JOHN P RAYAN, Social Activist – Wisdom News
ஒரு தனி மனிதனின் கோபம்; அந்த கோபத்தினால் அவன் எடுத்த தீர்க்கமான முடிவு; தன்னை மட்டுமின்றி முழு நாட்டையும், உலகத்தையும் சிந்திக்க வைத்த அந்த கோபம்தான், ‘மோகன்தாஸ்’ என்ற சாதாரண மனிதனை ‘மகாத்மா’வாக மாற்றியது.
1893-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில், முதல் வகுப்பு பயணச்சீட்டு இருந்தும் நிறவெறியால் ரயிலில் இருந்து நள்ளிரவில் தூக்கி எறியப்பட்டபோது காந்தியடிகளுக்குள் பொங்கி எழுந்த அந்த ஆவேசக் கோபமே, மாபெரும் சுதந்திரப் போராட்டத்திற்கான விதையாக மாறியது.
தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு எதிரான அந்த மனிதனின் கோபம், தனிநபர் ஆத்திரமாக முடிந்துவிடாமல், உலகையே உலுக்கிய அகிம்சை எனும் பேராயுதமாக உருவெடுத்தது.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகச் ‘சத்தியாகிரகம்’ எனும் போராட்ட முறையைக் கண்டறிந்த காந்தியடிகள், இந்தியா திரும்பியதும் சம்பாரண், ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு போராட்டம் என பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அந்த அகிம்சை ஆயுதத்தை ஏந்தினார்.
காந்தியடிகளுக்குச் சுதந்திரம் என்பது வெறும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வெளியேற்றம் மட்டும் அல்ல; அது நாட்டின் ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் விடுதலை, சுயமரியாதை மற்றும் ஆன்மாவின் விழிப்புணர்வு ஆகும்.
“இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது” என்ற ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருந்த அவர், கிராமங்களின் சுயசார்பே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று முழங்கினார். நாட்டின் கடைக்கோடி எல்லையில் வாழும் எளிய மனிதனுக்கும் அதிகாரம், உணவு, தன்மானம் கிடைக்கும்போதே அது பூரண சுதந்திரம் என எண்ணினார்.
சாதிய அடக்குமுறையையும் மதப் பிளவுகளையும் சமூகத்தின் பெரும் சாபமாகக் கருதிய காந்தியடிகள், அதற்காகத் தன் வாழ்நாள் முழுதும் களமாடினார். கேரளா வைக்கம் கோவில் வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர், 1932-ல் எரவாடா சிறையில் இருந்தபடி சாதியப் பிளவை ஏற்படுத்த முயன்ற பிரிட்டிஷ் அரசின் சதியை எதிர்த்துச் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ இருந்தார்.
இதன் விளைவாகப் பிறந்த பூனா ஒப்பந்தம் (1932) என்பது, ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி வழங்கும் முறையைத் தவிர்த்து, பொதுத் தொகுதிகளிலேயே கூடுதல் இடங்களை ஒதுக்கி சமூக ஒருமைப்பாட்டைக் காத்த வரலாற்று உடன்படிக்கையாகும்.
அதேபோல, மதவெறியைத் தூண்டிய தீவிரவாதச் சக்திகளை எதிர்த்து, 1924 (தில்லி 21 நாள் உண்ணாவிரதம்), 1946 (நோவாக்களி நடைபயணம்), 1947 (கொல்கத்தா அமைதி உண்ணாவிரதம்), 1948 (தில்லியில் தனது கடைசி உண்ணாவிரதம்) எனத் தனது உயிரைப் பணயம் வைத்து மத நல்லிணக்கத்தைக் காத்தார்.
பெண்களைச் சுதந்திரப் போராட்டத்தின் முதன்மைச் சக்தியாக உயர்த்திய காந்தியடிகள், 1920-1930களின் இடைப்பட்ட காலத்தில், “ஒரு பெண், நள்ளிரவில் தன் உடலில் தங்க நகைகளை அணிந்துகொண்டு, யாருடைய பயமும் இன்றி தனியாக நடந்து செல்லும் நாளே இந்தியாவின் உண்மையான சுதந்திர நாளாகும்” என்று அழுத்தமாகக் கூறினார்.
காந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பாடம் — ஒரு கோபம் எத்தகைய மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதுதான்.
ஆனால் இன்று நமக்கு வரும் கோபங்கள் எல்லாம் நம்மையும் நம்மைச் சார்ந்த சமூகத்தையும் சீரழிக்கும் ஆத்திரமாக இருக்கிறதே தவிர, மாற்றத்திற்கான விதையாக இருக்கிறதா என்பதை நாம் சுய ஆய்வு செய்ய வேண்டும்.
நமக்குக் கோபம் வர வேண்டும்; ஆனால் அது சுயநல ஆத்திரமாக இல்லாமல், சமூக அநீதிகளைக் கண்டு பொங்கும் புரட்சியாகவும் எழுச்சியாகவும் மாற வேண்டும்!
சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 80 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பெண் உரிமைக்காகவும், சாதிய பாகுபாடுகளைத் தகர்ப்பதற்காகவும், மனிதனை மனிதன் ஒடுக்கும் சிந்தனையை எதிர்த்தும் இன்னும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றால், ஒரு சமூகமாக நாம் தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
மக்கள் உரிமைக்காகவும், சுதந்திரமான வாழ்விற்காகவும், ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலைகளுக்காகவும் போராடும் அந்த ‘நியாயமான கோபம்’ நமக்குள்ளே கனன்றுகொண்டே இருக்க வேண்டும்.
அந்த உணர்வோடு காந்தியடிகளின் நினைவு நாளில் உண்மையான சுதந்திரத்தை நோக்கி அடி எடுத்து வைப்போம்.
JOHN P RAYAN Social Activist – Wisdom News



