தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 22வது மாவட்ட சந்திப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்தும் நோக்கில், 2025 ஜூன் 19 வியாழக்கிழமை அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் அருட்பணி ஜோ அருண் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக அமைச்சர் கே.என். நேரு, தலைவர் அருட்பணி ஜோ அருண் அவர்களை வரவேற்று நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த சிறுபான்மை மக்களை நேரில் சந்தித்த ஆணையத் தலைவர், அவர்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான பரிந்துரைகளை அரசுத் தரப்புக்கு வழங்கியுள்ளார்.

கல்வி நிறுவனங்கள், கல்லறை வசதிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், சிறுபான்மை சமூகத்திற்குரிய உரிமைகள் புறக்கணிக்கப்படாமல் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இந்நிகழ்வை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கினார். நிகழ்வில், மாவட்டத்தில் இயங்கும் பல சிறுபான்மை பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் சிறப்பாக மேற்கொண்டு, நிகழ்வின் வெற்றிக்கு பங்களித்தனர்.

இந்நிகழ்வு, சிறுபான்மையினர் சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து நேரடியாக அதிகாரிகளிடம் அணுகும் ஒரு வாயிலாக அமைந்தது
