A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

தனிமைக்குள் அடைக்கப்பட்ட மனிதன். A man confined within solitude

ஜான் பி ராயன்சமூக ஆர்வலர் | Wisdom News முதன்மை செய்தியாளர் நவீன நாகரிகம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தில் இயங்கும் இன்றைய சமூகத்தில், வளர்ச்சி என்ற சொல்லின் பொருள் மிகவும் சுருங்கிப்போயுள்ளது. ஒரு சமூகத்திற்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் ஆக்கபூர்வமா…

தனிமைக்குள் அடைக்கப்பட்ட மனிதன். A man confined within solitudeView full image

ஜான் பி ராயன்
சமூக ஆர்வலர் | Wisdom News முதன்மை செய்தியாளர்

நவீன நாகரிகம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தில் இயங்கும் இன்றைய சமூகத்தில், வளர்ச்சி என்ற சொல்லின் பொருள் மிகவும் சுருங்கிப்போயுள்ளது. ஒரு சமூகத்திற்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் ஆக்கபூர்வமான நன்மையைத் தருவதே உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும் என்ற போதிலும், இன்றைய சூழலில் பெருநிறுவனங்களின் வணிகப் பெருக்கமே ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி என்ற பெயரில் முன்னிறுத்தப்படுகிறது. இத்தகைய அவசர ஓட்டத்தில் மனிதன் தன்னுடைய இயல்பான வாழ்வியலையும், மன அமைதியையும் இழந்து தவிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளான்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ அவனது உடல்நலம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அவனது மனநலமும் ஆகும். ஆனால், நம் நாட்டில் மனநலப் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வும், அதற்கான கட்டமைப்பும் இன்னமும் தொடக்க நிலையிலேயே இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

உலகச் சுகாதார நிறுவனம் 10,000 பேருக்கு ஒரு மனநல வழிகாட்டி இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. அமெரிக்காவில் 2,800 பேருக்கு ஒரு ஆலோசகர் என்ற விகிதத்தில் வசதிகள் இருக்கும் சூழலில், இந்தியாவில் 14 முதல் 15 லட்சம் பேருக்கு ஒருவர் மட்டுமே மனநல நிபுணராக இருக்கும் மிக மோசமான நிலைமை நிலவுகிறது அதே வேளையில் ​”தமிழகத்தின் சூழலை எடுத்துக்கொண்டால், தேசிய மனநலக் கணக்கெடுப்பின்படி இங்கு மொத்த மக்கள் தொகையில் சுமார் 11% முதல் 13% வரையிலான மக்கள் (தோராயமாக 70 லட்சம் முதல் 90 லட்சம் பேர்) ஏதேனும் ஒருவகையான மனநலச் சவால்களாலும் அழுத்தங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாபெரும் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழகத்தில் போதுமான மனநல ஆலோசகர்கள் இருக்கிறார்களா என்றால், நிச்சயமாக இல்லை என்பதே கசப்பான உண்மையாகும். .”

அதேவேளையில், மனித சிந்தனையை வளர்க்கவும், உறவுகளை இணைக்கவும் பயன்பட வேண்டிய தகவல் தொடர்புச் சாதனங்கள் இன்று மனிதனைத் தனிமைப்படுத்தும் கருவியாக மாறிவிட்டன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர். ஊடகங்களில் பகிரப்படும் கருத்துகளை நன்மை, தீமை எனப் பகுத்தறிந்து உள்வாங்கும் பக்குவம் இல்லாததால், தேவையில்லாத பதற்றமும், கவலையும் மனித மனங்களில் இயல்பாகவே ஊடுருவி விடுகின்றன.

சமூக வலைதளங்களில் நடக்கும் காரசாரமான விவாதங்களும், அரசியல் முரண்பாடுகளும் மனிதர்களிடையே சகிப்புத்தன்மையைக் குறைத்து, வெறுப்புணர்வையும் மன அழுத்தத்தையும் தீவிரப்படுத்துகின்றன. ஒரு தனிமனிதனின் ஆரோக்கியமான மனநிலை என்பது அவனது குடும்பச் சூழலைச் சார்ந்தே அமைகிறது. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பாக ஆண், பெண் அல்லது தாய் மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும்போது, அக்குடும்பத்தின் குழந்தைகளும் ஆரோக்கியமான சூழலைப் பெறுகிறார்கள். இவ்வாறு தனிமனித ஆரோக்கியம் குடும்ப ஆரோக்கியமாகவும், குடும்ப ஆரோக்கியம் ஒட்டுமொத்த சமூக ஆரோக்கியமாகவும் உருவெடுக்கும் சங்கிலித் தொடர் பிணைப்பே நல்சமூகத்தின் அடித்தளமாகும். ஆனால், இன்றைய ஊடகக் கலாச்சாரம் மனிதர்களைத் தங்களுக்குள் முடங்கச் செய்து, ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத தனிமைச் சூழலை உருவாக்கியுள்ளது.

குடும்பத்தில் கிடைக்க வேண்டிய இயல்பான அரவணைப்பும், வழிகாட்டுதலும் கிடைக்காத சூழலில், குழந்தைகளும் இளைஞர்களும் தவறான பாதைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்குகிறார்கள். தனிமையையும், மன உளைச்சலையும் மறப்பதற்காக போதை பழக்கங்களுக்கும், சமூக வலைதளக் கூத்துகளுக்கும் அடிமையாகும் போக்கு அதிகரித்து வருகிறது. “படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்” என்று குழந்தைகளைச் சமூகத்தின் பிற இயல்பான உரையாடல்களிலிருந்து தனிமைப்படுத்தும் பெற்றோர் மற்றும் கல்வி முறை, அவர்களை மேலும் இறுக்கமான சூழலுக்குள் தள்ளுகிறது. இதனால் மனித உறவுகளை எதிர்கொள்ளும் திறமையற்றவர்களாக இளைய தலைமுறை உருவாகிறது.

இத்தகைய சிக்கலான சூழலிலிருந்து சமூகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளது. இக்கட்டான இந்தச் சூழலை அரசு உடனடியாகக் கவனத்தில் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டு கலைகள் போன்ற துறைகளில் அவர்கள் ஈடுபடுத்தி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கடமை உள்ளது குறிப்பாக, வருமுன் காக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டாயமாக ஒரு மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் இன்றைய இளம் தலைமுறையை மன உளைச்சல்களில் இருந்து காப்பாற்றவும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்கவும் முடியும்.

மக்களுடன் இணைந்து பணியாற்றும் ஆசிரியர்கள், பேருந்து நடத்துநர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் போன்ற பொதுமக்களுடன் அன்றாடம் தொடர்பு கொள்ளும் பணியாளர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு மாதம் ஒருமுறையாவது மனதை அமைதிப்படுத்தும் ஓரியண்டேஷன் (Orientation) மற்றும் புத்தாக்க வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்

சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் மன அழுத்தத்தைப் போக்க இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்களை ஊழியர்கள் மற்றும் அமைப்புகள் நடத்தும் பயிற்சிகளில் அனுபவித்துப் பாடும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கலை சார்ந்த, மனதிற்கு அமைதி தரும் நிகழ்வுகளையும் வகுப்புகளையும் அரசுத் துறைகளிலும், அனைத்து நிறுவனங்களிலும் தொடர்ச்சியாக ஊக்கப்படுத்த வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக, குடும்ப அமைப்பிற்குள்ளும் சமூகத் தளங்களிலும் கூட்டுச் செயல்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வது, சேர்ந்து பாட்டுப் பாடுவது, வார்த்தை விளையாட்டுகள் மற்றும் நாம் மறந்துபோன பாரம்பரியச் சிறுபிராய விளையாட்டுகளை ஒன்றாக விளையாடுவது போன்ற பயிற்சிகளை வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று முறையாவது மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பழைய விளையாட்டுகளை வீடுகளோடு நிறுத்திவிடாமல் தெருக்களிலும், பள்ளிகளிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மீண்டும் அறிமுகப்படுத்தி விளையாட முயற்சிக்க வேண்டும்.

அதேபோல், உளவியலாளர்களின் பார்வையில் மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மிகச் சிறந்த நிவாரணியாகும். வாரத்திற்கு ஒருமுறை மலைகளில் ஏறி நடைப்பயிற்சி மேற்கொள்வது, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அருகிலுள்ள பூங்காவில் குறைந்தது அரை மணி நேரமாவது செலவிடுவது, குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து அடிக்கடி சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்வது போன்றவை மனதிற்குப் பெரும் அமைதியைத் தருகின்றன. இயற்கையின் பசுமையும், திறந்தவெளி காற்றும், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசும் உரையாடல்களும் மனிதனின் நரம்பு மண்டலத்தைச் சீரமைத்து மனச் சோர்வை அகற்றிவிடும்.

மனிதர்கள் இவ்வாறு இயல்பாக ஒன்றிணைந்து பாடி, ஆடி, குழுவாக விளையாடி, இயற்கையோடு உறவாடும்போது மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரந்து, மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன் அளவைக் கணிசமாகக் குறைக்கின்றன. இதன் மூலம் மனப்பதற்றம் (Anxiety), மனச்சோர்வு (Depression), தூக்கமின்மை (Insomnia), உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன உளைச்சலால் ஏற்படும் உடலியல் சார்ந்த பல்வேறு நோய்கள் இயல்பாகவே கட்டுப்படுத்தப்பட்டு குணமாகின்றன. மனதிற்குள் உறைந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களையும், வெறுமையையும் போக்கி, புதிய புத்துணர்வை அளிக்கும் ஆற்றல் இந்த இயற்கை மற்றும் மனித பிணைப்புகளுக்கு உண்டு.

இவற்றுடன் சேர்த்து, குடும்ப அமைப்பை ஆரோக்கியமாகப் பேணுவதிலும் மன அழுத்தத்தைக் குறைப்பதிலும், கணவன்-மனைவி இடையேயான இயல்பான அன்பும் ஆரோக்கியமான தாம்பத்திய உறவும் ஒரு இயற்கையான மன அமைதி தரும் காரணியாக அமைகிறது என்பதும் உளவியல் ரீதியான உண்மையாகும்.

அதேவேளையில், சமூகத்தில் நியமிக்கப்படும் உளவியலாளர்கள் வெறும் புத்தக அறிவை மட்டும் கொண்டவர்களாக இல்லாமல், மக்களின் வாழ்வியல் சூழல், பொருளாதாரம் மற்றும் நடைமுறைச் சிக்கல்களை ஆழமாகப் புரிந்துகொண்ட நடைமுறைச் சிந்தனையாளர்களாகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசும், தனிநபர்களும் சமூகப் பொறுப்போடு செயல்பட்டு, மனநல வழிகாட்டலின் முக்கியத்துவத்தையும் மனித பிணைப்புகளின் மதிப்பையும் உணர்ந்து செயல்படும்போது மட்டுமே, மனித மனம் இறுக்கத்திலிருந்து விடுபட்டுத் தெளிவான மனநிறைவோடும் அமைதியோடும் வாழும் ஒரு ஆரோக்கியமான சமுதாயம் சாத்தியமாகும்.

Updated

Explore these topics
Thanks for reading.

There’s always another perspective to discover.