Anand I Wisdom News I 22.10.26
அதிகாலை நேரத்தில் ஒரு பெண்ணை நைட்டியோடு கைது செய்யப்பட்டது தமிழக மக்கள் மத்தியிலும் அரசியலிலும் ஒரு புதிய அச்சமான தொடக்கமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, பிரசாரத்தின்போது பதாகை அகற்றப்பட்ட விவகாரம் மற்றும் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முந்தைய சம்பவங்கள் மற்றும் வழக்குகளின் அடிப்படையில், கோவையில் உள்ள அவரது இல்லத்திற்கு அதிகாலையில் சென்ற காவல்துறையினர் கார்த்திகாவையும் அவரது கணவரையும் கைது செய்து தாராபுரம் அழைத்துச் சென்றனர். ஒரு பெண் வேட்பாளருக்கு உடை மாற்றிக்கொள்ளக்கூட அவகாசம் அளிக்காமல் இரவோடு இரவாக அழைத்துச் சென்றது பொதுவெளியில் பெரும் விவாதமானது.
ஒரு பெண் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரை இத்தகைய சூழலில் கைது செய்தது பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"பெண்களின் மாண்பு காப்பாற்றப்பட வேண்டும்" என்ற நிலைப்பாட்டிற்கு இந்த நடவடிக்கை முரணாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.
இந்த விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் காலத்தில் நடைபெற்ற போராட்டத்துக்காக கார்த்திகாவை குறிவைத்து கைது செய்வது அரசியல் பழிவாங்கல் மற்றும் ஜனநாயக விரோதமானது என்றும், பொய் வழக்குகளைத் தள்ளுபடி செய்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவதை அச்சுறுத்துவது கொடுங்கோன்மை மற்றும் கண்டனத்திற்குரியது எனக் கூறி, கார்த்திகா மற்றும் அவரது கட்சியினரை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். அதிமுக தரப்பில், அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் வேட்பாளரைக் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், தேர்தல் கால வழக்குகளைப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தல் பிரசாரத்தின்போது அரசு இயந்திரம் இடையூறு செய்ததாகக் கூறி நடத்தப்பட்ட போராட்டத்துக்காக இப்போது கைது செய்வது தேவையற்றது என்று குறிப்பிட்டு கார்த்திகா உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கார்த்திகாவை அதிகாலை நேரத்தில் உடை மாற்றிக்கொள்ளக்கூட அவகாசம் அளிக்காமல் கைது செய்தது தவறான முன்னுதாரணம் என்றும், அரசியல் எதிர்ப்புகளை இத்தகைய கைது நடவடிக்கைகளால் ஒடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அச்சமூட்டும் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் அரசியல் களத்தில் தொடர்ந்தால், அது இன்றைய இளைஞர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கும், மக்கள் சேவை செய்வதற்கும் பெரிய தடையாகவும் அச்சமாகவும் மாறிவிடும். இத்தகைய அச்சமான சூழலைத் தவிர்த்து, ஜனநாயக முறைப்படி மாற்றுக் கருத்துகளை அணுகுவது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அரசியல் சூழலுக்கும் ஆட்சி முறைக்கும் மிகச்சிறப்பானதாக அமையும்.
அவருக்கு வாக்களித்த பொதுமக்களின் மத்தியிலும், குறிப்பாக பெண்கள் மத்தியிலும் எழுந்துள்ள இந்த நியாயமான கேள்விக்குத் தகுந்த நடவடிக்கையின் மூலம் நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Wisdom News



