A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

மனிதன் I மயிறு I கடவுள்

Anand I Wisdom News ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தனது மாட்டை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு இயற்கை உபாதை ஏற்பட்டது. அவசரமாக ஒரு பக்கமாகச் செல்ல முயன்றபோது, கால் இடறி அருகிலிருந்த ஒரு பழைய …

மனிதன் I மயிறு I கடவுள்View full image

Anand I Wisdom News

ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தனது மாட்டை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு இயற்கை உபாதை ஏற்பட்டது. அவசரமாக ஒரு பக்கமாகச் செல்ல முயன்றபோது, கால் இடறி அருகிலிருந்த ஒரு பழைய கிணற்றுக்குள் விழப்போனான். அந்த நொடியில் அவனது கால் ஏதோ ஒன்றில் சிக்கியது. கீழே பார்த்தான். நீளமான ஒரு தலைமுடி போன்ற ஒன்று அவனது காலை இறுக்கமாகப் பிடித்திருந்தது. அந்த மயிர் அவனை விழாமல் தடுத்தது. உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் இருந்த அவன், அந்தச் சிறிய மயிரின் காரணமாக உயிர் தப்பினான்.“நான் மயிரளவில் உயிர் தப்பினேன்!”என்று நினைத்தவன், “இது சாதாரண மயிராக இருக்க முடியாது. கடவுளே இந்த மயிராக வந்து என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும்!”என்று நம்பினான். அவன் அந்த மயிரை எடுத்துக்கொண்டு ஊருக்குள் ஓடினான். “என் உயிரைக் காப்பாற்றியது இந்த மயிர்தான். கடவுள் மயிராக வந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார்!” என்று எல்லோரிடமும் சொல்லத் தொடங்கினான். அவன் சொன்னதை சிலர் நம்பினர். சிலர் ஆச்சரியப்பட்டனர். சிலர் சந்தேகப்பட்டனர். ஆனால் காலம் செல்லச் செல்ல சந்தேகம் மறைந்தது; நம்பிக்கை மட்டும் பெரிதானது.

அந்த மயிரை ஒரு சிறிய இடத்தில் வைத்து மக்கள் வணங்கத் தொடங்கினர். பின்னர் அதற்காக ஒரு அறை கட்டப்பட்டது. அந்த அறைக்குள் ஒரு கல் சிலை வைக்கப்பட்டது. மயிர் புனிதமானது என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தரிசிக்க சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மக்கள் வரத் தொடங்கினர். “மயிறு கடவுளை வேண்டினால் நினைத்தது நடக்கும்.” “மயிறு கடவுளிடம் வேண்டினால் நோய் குணமாகும்.” “மயிறு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும்.” என்று கதைகள் உருவாகின. ஒருவருக்கு எதிர்பாராத நன்மை நடந்தாலும் அது மயிறு கடவுளின் அருள். ஒருவரின் நோய் தானாகக் குறைந்தாலும் அது மயிறு கடவுளின் சக்தி. ஒருவருக்கு வேலை கிடைத்தாலும் அது மயிறு கடவுளின் கருணை.

அந்த மயிருக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. காணிக்கைகள் குவிந்தன. ஆண்டுதோறும் பத்து நாள் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்தத் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடத் தொடங்கினர். காலம் செல்லச் செல்ல அந்த மயிருக்கு ஒரு பெரிய பெயரும் கிடைத்தது. “மயிறு கடவுள்!” கோயில் வந்துவிட்டது. சாமி வந்துவிட்டார். பக்தர்கள் வந்துவிட்டார்கள். காணிக்கைகள் வந்துவிட்டன. திருவிழாவும் வந்துவிட்டது. ஆனால் ஒரு கேள்வி மட்டும் வந்தது. “மயிறு கடவுளின் தேரை யார் இழுப்பது?” அங்கேதான் கடவுளைவிட சாதி பெரியதாகிவிட்டது. ஊரில் சிலர், “இந்த மக்கள் தேரை இழுக்கக் கூடாது. அவர்கள் வெளியிலிருந்து வேண்டுமானால் வணங்கலாம். ஆனால் கோயிலுக்குள் வரக்கூடாது” என்று முடிவு செய்தனர். மயிறு கடவுள் அனைவருக்கும் கடவுள் என்று சொல்லப்பட்டார். ஆனால் அவருடைய கோயில் அனைவருக்கும் இல்லை. மயிறு கடவுளின் தேரை சிலர் இழுத்தனர். சிலர் தொலைவில் நின்று பார்த்தனர். கோயிலுக்குள் செல்ல முடியாதவர்கள், வீதியின் ஓரத்தில் நின்று தூரத்திலிருந்தே மயிறு கடவுளைப் பார்த்து கைகளை கூப்பினர். “சாமியே… எங்களை காப்பாற்று…” என்ற அவர்களின் குரல் உணர்வுபூர்வமாக ஆர்ப்பரித்தது. அவர்கள் கடவுளைத் தொட முடியவில்லை. ஆனால் கடவுளிடம் வேண்ட முடிந்தது. ஆண்டுகள் கடந்தன.

ஒருநாள் அந்த வழியாக ஒரு வயதான சாமியார் ஒருவர் வந்தார். கோயிலைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். “இங்கே என்ன புதிதாக ஒரு கடவுள் உருவாகியிருக்கிறார்?” என்று கேட்டுக்கொண்டு கோயிலுக்குள் சென்றார். அங்கு இருந்த மயிரைப் பார்த்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். “அட! இது என்னுடைய மயிரல்லவா?” என்று சாமியார் சிரித்தார். மக்கள் கோபம் கொண்டனர். “எங்கள் மயிறு கடவுளை உன்னுடையது என்று சொல்கிறாயா?” சாமியார் சொன்னார்: “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து என் தலையை மழித்தேன். அந்த முடியை இங்கேயே போட்டுவிட்டுச் சென்றேன். நீங்கள் இப்போது கடவுளாக்கியிருப்பது என்னுடைய மயிர்தான்.” மக்கள் மீண்டும் கோபமடைந்தனர். “இது எங்கள் கடவுள் மயிறு. நீ பொய் சொல்கிறாய்!” சாமியார் மீண்டும் விளக்க முயன்றார். “மயிர் எப்படி கடவுளாகும்? நான் மழித்துப் போட்ட மயிர்தான் இது!” இன்னும் சிறிது நேரம் இவர் இங்கே இருந்தால் நமது நம்பிக்கையைத் தொலைத்து விடுவார் என்று நினைத்த மக்கள், அந்த சாமியாரை அடித்து கோயிலைவிட்டு விரட்டினர். அந்த நாளிலிருந்து அந்த ஊரில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது.

இது ஒரு கதைதான். ஆனால் உண்மையான கேள்வி இங்கேதான் தொடங்குகிறது. ஒரு மனிதன் மயிரளவில் உயிர் தப்பியிருக்கலாம். அதனால் அந்த மயிர் கடவுளாகிவிடுமா? ஒரு சம்பவம் நமக்கு சாதகமாக நடந்துவிட்டால், அதன் பின்னால் இருக்கும் இயற்கை காரணங்களைத் தேடாமல் அதை அற்புதம் என்று அறிவிப்பது அறிவா? ஒரு மயிரை கடவுளாக்குவதற்கு மனிதனுக்கு இவ்வளவு எளிதாக இருக்கும் போது, உயிரோடு இருக்கும் மனிதனை மனிதனாக மதிப்பதற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிரமம்?

தண்ணீரின்றி தவிக்கும் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. ஆனால் ஒரு மயிருக்கு தேர் இழுக்க முடிகிறது. மனிதன் எப்படி கேள்வி கேட்பதை நிறுத்துகிறானோ, அங்கேயே மூடநம்பிக்கை பிறக்கிறது. இறுதியில் மனிதன் உருவாக்கிய நம்பிக்கையே மனிதனை ஆளத் தொடங்குகிறது.

மிகப் பெரிய கேள்வி இதுதான். மனிதனை அன்பு செய்யாத கடவுள் எதற்காக? மனிதனை சாதியாகப் பிரிக்கும் கடவுள் எதற்காக? இயற்கையை அழிப்பதைத் தடுக்காத கடவுள் எதற்காக? நீரை நஞ்சாக்கும் மனிதனை நிறுத்த முடியாத கடவுள் எதற்காக? காடுகளை அழிக்கும் மனிதனுக்கு எச்சரிக்கை சொல்லாத கடவுள் எதற்காக? பூமியின் வளங்களைச் சுரண்டி, ஆறுகளை அழித்து, மலைகளை வெட்டி, காடுகளை அழித்து, கடலையும் குப்பையாக்கிவிட்டு, அதன்பிறகு ஒரு மயிரிடம் சென்று பூஜை செய்தால் பூமி காப்பாற்றப்படுமா?

மூடநம்பிக்கைகள் என்பது அவரவர் சார்ந்த தனிப்பட்ட விருப்பம் என்று கண்டும் காணாமல் கடந்து செல்வது மிகப்பெரிய விபரீதத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய அலட்சியமே நாளடைவில் ஒருவரின் திணிக்கப்பட்ட கருத்தைச் சமூகத்தின் பொதுக் கருத்தாக மாற்றிவிடுகிறது.
​எனவே, சமூகத்தில் உலவும் ஒவ்வொரு நம்பிக்கையையும் “ஏன், எதற்கு, எப்படி?” என்ற கேள்விகள் மூலம் நாம் பகுத்தறிவோடு ஆராய வேண்டும். அந்த நம்பிக்கை மனிதகுலத்தின் நன்மைக்கும், நாம் வாழும் சூழலுக்கும், நமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் உதவுகிறதா அல்லது அதை அழிக்கிறதா என்று சிந்திப்பதே உண்மையான அறிவாகும். அந்த பகுத்தறிவே எது கடவுள், எது மனிதன், எது மயிறு என்ற தெளிவை உணர்த்தும்.

Anand I Wisdom News

Updated

Explore these topics
Thanks for reading.

There’s always another perspective to discover.