற்சியும், ஜனநாயக நாட்டில் மக்கள் நலனை விட மூடநம்பிக்கையான காரியங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறதோ என்ற பெரும் அதிருப்தியை பொதுமக்களிடையே உருவாக்கியுள்ளது.
மற்றொருபுறம், சென்னை நகரம் ஏற்கனவே தன் தாங்கும் திறனை விட அதிகமான மக்கள்தொகை அடர்த்தியைக் கொண்டு திணறி வருகிறது என்று பல நகரமைப்பு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன், புவியியலாளர்கள் எச்சரிப்பது போல நிலத்தடி நீரில் கடல்நீர் உட்புகும் அபாயமும் நிலவுவதால், சென்னை படிப்படியாக வாழத் தகுதியற்ற நகராக மாறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், மேலும் மேலும் அரசு நிர்வாக மையங்களைச் சென்னையிலேயே குவிப்பது நகரத்தின் மீதான சுமையை அதிகரித்துச் சூழலியல் பேரழிவிற்கே வழிவகுக்கும்.
இந்நிலையில்தான், திருச்சியை மையமாகக் கொண்டு தலைநகரையும் சட்டசபையையும் அமைக்கும் மாற்றுச் சிந்தனை மிகுந்த தொலைநோக்குடைய தீர்வாக உருவெடுக்கிறது. திருச்சி நகரம் புவியியல் ரீதியாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் ஒரு நடுநிலையான மையப் புள்ளியாகத் திகழ்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி போன்ற தொலைதூரத்தில் உள்ள தென் மாவட்ட மக்களுக்குத் தலைநகர் திருச்சிக்கு அமைந்தால், அது பயணம் செய்வதற்கு மிக வசதியாகவும் நேரத்தைச் சேமிப்பதாகவும் இருக்கும்.
திருச்சியை மையமாகக் கொண்டு புதிய தலைநகர் உள்கட்டமைப்பை உருவாக்கும் போது, தென் தமிழகத்திலும் மத்திய தமிழகத்திலும் தொழில் முதலீடுகளும், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளும் பெருகும். சென்னை மட்டுமே தமிழகத்தின் வளர்ச்சியாக இருக்கும் நிலையை மாற்றி, மாநிலம் முழுவதும் பரவலான பொருளாதார வளர்ச்சியை உருவாக்க இது வழிகோலும். சுற்றுச்சூழலுக்கும் உகந்த, பரந்த நிலப்பரப்பைக் கொண்ட திருச்சியை நோக்கி அரசு தன் கவனத்தைத் திருப்புவதே எதிர்காலத் தமிழகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் மிகச் சிறந்த முடிவாக அமையும்.
WISDOM NEWS செய்திக்காக ஜான் P. ராயன் சமூக ஆர்வலர்



