A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

ஒளி & நிழல் 3 நிமிட வாசிப்பு

சவாலான கதாபாத்திரத்தில் சூர்யா! சமூக எதிர்பார்ப்புகளைத் தவிர்த்ததா SCENE?

The story of SCENE revolves around a series of murders, mysterious cases that pose a major challenge to the police, and a police officer who tries to find the culprit behind the murders. However, the officer is blind.

Anand
சவாலான கதாபாத்திரத்தில் சூர்யா! சமூக எதிர்பார்ப்புகளைத் தவிர்த்ததா SCENE? முழுப் படம்
Anand - Wisdom News I 07.11.2026
தொடர் கொலைகள், காவல்துறைக்குப் பெரும் சவாலாக மாறும் மர்ம வழக்குகள், அந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் ஒரு காவல்துறை அதிகாரி. ஆனால், அந்த அதிகாரி பார்வையற்றவர் என்பதுதான் SCENE திரைப்படத்தின் கதையின் மையம்.
கிரைம் பிரிவில் டிஎஸ்பியாகப் பணியாற்றும் சூர்யா, கடினமான குற்ற வழக்குகளைக்கூடத் தனது நுண்ணறிவு மற்றும் துப்பறியும் திறமையால் எளிதில் முடிக்கும் திறமைசாலியாக இருக்கிறார். பணியிலிருந்து விலக விரும்பும் அவருக்கு மேலதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். அவருடைய திறமையைப் பயன்படுத்தி இன்னும் பல வழக்குகளை முடிக்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம்.

இதற்கிடையில், பிளஸ் டூ படிக்கும் மாணவன் ஒருவன் தனது தந்தையைக் கொலை செய்து புதைத்துவிட்டு வரும்போது, மற்றொரு கொலைகாரக் கும்பலைச் சந்திக்கிறான். அவர்களிடமிருந்து தப்பிக்கத் தனது கொலைச் செயலையும் வெளிப்படுத்தி, பிணத்தைப் புதைப்பதற்கான புதிய உத்தியையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறான். பின்னர் அந்த மாணவனே ஒரு கொடூரமான கொலைகாரனாக மாறுகிறான்.

பணத்திற்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் கொலை செய்யும் அவன், திட்டமிட்ட கொலைகளைச் சைக்கோ கொலைகளாகச் சித்தரித்து காவல்துறையைத் திசைதிருப்புகிறான். இதனால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது. இறுதியில் இந்த வழக்கைத் தீர்க்க சூர்யாவின் உதவியை நாடுகிறது.

ஏற்கெனவே ஒரு சைக்கோ கொலைகாரனைப் பிடித்துச் சிறையில் அடைத்திருக்கும் சூர்யாவிடம், அதே பாணியில் மீண்டும் கொலைகள் நடப்பது பல சந்தேகங்களை உருவாக்குகிறது. அப்போதுதான் சூர்யாவின் பார்வையற்ற நிலை வெளிப்படுகிறது. சில வருடங்களாக சூர்யாவிற்கு பார்வை திறன் இல்லாமல் போய்விடுகிறது, காலமும் தனது குறைபாட்டை மறைத்துக்கொண்டு பணியாற்றிய அவர்,  அந்த வழக்கிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படுகிறார் பின் அந்த வழக்கை கண்டுபிடிக்க  சவாலோடு களம் இறங்குகிறார் நஸ்ரியாவை உதவியாளராகத் தேர்ந்தெடுத்து,  ஓய்வுபெற்ற உயர் காவல்துறை அதிகாரிகளான தனது பெற்றோரின் உதவியும் அவருக்குக் கிடைக்கிறது.
இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்குரியது. குறிப்பாக, ஒரு முன்னணி மாஸ் ஹீரோ பார்வையற்ற காவல்துறை அதிகாரியாக நடிப்பது சாதாரணமான விஷயமல்ல. நடிப்புக்குச் சவாலான, பெரிய ரிஸ்க்கான கதாபாத்திரத்தை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகர்கள் எத்தனை பேர் இதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான். நஸ்ரியா, ஆனந்தராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தப் படத்தைப் பார்க்கும்போது 2013-ல் வெளியான ஹாங்காங் திரைப்படமான Blind Detective நினைவுக்கு வருகிறது. ஜானி டோ இயக்கிய அந்தப் படத்தில் ஆண்டி லாவ் பார்வையற்ற முன்னாள் துப்பறியும் அதிகாரியாகவும், சாமி செங் அவருக்கு உதவும் பெண் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். பார்வையற்ற துப்பறியும் அதிகாரி, பெண் உதவியாளர், குற்ற விசாரணை, நகைச்சுவை கலந்த திரில்லர் என இரண்டு திரைப்படங்களின் அடிப்படைக் கதைக்கருவிலும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருக்கின்றன. எனவே, அந்தத் திரைப்படத்தின் கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டுதான் ஜித்து மாதவன் SCENE திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. 
அதேநேரத்தில், சூர்யாவின் பெற்றோர்களை ஓய்வுபெற்ற உயர் காவல்துறை அதிகாரிகளாகக் காட்டுவது போன்ற கூடுதல் அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே வந்த கதைக்கருவை மீண்டும் கையாளும்போது இயக்குநர் என்ன புதுமையைச் செய்திருக்கிறார் என்பதுதான் முக்கியமான கேள்வி. 
இயக்குநர் இந்தப் படத்தில் பல்வேறு முயற்சிகளைச் செய்திருக்கிறார். ஆனால், ஒரு சீரியஸ் சீரியல் கில்லர் கதைக்குள் நகைச்சுவையை இணைத்திருப்பது சில இடங்களில் கதையின் தீவிரத்தைக் குறைக்கிறது. இது ஒரு முழுமையான திரில்லர் திரைப்படமா அல்லது நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குப் படமா என்ற குழப்பம் ஏற்படுகிறது.
ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதாபாத்திரத்தை உருவாக்கிவிட்டு, அந்தக் கதாபாத்திரத்தின் தீவிரமான சூழல்களைக்கூட நகைச்சுவையாக அணுகியிருப்பது கதையின் ஓட்டத்தைப் பாதிக்கிறது. நகைச்சுவைப் படமாக இருந்தால் அதற்கான தெளிவான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும். சீரியஸ் திரில்லர் படமாக இருந்தாலும் அதன் தீவிரம் காக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையில் இயக்குநர் தெளிவான முடிவை எடுக்கத் தவறியிருக்கிறார்.

சூர்யாவின் திரைப்பயணத்தில் ஜெய் பீம் திரைப்படம் அவருக்குத் தனித்துவமான சமூகப் பார்வையுடன் கூடிய ஹீரோ என்ற அடையாளத்தை உருவாக்கியது. சமூக அநீதிகள், ஒடுக்குமுறைகள், மனித உரிமைகள், சமூக நீதி போன்ற பிரச்சினைகளைத் துணிச்சலாகப் பேசும் கதாபாத்திரங்களில் சூர்யாவைப் பார்க்க வேண்டும் என்பதே அவரை விரும்பும் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அந்த எதிர்பார்ப்பை SCENE திரைப்படம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றே நான் கருதுகிறேன். 
 இந்தப் படத்திலும் அரசியலுக்கு வருவது குறித்த ஒரு வசனத்தை வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து சூர்யா மக்களின் மனநிலையை அறிய விரும்புகிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அவர் அரசியலுக்கு வருவது குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் வெளிப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 
ஒரு முடிவான கருத்தை முன்வைக்காமல் கேள்விக்குறியாக விட்டிருப்பது அவருடைய அரசியல் நம்பிக்கை குறித்த குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.
சூர்யா இனிவரும் திரைப்படங்களில் வெறும் பொழுதுபோக்குக் கதாபாத்திரங்களைத் தாண்டி, சமூக நலனுக்காகவும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதே  அவருடைய நட்சத்திர மதிப்பை மட்டுமல்லாமல், சமூகத்தில் அவருக்கான மதிப்பையும் மேலும் உயர்த்தும். Anand - Wisdom News

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்