விஸ்டம் நியூஸ் (Wisdom News)
இராமேசுவரம்: கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது தொடர்பான 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை எதிர்த்து, கடந்த 2008-ல் ஏ.கே.செல்வராஜ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு காலகட்டங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது மத்திய அரசு சார்பில், இது இரு நாடுகள் தொடர்புடைய விவகாரம் என்பதால் உச்ச நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், பழைய ஒப்பந்தங்களை மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அரசு விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி சஞ்சய் குமார், இலங்கையின் சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணங்களால் மீன்கள் அந்நாட்டு கடல் பகுதிக்கு அதிகமாக இடம்பெயரக்கூடும் என்றும், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லாதவாறு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்புத் தலைவர் நல்லதம்பி, 1974-ல் சட்டத்துக்குப் புறம்பாக கச்சத்தீவை இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கியது என்றும், மத்திய அரசு செய்த அந்தத் தவறால் கடந்த 52 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் தொடர் துன்பங்களை அனுபவித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இதுவரை இலங்கை கடற்படையால் 560-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் பறிபோயுள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய மத்திய அரசு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக அறிக்கை சமர்ப்பிப்பதை வன்மையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் களத்தின் உண்மைநிலையை அறியாமல் மீனவர்கள் தொடர்பாகக் கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது என்றும், இந்திய மீனவர்கள் தரப்பு நியாயங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பிறகே கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விஸ்டம் நியூஸ் (Wisdom News) — செய்திகள் உடனுக்குடன்…




