Anand – Wisdom News
இது போன்ற ஒரு பேரழிவை இந்தச் சமூகம் பார்த்திருக்காது என்ற அளவுக்கு, 2026–27ஆம் ஆண்டுக்கான எல் நினோ நிகழ்வு உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காலநிலை ஆய்வாளர்களின் கணிப்புகளின்படி, தற்போது உருவாகி வரும் எல் நினோ வலுப்பெற்று, 2026ஆம் ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும். இதன் தாக்கம் பல பகுதிகளில் 2027ஆம் ஆண்டு வரையிலும் நீடிக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.
எல் நினோவை வெறும் சாதாரண வறட்சி நிகழ்வாகக் கடந்து செல்ல முடியாது. இது உலகின் பல்வேறு பகுதிகளில் வறட்சி, கனமழை, வெள்ளம், வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் விவசாய உற்பத்தி பாதிப்பு போன்ற பல்வேறு பேரிடர் அபாயங்களை ஒரே நேரத்தில் அதிகரிக்கக்கூடிய ஒரு ‘பன்முக அபாய பெருக்கி’ (Risk Multiplier) எனக் கருதப்படுகிறது. குறிப்பாக ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடுகள் மற்றும் சமூகங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
பொதுவாக, பசிபிக் பெருங்கடலில் வீசும் வியாபாரக் காற்றுகளின் மாற்றம் மற்றும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் உயர்வு ஆகியவை எல் நினோ நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும். இதன் காரணமாக உலகளாவிய வளிமண்டலச் சுழற்சியிலும் மழைப்பொழிவு முறையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு பகுதியில் கடுமையான வறட்சி உருவாகும் நிலையில், மற்றொரு பகுதியில் அதிகப்படியான மழை மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடும். இதன் தாக்கம் விவசாயம், குடிநீர், உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் என பல துறைகளிலும் எதிரொலிக்கக்கூடும்.
இந்த ஆண்டின் எல் நினோ குறித்து உலக நாடுகள் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. ஆசியாவின் பல பகுதிகளில் வறட்சி, வெப்ப அலைகள், காட்டுத்தீ, நீர்வளப் பற்றாக்குறை மற்றும் விவசாய உற்பத்தி பாதிப்பு போன்ற அபாயங்கள் குறித்து எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் நீர்வளப் பற்றாக்குறை மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல், சீனா, தைவான், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளும் வெப்ப அலைகள், புயல்கள், வெள்ளம் மற்றும் விவசாய பாதிப்புகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றன.
உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வின்படி, 2026–27 எல் நினோவின் தாக்கத்தால் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொள்ளும் 45 நாடுகளில் கூடுதலாக சுமார் 4.9 கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளப்படக்கூடும். இதன் விளைவாக அந்த நாடுகளில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை சுமார் 22 சதவீதம் அதிகரித்து 27.4 கோடியாக உயரக்கூடும் என WFP கணித்துள்ளது.
இந்த சூழலில், பேரிடர் ஏற்பட்டு முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, பேரிடர் ஏற்படுவதற்கு முன்பே தயாராவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உலக உணவுத் திட்டம் வலியுறுத்துகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ஒரு அமெரிக்க டாலரும், பின்னர் ஏற்படக்கூடிய இழப்புகள் மற்றும் அவசரகாலச் செலவுகளில் 7 டாலர் வரை சேமிக்க உதவக்கூடும் என WFP தெரிவித்துள்ளது.
இந்த உலகளாவிய அபாயத்தை எதிர்கொள்ள இந்தியாவிலும் வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர்கள், நீர்வளப் பாதுகாப்பு மற்றும் முன்கூட்டிய பேரிடர் தயார்நிலை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக எல் நினோவால் விவசாயம் மற்றும் மழைப்பொழிவு பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மாற்றுப் பயிர்கள் மற்றும் குறுகிய காலப் பயிர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும் எல் நினோ தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் எல் நினோவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், குறுகிய காலப் பயிர்களைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் எல் நினோவின் தாக்கத்தை எதிர்கொள்ள வறட்சி மட்டுமல்லாமல் வெள்ளம், வெப்ப அழுத்தம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் கடலோரப் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அபாயங்களையும் ஒருங்கிணைத்து எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அரசுகள் எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் பேரிடர் தயார்நிலை முழுமை பெறாது. எல் நினோ என்பது வானிலை ஆய்வாளர்கள் அல்லது அரசுத் துறைகள் மட்டுமே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் அல்ல. அதன் தாக்கம் உணவு, தண்ணீர், விவசாயம், சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை வரை சென்றடையக்கூடியது.
எனவே, பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எல் நினோ மற்றும் மாறிவரும் காலநிலைச் சூழல் குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பேரிடர் நேரத்தில் என்ன செய்ய வேண்டும், தண்ணீரை எவ்வாறு சேமிக்க வேண்டும், வெப்ப அலைகளிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், விவசாயத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் மக்களுக்கு எளிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மக்களின் விழிப்புணர்வும் ஒன்றிணைந்தால்தான் எதிர்கால காலநிலைப் பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான தற்காப்பு அரண் உருவாகும். எல் நினோ ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாக இருந்தாலும், அதன் தாக்கங்களை எதிர்கொள்ளும் சமூகத்தின் தயார்நிலைதான் அதன் பாதிப்பை எந்த அளவுக்கு குறைக்க முடியும் என்பதை தீர்மானிக்கும்.
எனவே, எல் நினோ குறித்து அச்சத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல; அறிவியல் அடிப்படையிலான தகவல்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மக்கள் பங்கேற்பையும் ஒருங்கிணைத்து ஒரு பெரிய விழிப்புணர்வு இயக்கத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது.



