இன்றைய நவீன உலகில், உளவியல் சார்ந்த சொற்களான பாசிட்டிவ் வைப்ரேஷன், நெகட்டிவ் எனர்ஜி, டாக்சிக் மக்கள் (Toxic People) போன்றவை அன்றாடப் பேச்சுகளில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவரின் கருத்துக்களோ அல்லது நடத்தையிலோ சற்று மாறுபட்ட ஒன்று தெரிந்தால், உடனடியாக அவர்களை “நெகட்டிவ்” என்று முத்திரை குத்தி விலகுகிறோம். இது ஒருபுறம் நம்மை ஒரு பாதுகாப்பு வட்டத்தில் வைத்துக் கொள்கிறது என்றாலும், மற்றொரு புறம் மனித உறவுகளையும், நம் சொந்த சிந்தனையின் வளர்ச்சியையும் தடுக்கும் அளவுக்கு சென்று விடுகிறது.
ஒருவர் எந்த ஒரு தருணத்தில் எதிர்மறையாக கருத்து தெரிவிப்பது, அவ்வப்போது அவர்களின் நிஜ நிலையை பிரதிபலிக்காது. அவர்கள் அனுபவித்த துன்பங்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். உதாரணமாக, ஒரு நண்பர் வேலை குறித்த சவால்கள் பற்றி பேசும்போது, நாம் உடனடியாக “அவர் டாக்சிக் ஆள்” என்று நினைத்து விலகுவோம். ஆனால் இது, அந்த மனிதனின் முழு ஆளுமையையும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் தீர்மானித்துவிடும் மோசமான பழக்கமாகிறது.

அமுதா மற்றும் கவிதா என்ற இரண்டு தோழிகள் இருந்தனர். அமுதா எப்போதும் உற்சாகமாக, நேர்மறை எண்ணங்களோடு இருப்பவள். கவிதா சற்றே அமைதியானவள். ஒருமுறை அமுதா தனது புதிய வணிக யோசனையை மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்தாள். கவிதா அதில் சில நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டினாள். அமுதா இதைக் கேட்டு வெகுளியுடன் “நீ எப்போதும் நெகட்டிவாகப் பேசுகிறாய்” என்று கூறி, அவளிடம் இருந்து விலக ஆரம்பித்தாள். ஆனால் காலப்போக்கில், கவிதா கூறிய அச்சங்கள்தான் உண்மையாகி, அமுதா சிக்கலில் சிக்கினாள். அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது — கவிதா எதிர்மறையாக பேசவில்லை; அவள் சொல்லும் விமர்சனம், அன்பின் வெளிப்பாடாகவும், திட்டத்தின் நன்மைக்காகவும் இருந்தது.
இது போன்ற அனுபவங்கள் மனித உறவுகளில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. நமக்குத் தற்காப்பாக இருக்கும் ஒரு வார்த்தை, மற்றொருவருக்குத் துன்பமாக மாறுகிறது. நமக்குப் பிடிக்காத கருத்துகளை உடனடியாக “நெகட்டிவ்” என்று கூறுவதால், நல்லதொரு நண்பரையும், அறிவுரையையும், அனுபவங்களையும் நாம் இழக்க நேரிடும். ஒரே மாதிரியான, எப்போதும் உற்சாகத்துடன் பேசும் மனிதர்கள் மட்டுமே ஒருகுழுவில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, மாறுபட்ட எண்ணங்களை, புதிய சிந்தனைகளை நசுக்கும் நிலையை உருவாக்குகிறது.
ஒருவர் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றால், அது அவர்களின் தனிப்பட்ட உளவியல் நிலையின் வெளிப்பாடாக இருக்கலாம். அவர்கள் ஆதரவை தேடுகிறார்கள் — ஒதுக்கப்படுவதல்ல. அதனால், ஒருவர் ஏன் அந்தக் கருத்தை சொல்கிறார்கள் என்பதை ஆழமாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். “ஏன் அப்படி நினைக்கிறாய்?” என்ற ஒரு கேள்வி, அவர்களைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். ஒருவரது சில வார்த்தைகளோ அல்லது செயல்களோ, அவர்களின் முழுமையான ஆளுமையை பிரதிபலிக்காது என்பதையும் உணர வேண்டும்.
எதிர்மறையான மனநிலையுடன் பேசுபவர்கள் எல்லோருமே நம்மை பாதிக்கக்கூடியவர்கள் என்று தீர்மானித்து விலகி நிற்பது உறவுகளுக்கு இடையே ஒரு மெல்லிய சுவரை கட்டுகிறது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு மிகவும் தேவையான ஆலோசனையைக் கொடுப்பவர்களாக இருக்கலாம். அவர்களை புரிந்துகொள்வதற்கும், அன்போடு அணுகுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அதே சமயம், சிலர் தொடர்ந்து நம்மை மனநல ரீதியாக பாதிக்கக்கூடிய வகையில் நடந்தால், அவர்கள் தொடர்பில் நம்முடைய எல்லைகளை அமைக்கவும் தைரியம் தேவை.

உளவியல் சொற்கள் நம் மனநலத்தைப் பாதுகாப்பதற்கான கருவிகள் மட்டுமே. ஆனால் அவற்றை ஒரு சாடைபோல் பயன்படுத்தி, மனித உறவுகளை வெட்டி எறியக்கூடாது. ஒவ்வொரு மனிதனும் பல பரிமாணங்களை கொண்டவர். ஒரு சிறு எதிர்மறையான பார்வை கூட, ஒரு பெரிய தவறைத் தடுக்கும் எச்சரிக்கையாக இருக்கலாம். எனவே, மனிதனை ‘நெகட்டிவ்’ என்ற ஒற்றை வார்த்தையில் அடைத்து விடாமல், அவருடைய மனநிலையும், பின்புலமும், நம்மிடம் காட்டும் உணர்வுகளும் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் திறன் நம்மிடம் வளர வேண்டும். அன்பும் புரிதலும்தான் மனித உறவுகளின் நீடித்த பாலமாக இருக்க முடியும்.