இந்த வழக்கில் யாராவது சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லையென தடயவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். “இன்னொரு நபர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என சில விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். குற்றம்சாட்டப்பட்டவரின் தொலைபேசிதான் இந்த வழக்கில் முக்கியமான தடயவியல் சாட்சியம். அந்த போன் தடவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த போனில் என்னென்ன விஷயங்கள் இருந்தன, அவருடைய சமூகப் பழக்க வழக்கங்கள் என்னென்ன, சமூக வலைதளங்கள் எதிலெல்லாம் அவர் இருக்கிறார் என்று ஆராயப்பட்டது. சம்பவம் நடந்த 23ஆம் தேதி அந்த போனில் என்னவெல்லாம் நடந்தது என்றும் ஆராயப்பட்டது. சம்பவ நேரத்தில் அந்த போன் ‘ஃப்ளைட் மோடில்’ (தொடர்புகொள்ள முடியாத நிலையில்) இருந்தது என்பதை தடய அறிவியல் ஆய்வகம் நீதிமன்றத்தில் பதிவுசெய்தது.
இதனை தடயவியல் நிபுணர் நீதிமன்றத்தில் வாய்மொழி சாட்சியமாகவும் அளித்தார். அந்த போனில் ஏர்டெல் சிம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏர்டெல்லின் நோடல் அதிகாரி நீதிமன்றத்திற்கு வந்து, மே 23ஆம் தேதி மாலை 6.29 மணிக்குத்தான் அந்த போனுக்கு முதல் அழைப்பு வந்தது என்றும் அதற்குப் பிறகு 8.52வரை எந்த அழைப்பும் வரவில்லையென்றும் சாட்சியமளித்தார். 8.52க்கு பிறகுதான் அவருக்கு ‘மிஸ்ட் கால்கள்’ குறித்த குறுஞ்செய்தி வந்தது.
பிஎன்எஸ்சின் 358வது பிரிவின்படி, இன்னொரு குற்றவாளி இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அந்த நபரையும் இணைத்து நீதிமன்றமே விசாரணை நடத்தலாம். ஒரே ஒருவர்தான் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால்தான், இவருக்கு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. குற்றவாளி அந்தப் பெண்ணை அச்சுறுத்துவதற்காகவும் தானும் பல்கலைக்கழக ஊழியர் எனக் காட்டுவதற்காகவும்தான் போனில் பேசுவதைப் போல நடித்தார்” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம் அளித்தார்.